N4: திரை விமர்சனம்

By செய்திப்பிரிவு

காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் சில்லறை மீன் வியாபாரம் செய்கிறார் கண்ணாம்மா (வடிவுக்கரசி). அவர் வளர்ப்புப் பிள்ளைகளான சூர்யா (மைக்கேல் தங்கதுரை), கார்த்தி (அப்சல் ஹமீது), சௌந்தர்யா (கேப்ரில்லா), அபிநயா (வினுஷா) ஆகிய நால்வரும் அதே துறைமுகத்தை அண்டிப் பிழைக்கிறார்கள். கல்லூரி மாணவரான விஜய் (அக்‌ஷய் கமல்)
தனது நண்பர்களுடன் இத்துறைமுகத்துக்கு வந்து, மது அருந்துவது, புகைப்பது எனப் பொழுதைக் கழிக்கிறார். இப்பகுதியின், என்4 காவல் நிலையத்தில் நேர்மையும் கண்டிப்புமிக்க ஆய்வாளராக இருக்கிறார் ஃபாத்திமா (அனுபமா குமார்). ஒரு துப்பாக்கி வெடிப்புச் சம்பவம், இவர்களை ஒரு புள்ளியில் இணைக்க, அதன்பின் இக்கதாபாத்திரங்கள் சந்திக்கும் மோதல்களும் முரண்களும் எப்படி முடிவுக்கு வந்தன என்பது கதை.

ஒரு முக்கியச் சம்பவம்தான், திரைக்கதையின் போக்கைத் தீர்மானித்து, கதாபாத்திரங்களுக்கு இடையிலான உள், வெளி முரண்களை வெளிக்காட்டப் போகிறது என்றால், அதை முதல் 20 நிமிடங்களுக்குள் நிகழச் செய்வது முக்கியம். இந்தப் படத்தின் முக்கியச் சம்பவம் அழுத்தமாக இருந்தும், முதல் பாதிப் படத்தின் இறுதியில் நிகழ்வது பார்வையாளர்களின் பொறுமையைச் சோதிக்கிறது.

எளியவர்களை, வலியவர்கள் வாட்டுதல் எனும் கருத்தாக்கம், நேர்மையை உறுதியுடன் பற்றிக்கொண்டிருப்பவர்களை வாழ்வின் இயலாமை தோற்கடிக்கும்போது, அது மற்றவர்களையும் எவ்வாறு பாதிக்கும் என்கிற அறம் சார்ந்த பார்வை ஆகியவற்றை அழுத்தம் திருத்தமாகச் சித்தரித்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ் குமார்.

காசிமேடு உள்ளிட்ட வட சென்னையின் பல பகுதிகளை ‘குற்றபுரி’யாகவே சித்தரித்துச் சுகம் கண்டவர்கள் வெட்கும்படி, அங்கே வாழும் கடலோடிகள், சாமானியர்கள், நடுத்தர வர்க்கத்தினர் வாழ்க்கை குறித்துப் பேச நிறைய இருக்கிறது என்பதைக் காட்டியதற்காகவே இயக்குநரைப் பாராட்டலாம்.

கண்ணம்மாவாக நடித்திருக்கும் வடிவுக்கரசியும் வேலுத் தாத்தாவாக வரும் அழகுவும் மூத்த கலைஞர்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். வளர்ப்பு பிள்ளைகளாக நடித்திருக்கும் நால்வரும் சென்னை வழக்கில் பேசி, இயல்பாக நடித்திருக்கிறார்கள். கேப்ரில்லா துடிப்பான பெண்ணாக சில இடங்களில் மிகை நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் அது பொருத்தமாகவே இருக்கிறது. அனுபமா குமாருக்கு கனமான கதாபாத்திரம். அதை உணர்ந்து நடித்திருக்கிறார். துணை ஆய்வாளராக வரும் அபிஷேக்கிற்கு
நீண்ட இடைவெளிக்குப்பிறகு நடிப்பை வெளிக்காட்ட கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

கதை நிகழும் கதாபாத்திரங்களின் வாழ்விடத்தையும் அது சார்ந்துள்ள காசிமேடு பகுதியையும் உயிரோட்டத்துடன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் திவ்யாங். கானா சாயல் கொண்ட பாடல்களின் வழியாக கதைக்களத்தை இன்னும் நெருக்கமாக உணர வைக்கிறது பாலசுப்ரமணியன்.ஜியின் இசை.

வெவ்வேறு வாழ்க்கைச் சூழல் கொண்ட கதை மாந்தர்களை இணைக்கும் கதைக்கான, திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் ‘என்4’ முழுமையான திரை அனுபவத்தைக் கொடுத்திருக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE