நகைச்சுவை நடிகரும், மிமிக்ரி கலைஞருமான கோவை குணா காலமானார்

By செய்திப்பிரிவு

நகைச்சுவை நடிகரும், மிமிக்ரி கலைஞருமான கோவை குணா உடல்நலக்குறைவால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 57.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அசத்தப் போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் கோவை குணா. தனது தனித்துவ உடல்மொழியால் ரசிகர்களை ஈர்த்தவர். ‘சென்னை காதல்’ என்ற படத்தில் நடிகராக நடித்துள்ளார். ‘கலக்கப் போவது யாரு’ என்ற நிகழ்ச்சியில் அவர் டைட்டில் வின்னரான இவர், கவுண்டமணி, ராதாரவி, சிவாஜி உள்ளிட்ட நடிகர்களின் குரலை மிமிக்ரி செய்வதில் புகழ்பெற்றவர். குறிப்பாக நடிகர் ஜனகராஜின் குரலை அப்படியே பிரதிபலிப்பவர் குணா.

இந்நிலையில், கடந்த ஓராண்டாக சிறுநீரக பிரச்சனையால் டாயாலிஸ் செய்து வந்த அவர் சில தினங்களுக்கு முன் உடல்நலக்குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த சூழலில் இன்று மதியம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். தற்போது அவரது உடல் கோவை அரசு மருத்துவமனையில் இருந்து அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. நாளை அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கோவை குணாவின் இறப்பிற்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் நகைச்சுவை நடிகர்கள் பல குரல் கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE