“அயோத்தி படம் மீது எனக்கு அதீத நம்பிக்கை இருந்தது” - நடிகர் சசிகுமார்

By செய்திப்பிரிவு

“அயோத்தி படம் மீது எனக்கு அதீத நம்பிக்கை இருந்தது. இந்தப் படத்தின் வெற்றியை மக்கள் தங்களுக்கான வெற்றியாக எடுத்துகொண்டாடினார்கள்” என நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.

‘அயோத்தி’ படத்தின் 50-ஆவது நாள் வெற்றிக் கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சசிகுமார், “நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு ஷீல்டு வாங்குகிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தின் மீது எனக்கு அதீத நம்பிக்கை இருந்தது. வேகமாக ரிலீஸ் செய்யவேண்டிய சூழல் இருந்ததால் புரமோஷன் செய்ய முடியவில்லை. புரமோஷன் இல்லாததால் படம் வந்ததே மக்களுக்கு தெரியவில்லை. அடுத்தடுத்த நாட்களில் படம் பிக்அப் ஆனது. எனக்குள் நம்பிக்கை இருந்தது. ‘சேது’ இப்படத்தின் கொஞ்சம் கொஞ்சமாக பிக்அப் ஆனது.

‘சுப்ரமணியபுரம்’ படமும் அப்படித்தான். அந்த வகையில் இந்தப் படத்தின் மீதும் நம்பிக்கை வைத்திருந்தேன். இந்தப் படம் ஏன் ஓட வேண்டும் என்றால், அதன் மூலம் நிறைய எழுத்தாளர்கள் சினிமாவுக்குள் வருவார்கள்; அறிமுக இயக்குநர்களுக்கு வெளிச்சம் கிடைக்கும். எனக்கு சின்ன வருத்தம் இருந்தது. மகேந்திரன், பாலுமகேந்திரா இருந்திருந்தால் அவர்களுக்கு போட்டு காட்டியிருப்பேன்.

இந்த வெற்றிய மக்கள் தங்களோட வெற்றிய எடுத்துக்கொண்டார்கள். அடுத்தடுத்த படங்களும் நான் நல்ல படங்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதை மக்களாகிய நீங்கள் தெரியப்படுத்தியுள்ளீர்கள். நல்ல படங்களைத் தருவேன். ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி வாழ்த்தியது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. சிம்பு வாழ்த்து சொன்னார். நான் ‘சுப்ரமணியபுரம்’ படத்தை எடுக்க முடிவு செய்தபோது பேசப்பட்ட நடிகர் சிம்பு தான். சித்தார்த் தொடர்பு கொண்டு பேசினார். அவர்களுக்கு என் நன்றி. ‘சுப்ரமணியபுரம்’, ‘நாடோடிகள்’, ‘சுந்தரபாண்டியன்’ வரிசையில் என் கரியரில் ‘அயோத்தி’ முக்கியமான படம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE