திருமணம் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை கொண்டு வரும் - சிவகார்த்திகேயன் பேச்சு

By செய்திப்பிரிவு

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கவுதம் கார்த்திக் நடித்துள்ள படம் ‘ஆகஸ்ட் 16 1947’. முருகதாஸிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பொன்குமார் இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்து உள்ளார்.

இதன் இசையை வெளியிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது: ஒரு வலி நிறைந்த விஷயத்தை இயக்குநர் பொன்குமார் இந்தப் படத்தில் வைத்திருக்கிறார். அவரின் மெனக்கெடல் ஒவ்வொரு விஷயத்திலும் தெரிகிறது.

கல்யாணத்துக்கு பின் வாழ்க்கையில் மாற்றம் வரும். அதை ‘லக்’குன்னு சொல்வாங்க. அழகா யோசித்துப் பார்த்தா அதைப் பொறுப்புன்னு சொல்லலாம். நான் ஆர்த்தியை கல்யாணம் பண்ணின பிறகுதான் தனியா நிகழ்ச்சி செய்யும் வாய்ப்பு கிடைச்சது. திருமணம்தான் வாழ்க்கையில பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும். கவுதம் கார்த்திக்கிற்கு அதன் ஆரம்பமா இதைப் பார்க்கிறேன்.

ஏ.ஆர்.முருகதாஸ் படங்கள் எனக்குப் பிடிக்கும். அவரின் ‘ஏழாம் அறிவு’ இசை வெளியீட்டு விழாவில், பின்னால இருந்து வேலை பார்த்தேன். அவர் தயாரிச்ச ‘எங்கேயும் எப்போதும்’ இசை விழாவை தொகுத்து வழங்கினேன். அவர் தயாரிப்பில் ‘மான் கராத்தே’வில் ஹீரோவாக நடிச்சேன். இப்போ, அவர் தயாரிக்கும் பட விழாவுக்கு சிறப்பு விருந்தினரா வந்திருக்கேன். ஒருத்தர் வளர்ந்தா சந்தோஷப்படுறவங்க நிறைய பேர் இருப்பாங்க. எப்படியாவது என் கூட இருக்கிறவன் வளர்ந்திடணும்னு ஆசைப்படுறவங்க ரொம்ப கம்மி. ‘வீரம்’ படத்துல அஜித் சார் சொல்ற டயலாக், ‘கூட இருக்கவனை நாம பாத்துக்கிட்டா, மேல இருக்கவன் நம்மளைப் பாத்துக்குவான்’. ஏ.ஆர்.முருகதாஸ் தன்னோட உதவி இயக்குநர்கள் கதையை தயாரிக்கிறது மகிழ்ச்சியாக இருக்கு. இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE