“மிசா காட்சி என்னைக் கவர்ந்தது” - முதல்வர் ஸ்டாலின் புகைப்பட கண்காட்சி; ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

திமுகவில் கடைசித் தொண்டனாக இருந்து இந்த நிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வந்துள்ளதை 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' புகைப்படக் கண்காட்சியில் அழகாக எடுத்துக் கூறியுள்ளார்கள் என்று ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார்.

கோவை வஉசி மைதானத்தில் திறக்கப்பட்டுள்ள 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' என்ற முதலமைச்சரின் புகைப்பட கண்காட்சியை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நேரில் பார்வையிட்டார். இந்நிகழ்வில் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட திமுகவினர் பலர் உடன் இருந்தனர்.அப்போது புகைப்பட கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு புகைப்படங்களின் நிகழ்வுகள் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் ஜி.வி.பிரகாஷ் கேட்டறிந்தார்.

இதன் பின் செய்தியாளர்களிடம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கூறுகையில், “முதலமைச்சர் ஸ்டாலின் சாதாரணமாக இந்த நிலைமைக்கு வரவில்லை. மிகவும் கஷ்டப்பட்டு ஒரு கடைசி தொண்டனாக இந்த கட்சியில் இருந்து தற்போது இந்த நிலைமைக்கு வந்துள்ளதை அழகாக இந்த புகைப்பட கண்காட்சியின் எடுத்துக் கூறியுள்ளார்கள். அனைவரும் இந்த கண்காட்சியை வந்து பார்க்க வேண்டும்.

அப்போது முதல்வர் கடந்து வந்த பாதையை அனைவரும் அறிந்து கொள்ளலாம். அவர் மிசா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த காட்சிகள் என்னை கவர்ந்தது. மேலும் அவரது இளம் வயதில் அவர் கிரிக்கெட் விளையாடியது எல்லாம் என்னுடைய தலைமுறைக்கு தெரியாது. நம்முடைய முதலமைச்சரைப் பற்றி தெரிந்து கொள்ள இது ஒரு நல்ல இடமாக உள்ளது, அனைவரும் வந்து பார்க்க வேண்டும்" என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE