பத்து தல: திரை விமர்சனம்

By செய்திப்பிரிவு

கன்னியாகுமரியில் மணல் கொள்ளை சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறார், ஏ.ஜி.ராவணன் என்னும் ஏஜிஆர் (சிலம்பரசன்). தமிழ்நாடு முதல்வர் (சந்தோஷ் பிரதாப்) திடீரென மாயமாகிவிட, ஏஜிஆர் தேர்ந்தெடுக்கும் நபரே (ஒபிலி என்.கிருஷ்ணா) அடுத்த முதல்வராகிறார். மாயமான முதல்வரைக் கடத்தியது ஏஜிஆர்தான் என்ற சந்தேகத்தில், காவல்
துறையைச் சேர்ந்த சக்தி (கவுதம் கார்த்திக்), அவர் குழுவுக்குள் அடியாளாக ஊடுருவுகிறார்.

அவரின் கல்லூரிக் காதலியும் கன்னியாகுமரி தாசில்தாருமான லீலா தாம்ஸன் (பிரியா பவானி ஷங்கர்) ஏஜிஆரின் மணல்கொள்ளையைத் துணிச்சலுடன் எதிர்க்கிறார். முதல்வருக்குக் குடைச்சல் கொடுக்கும் துணை முதல்வர் நாஞ்சிலார் (கவுதம் வாசுதேவ் மேனன்) தனது சுயநலத்துக்காக, மணல்கொள்ளை எதிர்ப்புப் போராட்டத்தைத் தூண்டிவிட்டு ஏஜிஆரின் செல்வாக்கை சரிக்க முயல்கிறார். மாயமான முதல்வர் என்ன ஆனார்? ஏஜிஆர் யார்? அவர் கோட்டைக்குள் நுழையும் சக்தியின் நோக்கங்கள் நிறைவேறியதா? என்பதற்கு விடை அளிக்கிறது மீதிக் கதை.

2017-ல் கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘மஃப்டி’ படத்தைத் தமிழுக்கு ஏற்ற மாற்றங்களோடு மறு ஆக்கம் செய்திருக்கிறார் இயக்குநர் ஒபிலி.என்.கிருஷ்ணா. தரமான அரசியல் கேங்ஸ்டர் படத்துக்கான களம் அமைந்திருந்தாலும் புதுமை, சுவாரசியக் காட்சிகள் குறைவாகவே இருப்பதால் முழுமையான திருப்தி அளிக்கத் தவறுகிறது.
செல்வாக்குமிக்க மணல்கொள்ளை மாஃபியாவுக்கு எதிரான போராட்டங்கள், அரசியல் காய்நகர்த்தல்கள் ஆகியவற்றால் நிறைந்த முதல் பாதியில், சில காட்சிகள் மட்டுமே ரசிக்க வைக்கின்றன. ஏஜிஆரின் நல்ல நோக்கங்களும் அவருக்கு இருக்கும் செல்வாக்கும் இரண்டாம் பாதியில் விவரிக்கப்படுகிறது. மர்மம் நிறைந்த முதல்பாதியைவிட, மாஸ், சென்டிமென்ட் காட்சிகள் நிறைந்த இரண்டாம் பாதி ஒப்பீட்டளவில் தேறுகிறது.

மக்களுக்கு நன்மைச் செய்யும் ஏஜிஆர், சட்டத்தை மீறி லாரி லாரியாக மணல் அள்ளுகிறவராகக் காண்பிப்பது சமூகத்துக்கு மோசமான முன்னுதாரணம். அடுத்த முதல்வர் யார் என்பதைத் தீர்மானிக்கும் அளவுக்கு அவர் எப்படி செல்வாக்குப் பெற்றார் என்ற கேள்விக்கு விடையில்லை.

இடைவேளையில் அறிமுகமாகி இரண்டாம் பாதியைச் சுமந்திருக்கும் சிலம்பரசன் டி.ஆர், கெட்டவன் முகத்தைக் கொண்ட நல்லவனாக, ஒரு செல்வாக்கான தலைவனின் ஆளுமையைக் கண்முன் நிறுத்தியிருக்கிறார். கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் இருவரும் குறை சொல்ல முடியாத நடிப்பைத் தந்திருக்கிறார்கள். கவுதம் மேனன் கதாபாத்திரம் மிரட்டலானதாக வடிவமைக்கப்படவில்லை. சமூக ஆர்வலராக சில காட்சிகளில் வந்தாலும் கவனம் ஈர்க்கிறார் மனுஷ்யபுத்திரன்.

‘ஜெயிச்சவனவிட ஜெயிக்க போராடறவனுக்கு வேகம் அதிகம்’ என்பது போன்ற ஆர்.எஸ்.ராமகிருஷ்ணனின் வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘ஒசரட்டும் பத்து தல’, ‘அக்கறையில’ பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. ஏஜிஆர் கதாபாத்திரத்தை வலுவாக நிறுவுவதற்கான மாஸ் காட்சிகளுக்குப் பின்னணி இசை பெரிய பலம் சேர்த்திருக்கிறது. ஃபரூக் ஜே பாஷாவின் ஒளிப்பதிவில் டாப் ஆங்கிள் ஷாட்களில் கன்னியாகுமரியின் பிரம்மாண்டம் பதிவாகியிருக்கிறது. வழக்கமான கதைதான் என்றாலும் திரைக்கதையில் இன்னும் கூடுதலாக மெனக்கெட்டிருந்தால் ‘பத்து தல’ பட்டையைக் கிளப்பியிருக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE