நான் தென்னிந்திய நந்திதா தாஸா? - 'அருவி' அதிதி பாலன்

By செ. ஏக்நாத்ராஜ்

‘அருவி’யில் தனித்துவப் பெண்ணை அடையாளம் காட்டிய அதிதி பாலன், தங்கர்பச்சானின் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தில், கண்மணி ஆகி இருக்கிறார். மனித உணர்வுகளை இயல்பாக வெளிக்கொண்டு வரும் தங்கர்பச்சானின் இந்தப் படத்தில், பாரதிராஜா, கவுதம் வாசுதேவ் மேனன் போன்ற பெரும் இயக்குநர்களுடன் நடித்தது சிறந்த அனுபவம் என்கிறார் அதிதி.

“இந்தப் படத்துல அழுத்தமான கேரக்டர்ல நடிக்கிறேன். போலீஸ்ல உயர்ந்த பதவியில் இருந்துட்டு பிறகு சாதாரண வாழ்க்கைக்கு இறங்கும் பாத்திரம். வழக்கமா தங்கர் சார் படங்கள்ல இருக்கும் எமோஷனல் விஷயங்கள் இதிலும் இருக்கும். ஒரு நடிகையா இது எனக்கு முக்கியமான படம். நடிப்பின் நுணுக்கங்களை பாரதிராஜா,கவுதம் மேனன் கிட்ட இருந்து கத்துக்கிட்டேன்” என்று தொடங்குகிறார் அதிதி.

உங்க கேரக்டர், உண்மைச் சம்பவப் பாதிப்புன்னு சொன்னாங்களே?

இது தங்கர்பச்சான் எழுதிய சிறுகதையில இருந்து உருவாகும் படம். எனக்கு ஜோடின்னு யாருமில்ல. ஹீரோன்னா, அது பாரதிராஜா சார்தான். அவர் நீதிபதியா நடிச்சிருக்கார். கவுதம் மேனன் வழக்கறிஞர். யோகிபாபுவுக்கும் முக்கியமான கேரக்டர். சாதாரண ஒருத்தர் வாழ்க்கையில நடக்கிற விஷயங்கள்தான் கதை. முழுவதும் உண்மைக் கதையான்னு எனக்குத் தெரியலை. என் கேரக்டர்ல ஒரு பகுதி, உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தியதுதான்.

தங்கர்பச்சான் இயக்கத்துல நடிச்ச அனுபவம் எப்படி இருந்தது?

முதல்ல நான் பயந்தேன். ரொம்ப கண்டிப்பா இருப்பாரோன்னு நினைச்சேன். ஆனா அப்படியில்லை. நடிக்கறதுக்கு ரொம்ப சுதந்திரம் கொடுத்தார். எளிமையா நடந்துகிட்டார். எனக்கு பெரிய பெரிய டயலாக் இருந்ததால, ஒவ்வொரு வசனத்தையும் ஏன் இப்படி வச்சிருக்கேன்னு ரொம்ப விளக்கமா சொல்லிக் கொடுத்தார். அவர் சொன்னபடி நடிச்சேன்.

தமிழ்ல ஏன் அதிகப்படங்கள் பண்ணலை?

நான் நடிக்க தயாரா இருக்கேன். ‘அருவி’ படம் முடிஞ்சதும் ஒரே மாதிரியான கதையா வந்தது. பாதிக்கப்பட்ட பெண், பழிவாங்கும் பெண் அப்படிங்கற கதைகளா வந்தது. அதனால ஏத்துக்கலை. என்னை எல்லாரும் ஒரு சீரியஸ் கேரக்டர்ல பார்த்திட்டாங்க அப்படிங்கறதால, அந்த மாதிரி கதைகள் வந்ததுன்னு நினைக்கிறேன். அதுமட்டுமில்லாம, வாய்ப்புகள் அதிகமா வரலை.

நல்லா தமிழ்ப் பேசறீங்க, சிறப்பா நடிக்கிறீங்க... பிறகு ஏன் வாய்ப்பு வரலை?

என்னை மார்க்கெட் பண்ணிக்கிறதுல நான் ரொம்ப மோசம்னு நினைக்கிறேன். அதோட, சும்மா வந்துட்டு போற கேரக்டரை நான் விரும்பறதும் இல்லை. அஞ்சு நிமிஷம் வர்ற கேரக்டராஇருந்தாலும் கதையில அது அழுத்தமா இருக்கணும்னு நினைப்பேன். அதனால, வாய்ப்பு வரலையோன்னு நினைக்கிறேன். அதுமட்டுமில்லாம, இந்தக் கேள்வியை இயக்குநர்கள்கிட்டதான் கேட்கணும்.

உங்களை, தென்னிந்திய நந்திதாதாஸுன்னு தங்கர்பச்சான் சொல்லியிருக்காரே?

எனக்கு அது ஆச்சரியமா இருந்தது. என்ன சார், இப்படி சொல்லிட்டீங்கன்னு தயங்கியபடி கேட்டேன். அவர் அப்படித்தான்னு சொன்னார். அது அவர் கருத்து. ஒரு நடிகையா அதை நான் கேட்டுக்கறேன்.

மலையாளத்துல சில படங்கள் நடிச்சிருந்தீங்களே?

பிருத்விராஜோட ‘கோல்டு கேஸ்’ படத்துலநடிச்சிருந்தேன். நிவின் பாலியோட ‘படவெட்டு’ல நடிச்சேன். இப்ப இன்னொரு படத்துல நடிச்சிருக்கேன். அது பற்றி தயாரிப்பு தரப்புல இருந்து அறிவிப்பு வரும். மலையாள சினிமாவுல நடிக்கறதும் சிறந்த அனுபவத்தைக் கொடுக்குது.கத்துக்க முடிஞ்சது.

‘சாகுந்தலம்’ படத்துல சின்ன கேரக்டர் பண்ணியிருந்தீங்களே?

நான் பரதநாட்டிய டான்சர். ‘சாகுந்தலம்’ கதை எனக்குத் தெரியும். என் கேரக்டர் எனக்குப் பிடிச்சிருந்தது. அதனால நடிச்சேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE