ருத்ரன்: திரை விமர்சனம்

By செய்திப்பிரிவு

போக்குவரத்து நிறுவனம் நடத்தும் அப்பா (நாசர்), குடும்பப் பொறுப்பைக் கவனித்துக்கொள்ளும் அம்மாவின் (பூர்ணிமா பாக்யராஜ்) செல்லப் பிள்ளை ருத்ரன் (ராகவா லாரன்ஸ்). அவருக்கு மருத்துவமனையில் பணியாற்றும் அனன்யா (பிரியா பவானி சங்கர்) மீது காதல். இந்நிலையில், தொழிலை விரிவுபடுத்த வாங்கிய ரூ.6 கோடியுடன், அப்பாவின் நண்பர் தலைமறைவாக, அந்த அதிர்ச்சியில் உயிரிழக்கிறார் அப்பா. அந்தக் கடனைஅடைக்க வெளிநாடு செல்கிறார், ருத்ரன். இந்த நேரத்தில் அவர் குடும்பத்தை ரவுடி பூமியின் ஆட்கள் கொல்கிறார்கள். அவர்கள் ஏன் கொல்கிறார்கள்? அவர்களை ருத்ரன் என்ன செய்கிறார் என்பது மீதி கதை.

பலமுறைப் பார்த்து சலித்த மசாலா ‘டெம்பிளேட்’ கதையை, தன் பங்குக்குக் கொடுத்திருக்கிறார், இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் தயாரிப்பாளர் கதிரேசன். ‘அம்மா, அப்பாவை கைவிட்டுடாதீங்க’ என்ற மெசேஜ் சொல்ல வந்த கதை, அதைவிட்டுவிட்டு எல்லாவற்றையும் சொல்கிறது. அடுத்தது இதுதான் என்று எளிதாக யூகித்துவிடக் கூடிய ‘பாரம்பரிய’ திரைக்கதையில் லாஜிக்கை தேட வேண்டியிருக்கிறது. வலிந்து திணிக்கப்பட்ட அம்மா சென்டிமென்ட் காட்சிகளும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

நல்ல மனம் கொண்ட ஹீரோ, கண்டதும் காதலை அள்ளி வழங்கும் ஹீரோயின், நாயகனின் அம்மா பாசம், அவருக்கு உதவும் போலீஸ்காரர், கணக்கு வழக்கின்றி கொலை செய்யும் கருணையற்ற வில்லன், அவர் ஆட்களை ‘தூக்கும்’ யானை பலம் கொண்ட நாயகன் என அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் காட்சிகள், மொத்தமாக ‘டயர்ட்’ ஆக்கிவிடுகின்றன.

ஆக்‌ஷன் காட்சிகளில், விதவிதமாக பறந்து, மோதி அடிவாங்கும் ஸ்டன்ட் கலைஞர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. ஒரு கட்டத்துக்கு மேல் தெலுங்கு ஹீரோ பாலகிருஷ்ணா படத்துக்கு வந்திருக்கிறோமே என்கிற உணர்வு வருவதையும் தவிர்க்க முடியவில்லை.

படத்தின் குறைகளை தனது நடனம் மற்றும் நடிப்பு மூலம் களைய முயன்றிருக்கிறார் ராகவா லாரன்ஸ். ‘ஜொர்தாலயா’, ‘பாடாத பாட்டெல்லாம்’ பாடல்களின் காட்சி அமைப்பும் பின்னணி வண்ணங்களும் ரசிக்க வைக்கின்றன.

குடும்பப் பாங்கான கேரக்டருக்கு அழகாகப் பொருந்துகிறார் பிரியா பவானி சங்கர். பூர்ணிமா பாக்யராஜ், சென்டிமென்ட் காட்சிகளில் நெகிழ வைக்கிறார். வில்லனாக சரத்குமார் அவ்வப்போது வந்து மிரட்டிவிட்டு, தமிழ் சினிமா வழக்கப்படி, கிளைமாக்ஸில் உயிர் விடுகிறார்.

அப்பா நாசர், நண்பர் காளிவெங்கட், போலீஸ்காரர் இளவரசு, ருத்ரனுக்கு உதவும் ரெடின் கிங்ஸ்லி பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ், தரண்குமார் இசையில் பாடல்கள் தியேட்டரில் ரசிக்கும்படி இருக்கின்றன. சாம் சி.எஸின் பின்னணி இசை, மசாலா கதைக்குத் தேவையானதை வழங்கி இருக்கிறது.

ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவில் முதல் பாதியும், பாடல் காட்சிகளும் கண்களில் ஒற்றிக்கொள்ளலாம் போலிருக்கிறது. எடிட்டர் ஆண்டனி படத்தை விறுவிறுப்பாக்க, தன்னால் முடிந்ததைச் செய்திருக்கிறார். வெளிநாட்டில் பிள்ளைகள் சுகமாக வாழ, உள்ளூரில் தனியாக வசிக்கும் முதியவர்களைக் குறிவைக்கும் ரவுடி பூமியின் கதை - கேட்பதற்கு ரியலாகவும் திகிலாகவும் இருப்பதென்னவோ நிஜம்தான். ஆனால், ஒரு விறுவிறுப்பான படமாகப் பார்ப்பதற்கு அதுமட்டும் போதாதே!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE