ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 200 பவுன் நகை திருடுபோனதாக புதிய வழக்கு

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் 200 பவுன் நகைகள் திருடுபோனதாக புதிய வழக்கை போலீஸார் பதிவு செய்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா சென்னை வீனஸ் காலனியில் வசித்து வருகிறார். இந்நிலையில், அவரது வீட்டில்லாக்கரில் இருந்த 60 பவுன்தங்க, வைர நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடுபோனதாக தேனாம்பேட்டை போலீஸில் புகார் செய்யப்பட்டது.

போலீஸார் விசாரணை மேற்கொண்டு, ஐஸ்வர்யாவிடம் பல ஆண்டுகளாக பணிபுரிந்த மந்தைவெளி ஈஸ்வரி, கார் ஓட்டுநர் திருவேற்காடு வெங்கடேசன் ஆகியோரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 100 பவுன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் சொத்து ஆவணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

ஐஸ்வர்யா தனது வீட்டிலிருந்து 60 பவுன் நகைகள் திருடுபோனதாக புகார் அளித்திருந்த நிலையில், 100 பவுனுக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டது போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஈஸ்வரி, வெங்கடேசனிடம் மீண்டும் விசாரணை நடத்த போலீஸார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து 2 நாட்கள் விசாரணை நடத்த அனுமதிபெற்றனர். இதன்படி, இருவரிடமும் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், மேலும் 43 பவுன் தங்க நகைகளைப் பறிமுதல் செய்ததாக போலீஸார் நேற்று முன்தினம் தெரிவித்தனர். அதேநேரத்தில், இன்னும் தங்கம், வைர நகைகள் பறிமுதல் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஐஸ்வர்யா தனது நகைகள் குறித்த விவரங்கள் முழுவதையும் ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் மேலும் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், சுமார் 200 பவுன் வரை நகைகள் திருடு போனதாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக புதிய வழக்கை போலீஸார் பதிவு செய்துள்ளனர்.

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசை: வசதியாகவும், ஆரம்பரமாகவும் வாழ ஆசைப்பட்டு, நகைத் திருட்டில் ஈடுபட்டதாக போலீஸாரிடம் ஈஸ்வரி வாக்குமூலம் அளித்துள்ளாம். இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE