யாத்திசை Review: கவனத்துக்குரிய களமும் காட்சிகளும் தரும் திரை அனுபவம் எப்படி?

By கலிலுல்லா

அதிகாரத்தை அடைய பேரரசை எதிர்க்கத் துணியும் சிறு இனக்குழு ஒன்றினால் நடத்தப்படும் போராட்டத்தின் ரத்த வாடைதான் ‘யாத்திசை’.

7-ஆம் நூற்றாண்டின் பாண்டிய அரசன் அரிகேசரி. இவரது மகன் ரணதீரன் (ஷக்தி மித்ரன்). இந்த பாண்டிய பேரரசுக்கு எதிராக சேரர்கள் போரிடுகிறார்கள். அவர்களுடன் சோழர்கள் மற்றும் எயினர்கள் உள்ளிட்ட சிறுகுழுக்களும் இணைந்து உதவி புரிய, போரை வழிநடத்தும் ரணதீரன் தலைமையிலான பாண்டிய படை வெற்றிபெறுகிறது. இதன் எதிரொலியாக சேரர்கள் நாடு கடத்தப்பட, உதவியாக வந்த சோழர்கள் காட்டுக்குள் தலைமறைவாகின்றனர். இதில் பாண்டியர்களால் பாலை நிலத்திற்கு விரட்டப்பட்ட எயினர் குழுவைச் சேர்ந்த வீரன் கொதி (சேயோன் ) தனது குழுவைத் திரட்டி, சோழர்கள் உதவியுடன் ரணதீரனை வெல்ல முடிவு செய்கிறான். இறுதியில் ரணதீரனை கொதி வென்றானா? பாண்டிய பேரரசு வீழ்ந்ததா? - இதுதான் திரைக்கதை.

பேரரசுக்குள் அதிகாரத்தை அடைய நிகழும் சூழ்ச்சிகளும் துரோகங்களுமாகவும் அல்லது இரு பெரும் பலம்பொருந்திய அரசப்படைகளுக்கு இடையிலான சண்டைகளாகவுமே வரலாற்று புனைவு படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், எயினர் குடி என்ற சிறிய இனக்குழு ஒன்று அதிகாரம் பொருந்திய பேரரசை எதிர்த்து ‘அதிகாரம்’ பெற்றதா என்ற சுவாரஸ்யமான ஒன்லைனை பிரமாண்ட காட்சி அமைப்புகளுடன் படமாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் தரணி ராசேந்திரன்.

மூளும் போர்களுக்கும், வீழும் உயிர்களுக்கும், அரச மமதைக்கும் அடிப்படை ‘அதிகாரம்’ தான். அரசுகள் மாறக்கூடியது. அதிகாரம் மட்டுமே நிலையானது என்பதை நிறுவுகிறது படம். கதை கோரும் பிரமாண்டத்தையும், அதற்கேற்ற காட்சியமைப்பையும் எந்த சமரசமுமின்றி பதிவு செய்த விதம் களத்தை சுவாரஸ்யமாக்குகின்றன.

பல்வேறு இனக்குழுவைச் சேர்ந்தவர்களின் தனித்துவமான பழக்கவழக்கங்கள், அவர்களின் கலாச்சார வழிபாட்டு முறைகளின் சித்தரிப்பு, அவர்கள் வாழும் நிலபரப்பு, வீட்டு அமைப்பு, மண்பாத்திரங்கள், உணவுமுறைகள் உள்ளிட்டவற்றின் மூலம் அவர்களின் உலகில் நாமும் பிரவேசிக்கும் உணர்வு, காட்சிகளுக்குள் ஒன்ற உதவுகிறது.

குறிப்பாக, எயினர் குல கடவுள் கொற்றவைக்கான சடங்குகளும், உயிர் பலி கொடுக்கும் முறையும் சுவாரஸ்யம் கூட்டுகின்றன. போலவே பழந்தமிழரின் மொழியை கூடுதல் சிரத்தையுடன் பதிவு செய்திருந்தது, அம்மக்களில் பெரும்பாலானோர் தங்கள் உடலை துணிக்கு பதிலாக ஆபரணம் மற்றும் நகைகளால் மூடியிருப்பது, தேவரடியார் முறையின் அவலம், பேரரசு தொடங்கி சிறு இனக்குழு வரை ஆணாதிக்க சமூகமாக இருந்ததை காட்சிப்படுத்தியிருந்த நுணுக்கமான அணுகுமுறை கவனிக்க வைக்கிறது.

ஷக்தி மித்ரன், சேயோன் இருவரின் அழுத்தமான ஆக்ரோஷமான நடிப்பும், அவர்களின் இறுதி சண்டைக்காட்சியும் அறிமுக நடிகர்கள் என்ற சாயலிலிருந்து விலகி நிற்கின்றன. ராஜலட்சுமி, குரு சோமசுந்தரம், சுபத்ரா, சமர், வைதேகி அமர்நாத் உள்ளிட்டோரின் கதாபாத்திரத்திற்கு தேவையான யதார்த்த நடிப்பு படத்திற்கு பெரும் பலம்.

ரணதீரனுக்கு எதிரான முதல் சண்டைக்காட்சி தொடங்கி போர்க்களத்துக்கான விறுவிறுப்பு என படம் நெடுகிலும் சக்கரவர்த்தியின் பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரூட்டுகிறது. அகிலேஷ் காத்தமுத்துவின் பிரமாண்ட ஒளிப்பதிவு ப்ரேமுக்கு ப்ரேம் அழகியலுடனும், போர்க்காட்சிகளை படமாக்கியிருக்கும் விதமும் ரசிக்க வைக்கின்றன.

சில இடங்களில் சிஜி காட்சிகள் அப்பட்டமாக தெரிகிறது. படத்தில் எயினர் சமூகத்துக்கான வழக்கொழிந்த மொழியை பதிவு செய்திருப்பது கதைக்கு எந்த அளவிற்கு பயனளிக்கிறது என்பது கேள்விக்குறி. காரணம் அவர்கள் பேசும் காட்சிகளில் ஒவ்வொருமுறையும் சப்டைட்டில் பார்க்கும் உணர்வு மேலோங்குகிறது. ‘அதிகாரம்’ தான் எல்லாவற்றிற்கும் அடிப்படை என்பதை வெறும் வசனங்களாக சொல்லியிருந்ததும், அதற்கான அழுத்தமான காட்சிகள் இல்லாததும் பலவீனம்.

இப்படிச் சில குறைகள் இருப்பினும், புது வகையான திரையனுபவத்தை யதார்த்தமான காட்சிகளுடன் சொல்ல முனைத்திருக்கும் விதத்தில் ‘யாத்திசை’ கவனம் பெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

மேலும்