கிச்சாவின் முடிவு அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது: பிரகாஷ் ராஜ்

By செய்திப்பிரிவு

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை ஆதரித்து பிரச்சாரம் செய்யப்போவதாக நடிகர் கிச்சா சுதீப் கூறியிருப்பது தனக்கு அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு மே மாதம் 10-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 13-ம் தேதி நடக்கிறது. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் காங்கிரஸுக்கு சாதகமாக இருக்க பாஜக ஆட்சியைத் தக்கவைக்க கடும் பிரயத்தனம் செய்துவருகிறது.

இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை ஆதரித்து பிரச்சாரம் செய்யப்போவதாக நடிகர் கிச்சா சுதீப் கூறியிருக்கிறார். இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த கிச்சா சுதீப், "நான் முதல்வர் பசவராஜ் பொம்மையை ஆதரிக்கிறேன். அவர் என் மாமாவைப் போல. ஆரம்ப காலத்தில் அவர் என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர். சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் பொம்மை மற்றும் அவர் ஆதரவு கோரும் பாஜக வேட்பாளர்களுக்காக பரப்புரை செய்வேன்.

பிரதமர் மோடி எடுத்த சில முடிவுகளை நான் முற்றிலும் மதிக்கிறேன். ஆனால், இன்று நான் இங்கு அமர்ந்திருப்பதற்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நான் வரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன். ஆனால், கட்சியில் இணையவோ, தேர்தலில் போட்டியிடவோ மாட்டேன்" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரகாஷ் ராஜ், பாஜகவை ஆதரித்து பிரச்சாரம் செய்யப்போவதாக நடிகர் கிச்சா சுதீப் கூறியிருப்பது தனக்கு அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக தெரிவித்திருக்கிறார். முன்னதாக நேற்றுக் காலை அவர் பகிர்ந்த ட்வீட் ஒன்றில், "சுதீப் பாஜகவில் இணைவதாக வெளியான செய்தியைப் பகிர்ந்து, இச்செய்தி போலிச் செய்தியாக இருக்கும் என்று நான் உறுதிபட நம்புகிறேன். தேர்தலில் தோல்வி உறுதியான பாஜக விரக்தியில் பரப்பிய செய்தியாக இருக்குமென்று நம்புகிறேன். கிச்சா சுதீப் வீவேகமுள்ள குடிமகன். அவர் இதற்கு இரையாக மாட்டார்" என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். பிரகாஷ் ராஜ் கடந்த சில ஆண்டுகளாகவே மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். #justasking என்ற ஹேஷ்டேகின் கீழ் விமர்சனங்களைப் பகிர்ந்துவருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE