‘ஆர்ஆர்ஆர்’ படத்துக்காக ஆஸ்கர் பரப்புரைக்கு ஆன செலவு என்ன? - ராஜமவுலி மகன் விளக்கம்

By செய்திப்பிரிவு

‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ஆஸ்கர் பரப்புரைக்கு ரூ.80 கோடி வரை செலவு செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், ராஜமவுலியின் மகன் கார்த்திகேயா அதனை மறுத்துள்ளார்.

கடந்த ஆண்டு வெளியான ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் ரூ.1200 கோடிக்கும் அதிமான வசூலை வாரிக்குவித்தது. ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடித்திருந்த இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு சிறந்த அசல் பாடலுக்கான பிரிவில் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

ஆனால், முன்னதாக இப்படம் இந்தியா சார்பில் அதிகாரபூர்வமாக ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்படவில்லை. இதனால், படக்குழு சார்பில் தனிப்பட்ட முறையில் ஆஸ்கர் விருதுக்கு படம் அனுப்பப்பட்டது. இந்த ஆஸ்கர் விருதைப் பெற விளம்பரத்திற்காக ரூ.80 கோடி வரை செலவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் டிவிவி தன்யா, “ஆஸ்கர் விருது பரப்புரைக்கு எந்த செலவும் செய்யவில்லை. ராஜமவுலி மற்றும் படக்குழுவுடன் நான் தொடர்பில் இல்லை” என கூறியிருந்தார்.

படம் வெளியாகி ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ள நிலையில் ராஜமவுலியின் மகன் எஸ்.எஸ்.கார்த்திகேயா சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில் அவர், “ஆஸ்கர் விருதுக்கான தேர்வில் இந்தியா சார்பில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தை அனுப்பாமல் போனது வருத்தம்தான். தனிப்பட்ட முறையில் ஆஸ்கர் விருதுக்கு நாங்கள் அனுப்பினோம். அதுபோல, ஆஸ்கர் விருதை பணம் கொடுத்துதான் என் தந்தை வாங்கினார் என்று சொல்வது பொய். அப்படி வாங்கவும் முடியாது என்பது அனைவரும் அறிந்ததே.

முதலில் 5 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்வது என்று முடிவு செய்தோம். அதையும் 3 கட்டமாக செலவு செய்யலாம் என்று நினைத்தோம்.நாமினேஷனுக்கு முன்னதாக இரண்டரை கோடியில் இருந்து மூன்று கோடி செலவு செய்யலாம் எனத் திட்டமிட்டு செலவு செய்தோம். நாமினேஷனுக்கு படம் போனதும் ரூ.8.5 கோடி வரை செலவு செய்தோம். 5 கோடி ரூபாய் வரையில் திட்டமிட்ட நிலையில், கூடுதலாக பணம் செலவு ஆகிவிட்டது. ஏனெனில், நியூயார்க் நகரில் கூடுதலாக சிறப்புக் காட்சிகள் திரையிட வேண்டியிருந்தது. அதனால், செலவு கொஞ்சம் அதிகரித்துவிட்டது. இதுதான் ஆஸ்கருக்கு நாங்கள் செலவு செய்த தொகை” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE