யாத்திசை: திரை விமர்சனம்

By செய்திப்பிரிவு

ஏழாம் நூற்றாண்டில் சேர, சோழ அரசர்களை வென்று, சோழ நாட்டுக்கு வந்து ஆட்சி செய்கிறான் பாண்டியன் ரணதீரன். அவனது வெற்றிக்குக் காரணமாக இருந்தவர்களில் எய்னர் எனும் பழங்குடிகள் குழுவும் ஒன்று. ஆனால், ரணதீரன் வெற்றிக்குப் பின்னர், பாலை நில நாடோடி வாழ்க்கைக்குத் தள்ளப்பட்ட அக்குழுவிலிருந்து அரச அதிகாரத்தைக் கைப்பற்றக் கிளம்புகிறான் கொதி எனும் மாவீரன். தனது குழுவை ஒன்று திரட்டும் அவன், தஞ்சைக் கோட்டையைத் தாக்கிக் கைப்பற்றுகிறான். திகைக்கும் ரணதீரன், பள்ளிப்படை பழங்குடிகளின் உதவியைப் பெற்று தஞ்சைக் கோட்டையை மீட்க வருகிறான். இதை சற்றும் எதிர்பாராத கொதி, எடுத்த முடிவு என்ன? கொதியும் ரணதீரனும் போர்க்களத்தில் சந்தித்தார்களா இல்லையா என்பது மீதிக் கதை.

‘மந்திரி குமாரி’ தொடங்கி மணி ரத்னத்தின் கனவுக் காவியமான ‘பொன்னியின் செல்வன்’ வரை அரசர்களின் வாழ்க்கையை ‘ரொமாண்டிசைஸ்’ செய்யும் வரலாற்றுப் புனைவு சினிமாக்கள், நாயகன் - வில்லன் எனும் சட்டகத்தையே ரசிகர்களுக்கு அதிகமும் கற்பித்து வந்திருக்கின்றன. இதைத் திரைக்கதை ரீதியாக ’யாத்திசை’ தகர்த்திருக்கிறது. ரணதீரன் - கொதி ஆகிய இருவரையுமே கதாநாயகன் என்கிற அந்தஸ்தில் பொருத்தாமல், அதிகாரத்தின் மீது பேராசை கொண்ட ‘சூழல் கைதி’களாகப் படைத்திருக்கிறார் இயக்குநர் தரணி ராஜேந்திரன். குறிப்பாக, மகனை ஒருநாள் அரசனாக்க வேண்டும் என்கிற பச்சை சுயநலம் கொண்டிருக்கும் கொதி, அதை வெளிக்காட்டாது, தனது சொந்த மக்களை போர்க்களத்தில் பலியாக்குகிறான்.

கொதியின் சுயரூபத்தை அறிந்துகொண்டு துணிந்து கேள்வி கேட்கும் ஒருவனைச் சகோதரக் கொலை செய்கிறான். ரணதீரனோ போர்க்களத்தில் பின்பற்ற வேண்டிய அறத்தை காற்றில் பறக்கவிட்டு, தன்னை எதிர்ப்பவன் பின்னாலிருக்கும் கடைசி மனிதன் வரை கொன்றொழிக்கச் சொல்கிறான். திரைக்கதையின் மற்றொரு முக்கிய அம்சம் இத்திரைக்கதையில் எந்தவொரு கதாபாத்திரத்தையும் ‘ரொமாண்டிசைஸ்’ செய்யாதது! கதைக் களத்தின் காலகட்டத்துக்கு வலுசேர்க்கும் விதமாக திரைக்கதையில் இடம்பெற்றுள்ள தேவரடியார் பெண்களைக் கூட ‘ரோமாண்டிசைஸ்’ செய்யாமல் அதிகாரத்தின் காலடியில் வாடிச் சுருண்டுபோகும் தும்பைச் செடிகளாகச் சித்தரித்திருக்கிறார்.

பட உருவாக்கத்தில் துணிச்சலான முயற்சியாக உரையாடலில் சங்கத் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தியிருப்பதை பாராட்டலாம். ஆனால், உரையாடலைப் புரிந்துகொள்வதில் ‘சட்டக சினிமா’வுக்குப் பழகிய எளிய பார்வையாளர்களுக்கு இது அதிர்ச்சியாகவும் ஏமாற்றமாகவும் இருக்கும்.
தனது மக்களை அரசியல்படுத்தாத கொதி கதாபாத்திரத்தை ஒரு போராளியாக நினைத்துக்கொண்டு அக்கதாபாத்திரத்தைப் பின் தொடரும் ரசிகர்களுக்கு அது ஏமாற்றத்தை அளிக்கக் கூடும். அதேநேரம் அதிகார ஆசை கொண்ட அனைவரும் ‘எதிர்மறை’ கதாபாத்திரங்களே என்கிற புரிதல் கொண்டுள்ள பார்வையாளர்களை இப்படம் வெகுவாகக் கவரும்.

அதிகாரத்தைத் தக்க வைப்பவனுக்கும் அதை அடைய நினைப்பவனுக்குமான மோதலே படத்தில் முதன்மை பெறுவதால், போர்க்கள வன்முறைக் காட்சிகள் மிகுந்திருப்பதால், சிறார் மற்றும் பெண் பார்வையாளர்களுக்கு இப்படம் ஏற்ற தெரிவல்ல. ஏழாம் நூற்றாண்டை புனைவாக மீள் உருவாக்குவதில் உரையாடல் மொழியைத் தாண்டி, ரஞ்சித் குமாரின் கலை இயக்கம் மிகப்பெரிய பங்களிப்பைக் கொடுத்திருக்கிறது. அக்காலகட்டத்தில் பழங்குடி குழுக்களின் ஆடை, அலங்காரம், அரசன், மக்கள், தேவரடியாரின் ஆடை அலங்காரம் ஆகியன காலகட்டத்தைப் புனைவின் வழி பார்வையாளர்களுக்கு நெருக்கமாக்குகின்றன. எய்னர் இனக்குழுவின் ‘கொதி’யாக சேயோனும் பாண்டியன் ரணதீரனாக சக்தி மித்ரனும் உடல்மொழி, நடிப்பு இரண்டிலுமே ஏமாற்றம் அளிக்காத நட்சத்திரத் தேர்வுகள்.

இவர்களுடன் குருசோம சுந்தரம், முற்றிலும் அடையாளம் காண முடியாத சாமியாடி கதாபாத்திரத்தில் வந்து கவர்கிறார். பள்ளிப்படை இனக்குழுவின் தலைவியாக வரும் சுபத்ரா, தேவரடியார் பெண்ணாக வரும் ராஜலட்சுமி ஆகியோரும் இயக்குநர் கோரியதைக் கொடுத்திருக்கிறார்கள். மக்களின் வாழ்விடங்களையும் அவர்களது வாழ்க்கை முறையையும் காட்டாதது இப்படத்தின் பெருங்குறை. கதை பெரும்பாலும் காடு, மலை, அதையொட்டிய போர்க்களக் காட்சிகள் என பயணப்படுவதில் ஒளிப்பதிவாளர் அகிலேஷ் காத்தமுத்துவின் பங்களிப்பு படத்துக்கு பிரம்மாண்ட ‘லுக்’கைக் கொடுத்திருக்கிறது. அதற்கு இணையாக போர்க்களக் காட்சிகளுக்கு சர்வர்த்தியின் பின்னணி இசை தந்திருக்கும் விளைவு வன்முறையின் தீவிரத்தை உணர்த்துகிறது.

ஒரு திரைப்படத்தை எப்படிப் பார்ப்பது என்கிற பயிற்சியை மேம்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை ரசிகர்களிடம் கோரும் படைப்பாக வந்திருக்கிறது ‘யாத்திசை’.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE