‘‘லியோ படத்துல நான் இன்னும் நடிக்கவே ஆரம்பிக்கல’’ - மன்சூர் அலிகான்

By செய்திப்பிரிவு

“விஜய்யின் ‘லியோ’ படத்தில் நான் இன்னும் நடிக்கவே ஆரம்பிக்கவில்லை” என நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் 'ரிப்பப்பரி' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், “விஜய்யின் ‘லியோ’ படத்தில் நான் இன்னும் நடிக்கவே ஆரம்பிக்கவில்லை. என்னுடைய ‘சரக்கு’ படத்தில்தான் நடித்துகொண்டிருக்கிறேன். ‘லியோ’ படக்குழுவினர் காஷ்மீர் சென்று ஷூட்டிங்கை முடிந்துவிட்டு வந்துள்ளனர். இதன்பிறகு தான் எனக்கான பகுதிகள் படமாக்கப்படும். அதிகமான தேதிகளை கேட்டு வாங்கியுள்ளனர். விஜய்யுடன் நான் 10 படங்களுக்கு மேல் நடித்துதள்ளேன். ‘தேவா’ சிறப்பான வரவேற்பை பெற்றது. மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி.

‘விடுதலை’ படத்தில் வாச்சாத்தி கொடுமைகளை பதிவு செய்திருக்கிறார் வெற்றிமாறன். அதற்கு பெரும் தைரியம் வேண்டும். வெற்றிமாறனுக்கு பாராட்டுகள். மக்களிடம் பணப்புழக்கமில்லை. ஜிஎஸ்டி வரி என பல்வேறு வரிகளை செலுத்தி மக்களிடம் பணத்தை புழங்கவிடாமல் செய்துவிட்டதால் அனைத்து படங்களையும் மக்களால் பார்க்க முடியவில்லை. அதனால் பெரிய நடிகர்களின் படங்களுக்காக காத்திருந்து திரையரங்குகளுக்கு வருகின்றனர்” என்றார்.

மேலும், “ஆளுநர் ஆளுராக இருக்க வேண்டும். அதிகார வர்க்கமாகவோ, அதன் அடையாளமாகவோ இருக்கக் கூடாது. ஆளுநருக்கு எதுக்கு 650 ஏக்கர் அளவிலான மாளிகை?. அதனை மக்களுக்கு பயன்படும் இடமாக மாற்றலாம். இதற்காக 1998-லேயே போராடினேன். என்னைக் கைது செய்தனர். தமிழக அரசின் மசோதாக்களுக்கு அனுமதி அளிப்பதுதான் அவர் வேலை” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE