‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் இருந்து ‘கேம் சேஞ்சர்’ க்ளைமாக்ஸ் ஷூட் - இயக்குநர் ஷங்கர் அப்டேட்

By செய்திப்பிரிவு

‘இந்தியன் 2’ படப்பிடிப்பு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அடுத்து ‘கேம் சேஞ்சர்’ படத்தின் படப்பிடிப்பில் இயக்குநர் ஷங்கர் கவனம் செலுத்துகிறார்.

இயக்குநர் ஷங்கர் ஒரே நேரத்தில், கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’, ராம்சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படங்களை இயக்கி வருகிறார். ‘இந்தியன் 2’ படத்துக்காக தென்னாப்பிரிக்கா சென்றுள்ள ஷங்கர், அங்கு முக்கிய காட்சிகளை படமாக்கினார். கமல் உட்பட பலர் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்துள்ளனர். இந்நிலையில் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு தென்னாப்பிரிக்காவில் நிறைவடைந்துள்ளதை இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தீவிரமான படப்பிடிப்பிற்கு நன்றி, மீண்டும் மே மாதம் சந்திப்போம் கமல் சார். ‘இந்தியன் 2’விலிருந்து ‘கேம் சேஞ்சர்’ க்ளைமாக்ஸுக்கு நகர்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

இந்த வார இறுதியில் இந்தியா திரும்பும் அவர், வரும் 23-ம் தேதி ‘கேம் சேஞ்சர்’ படத்தின் படப்பிடிப்பை ஹைதராபாத்தில் தொடங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது. இதில் ராம்சரண், கியாரா அத்வானி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. இதற்காக, அமெரிக்கா சென்றுள்ள நடிகர் ராம்சரணும் இந்த வாரம் இந்தியா திரும்புகிறார். ‘கேம் சேஞ்சர்’ படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் படம் வெளியாகிறது. எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், அஞ்சலி, காந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE