ருத்ரன் Review: ராகவா லாரன்ஸ் ‘தாண்டவம்’ ஆடியது யார் மீது?

By கலிலுல்லா

‘பெற்றோரை பிள்ளைகள் கைவிடக் கூடாது’ என்ற மெசேஜை பழிதீர்க்கும் திரைக்கதையுடன் இணைத்து சொன்னால் அது ‘ருத்ரன்’. ஐடி கம்பெனியில் வேலை செய்பவர் ருத்ரன் (ராகவா லாரன்ஸ்). டிராவல்ஸ் நடத்தி வரும் அவரது அப்பா தேவராஜ் (நாசர்) தன் நெருங்கி நண்பருக்காக 6 கோடி ரூபாய் கடன் வாங்கித்தருகிறார். நண்பர் பணத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவாக, அந்தk கடன் தேவராஜ் குடும்பத்தின் மேல் விழுகிறது. கடனை அடைக்க வேறு வழியில்லாமல் லண்டன் சென்று வேலை பார்க்கும் ருத்ரன் திரும்பி வரும்போது அவரது குடும்பம் பூமி (சரத்குமார்) என்பவரால் அழிக்கப்படுகிறது. யார் இந்த பூமி? எதற்காக ருத்ரன் குடும்பத்தினரை அவர் கொன்றார்? அவரை ருத்ரன் எப்படி பழிவாங்கினார்? - இதுதான் திரைக்கதை.

90களின் இறுதியிலேயே இனி இது வேலைக்காகாது என நிராகரிக்கப்பட்ட திரைக்கதை ஃபார்மெட் எப்படியோ இயக்குநர் கதிரேசன் கையில் சிக்கியிருக்கிறது. கரோனாவுக்கு பிறகு ஓடிடியின் வளர்ச்சியால் பார்வையாளர்களின் ரசனையில் வியத்தகு மாற்றங்கள் நிகழ்த்திருக்கின்றன. இப்படியான 2023-ல் வில்லன் கொடூரன் என்பதைக் காட்ட ஒரு இன்ட்ரோ, பெண்ணை காப்பாற்றும் வகையில் நாயகனுக்கு ஒரு இன்ட்ரோ, அடுத்த சற்று நேரத்தில் நாயகிக்கு ஒரு இன்ட்ரோ. அடுத்து இன்ஸ்டன்ட் காதல், டூயட் பாடல், தேவையான அளவு காட்சிகளுக்கு இடையில் சிரிக்காமல் பார்த்துக்கொள்ளும் காமெடி!

‘எனக்கு அப்பா, அம்மா இல்ல. நான் ஹோம்ல தான் வளர்ந்தேன்’ என நாயகி சொல்லும்போதே தமிழ் சினிமாவின் பெரும்பாலான நாயகன், நாயகிகளும் அப்படித்தானே என தோன்றுகிறது. ‘நீ ஏன் என்னை லவ் பண்றே’ என நாயகி ப்ரியா பவானி சங்கர் கேட்கும்போது, ‘ஏன்னா நீ ஏழைக் குழந்தைகளுக்கு ஹெல்ப் பண்ணத நான் பாத்தேன்’ என்கிறார் லாரன்ஸ். இப்படியான வழக்கொழிந்த கதாபாத்திர வடிவமைப்பு பார்த்து பார்த்து சலித்தவை.

குறிப்பாக இரண்டு பேரை அடித்து ட்ராலி பேக் போல தள்ளிகொண்டு வருவது, சூலத்தில் மாட்டி எந்த சப்போர்டும் இல்லாமல் நிற்க வைப்பது, அடித்த வேகத்தில் பூமியில் விழுந்து பவுன்சாவது போன்ற சண்டைக்காட்சிகள் தெலுங்கில் பாலையாவுக்கு மட்டுமே சாத்தியப்பட்ட நிலையில், தற்போது அந்த வித்தையை லாரன்ஸ் எட்டிப்பிடித்திருக்கிறார். எல்லாவற்றையும் விட லாரன்ஸிடம் இருக்கும் கத்தி எதிரியின் தலைக்கு பின்புறமாக இடது டூ வலது பான் ஆவது கந்தர்வ கோட்டை சமஸ்தானத்தை அதிரவைத்த காட்சி! இப்படியான சண்டைக் காட்சிகளும், காதல், டூயட், காமெடி இன்ட்ரோகள் சுவாரயமற்று பழைய ஃபார்மெட்டில் இருப்பதை ரசிக்க முடியவில்லை.

படத்தின் இரண்டாம் பாதியின் தொடக்கம் ஆறுதலைத் தந்தது. ஆனால், அதிலும் ஃப்ளாஷ்பேக்குக்குள் வைக்கப்பட்ட ஃப்ளாஷ்பேக் காட்சிகள், திணிக்கப்பட்ட பாடல்கள், ‘முனி’ பட சீரிஸ்களில் இறுதியில் சாமி சிலை முன்பு பாடல் ஒலிக்க எதிரிகளை அடித்து துவம்சம் செய்யும் அதே காட்சியை அப்படியே ரீமேக் செய்திருப்பது அயற்சி. ‘அய்யனார நேர்ல பாத்துருக்கீயா.. அய்யா தான்டா அய்யனார்’, ‘நான் பூமிடா’ என சரத்குமார் சொல்லும்போது, ‘நான் அந்த பூமிய படச்ச சாமிடா’ என ராகவா லாரன்ஸ் சொல்வதும்.. வேற லெவல் வசனங்கள்!

முதல் பாதியில் வரும் காமெடி போர்வைக் காட்சியிலும், சண்டைக் காட்சியிலும், சில சென்டிமென்ட் சீனஸ்களிலும் ராகவா லாரன்ஸின் மிகை நடிப்பு எட்டிப்பார்க்காமலில்லை. தவிர, அவரின் ஆஸ்தான களமான நடனம் பாடல்களை ரசிக்க உதவுகிறது. காதல், காதல் பாடல், அம்மாவை பார்த்துகொள்வது, குழந்தையை பெற்றுத் தருவதைத் தவிர, ப்ரியா பவானி சங்கருக்கு படத்தில் பெரிய வேலையில்லை. இருந்தாலும் கொடுத்த வேலையை சரிவர செய்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு சண்டைக்காட்சிகளில் சரத்குமார் கவனிக்க வைக்கிறார். க்ளைமாக்ஸில் அவரின் சின்ன குத்தாட்டம் ரசிக்கும்படியாக இருந்தது. ரெடின் கிங்ஸ்லீ தொடக்கத்தில் சிரிக்க வைத்ததோடு சரி .பூர்ணிமா பாக்யராஜ், நாசர், காளி வெங்கட் தங்களுக்கான பணியை செவ்வனே செய்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் ‘ஜோர்தாலே’, ‘பாடாத பாட்டெல்லாம்’ ரீமிக்ஸ் பாடல்கள் கேட்க வைக்கின்றன. சாம்.சி.எஸ்ஸின் பின்னணி இசை அவ்வளவாக ஈர்க்கவில்லை. ஆர்.டி.ராஜேசகர் ஒளிப்பதிவும், ஆண்டனி படத்தொகுப்பும் காட்சிகளுக்கு பலம்.

மொத்தத்தில் தாய். தந்தையை அனாதையாக்கவிடக் கூடாது என்ற மெசேஜை சொல்ல முனைந்திருக்கும் படத்தின் எமோஷனல் காட்சிகள் கூட ஒட்டாதததும், அப்பா - மகளுக்கான சென்டிமென்ட் காட்சிகளும் நிறைவின்றி கடப்பதும், வழக்கொழிந்த திரைக்கதை ஃபார்மெட்டாலும் ருத்ரன் ஆடிய தாண்டவம் வில்லன் பூமியின் மீது மட்டுமல்ல... அத்துடன் படம் முடிந்த பின்பு ருத்ரன் பார்ட் 2-க்கான படத்திற்கு லீடும் கொடுக்கப்படுவதை கவனித்தில் எடுத்துக்கொள்வது சால்ச்சிறந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

15 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்