மலையாள நடிகர் இன்னொசன்ட் காலமானார்

By செய்திப்பிரிவு

மலையாள நடிகரும், அரசியல்வாதியுமான இன்னொசன்ட் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 75.

மலையாளம், தமிழ், இந்தி, கன்னடா என பல்வேறு மொழிகளில் 750 படங்களுக்கும் மேல் காமெடி, குணசித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் இன்னொசன்ட். கேரளாவில் உள்ள சாலக்குடி தொகுதியின் முன்னாள் எம்.பி. பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட இன்னொசென்ட், மூன்று முறை கேரள மாநில திரைப்பட விருதுகளை பெற்றுள்ளார். மலையாள நடிகர் சங்கத் தலைவராகவும் இருந்துள்ளார். இவருக்கு கடந்த 2012-ம் ஆண்டு தொண்டைப் புற்றுநோய் ஏற்பட்டு அதற்காகச் சிகிச்சைப் பெற்று குணமடைந்தார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இரண்டு வாரங்களாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துவந்தனர்.

இதனிடையே, தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக மருத்துவமனை தரப்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், மார்ச் முதல் நடிகர் இன்னொசன்ட்டின் உடல்நிலை மோசமடைந்தது வந்தது. நுரையீரல் தொடர்பான நோய்களுடன், உறுப்பாக்கள் செயலிழந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் இன்று அவர் இதயநோய் காரணமாக மரணடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் இன்னொசென்ட் புற்றுநோயை புன்னகையுடன் எதிர்கொண்ட அபூர்வ மனிதர்களில் ஒருவர். புற்றுநோயிலிருந்து தான் மீண்டு வந்தது குறித்து அவர், ‘லாஃப்டர் இன் தி கேன்சர் வார்ட்” (Laughter in the Cancer Ward) என்ற புத்தகத்தையும் கேன்சர் தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வந்தார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE