பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ பட போஸ்டருக்கு எதிராக புகார்

By செய்திப்பிரிவு

பிரபாஸ், கீர்த்தி சனோன், சைப் அலிகான் நடிப்பில் ஓம் ராவத் இயக்கியுள்ள படம் ‘ஆதிபுருஷ்’. ராமாயணத்தின் ஒரு பகுதி கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இதன் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி கடும் விமர்சனத்தை சந்தித்தது. இதுதொடர்பாக மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, அயோத்தி ராமர் கோயிலின் தலைமை குரு சத்யேந்திர தாஸ், உத்தரப்பிரதேச துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக் உள்ளிட்ட பலர் இப்படத்துக்குத் தடை விதிக்கக் கோரினர்.

பின்னர் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் ஜூன் 16-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது. இதைத்தொடர்ந்து படத்தின் புதிய போஸ்டரை ராம நவமியை முன்னிட்டு படக்குழு வெளியிட்டது. அதில், ராமராக பிரபாஸ், சீதாவாக கீர்த்தி சனோன், லக்ஷ்மணனாக சன்னி சிங், அனுமனாக தேவதத்தா நாகே ஆகியோர் தோன்றியுள்ளனர்.

இந்த புதிய போஸ்டர் தொடர்பாக இப் படக்குழு மீது காவல் நிலையத்தில் புகார் அளிகக்கப்பட்டுள்ளது. மும்பை சாக்கினாக்கா காவல் நிலையத்தில் சஞ்சய் தினாநாத் திவாரி என்பவர் இந்து மத கதாபாத்திரங்களை தவறாகச் சித்தரித்துள்ளதாகக் கூறி புகார் அளித்துள்ளார். போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE