கேரள லாட்டரியை மையமாக வைத்து உருவாகும் ‘பம்பர்’

By செய்திப்பிரிவு

‘8 தோட்டாக்கள்’, ‘ஜீவி’ படங்களில் நடித்த வெற்றி நாயகனாக நடிக்கும் படம், ‘பம்பர்’. ஷிவானி நாராயண், ஹரீஸ் பெரேடி, கவிதா பாரதி, ஜி.பி.முத்து உட்பட பலர் நடிக்கும் இந்தப் படத்துக்கு கோவிந்த் வசந்தா இசைஅமைக்கிறார். கார்த்திக் நேத்தா பாடல்கள் எழுதியுள்ளார். வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். வேதா பிக்சர்ஸ் சார்பில் சு. தியாகராஜா தயாரித்துள்ளார். படத்தை இயக்கியுள்ள எம்.செல்வகுமார் கூறியதாவது:

கேரள மாநில லாட்டரியை மையமாகக் கொண்டு உருவாகும் படம் இது. அறமே இல்லாத ஒருவன், அறம் கொண்ட ஒரு மனிதனை சந்தித்தப் பின் என்னவாகிறான் என்பது கதை. முடிந்த அளவு யதார்த்தமாகக் கதையை சொல்லியிருக்கிறோம்.

இதில் புலிப்பாண்டி என்ற கேரக்டரில் வெற்றி நடிக்கிறார். இஸ்மாயில் என்ற கதாபாத்திரத்தில் ஹரீஷ் பெரேடி நடிக்கிறார். அவரை எப்படி காட்டுவது என்று யோசித்தேன். அப்போது மேக்கப் கலைஞர் பட்டணம் ரஷீத் சாரை சந்தித்தேன். அவர், ஹரீஷ் பெரேடியை வித்தியாசமான மேக்கப்புடன் புகைப்படம் எடுத்துக் காண்பித்தார்.

அது, நான் நினைத்த மாதிரியே இருந்தது. நெல்லை பகுதி வழக்கையும் படத்தில் கொண்டு வந்திருக்கிறேன். ஜி.பி.முத்து, துப்பாக்கிப் பாண்டியன் என்ற முழுநீள காமெடி கேரக்டரில் நடித்திருக்கிறார். நையாண்டி கலந்த அவர் கேரக்டர் பேசப்படும். படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மே மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு எம்.செல்வகுமார் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE