“சினிமாவில் திறமை மட்டும்தான் பேசும்” - நெப்போடிசம் குறித்து ராம் சரண் கருத்து

By செய்திப்பிரிவு

“சினிமாவில் திறமைதான் பேசும். உண்மையில் நான் அதை நம்புகிறேன். இங்கே வெற்றிபெற்ற ஒவ்வொரு கலைஞனுக்கும் பின்னால் திறமை இருக்கிறது” என நடிகர் ராம் சரண் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ராம் சரண் அளித்த பேட்டி ஒன்றில் அவரிடம், ‘இந்தி திரையுலகில் நெப்போடிசம் குறித்த விவாதம் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?’ என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “உண்மையில் என்னால் இதை புரிந்துகொள்ள முடியவில்லை. இது ஒரு ஆட்டு மந்தை போன்றதொரு மனப்பான்மை. இந்த கருத்து ஒரு கூட்டத்தாரின் எண்ணமாகவோ அல்லது தனி நபரின் எண்ணமாகவோ இருக்கலாம். என்னை பொறுத்தவரை நான் சினிமாவை சுவாசிக்கிறேன்; எனக்கு நடிப்பில் தான் முழு நாட்டமும் உள்ளது.

நான் என் திறமையை நிரூபிக்காமலிருந்திருந்தால் என்னால் சினிமாவில் 14 ஆண்டுகள் தாக்கு பிடித்திருக்க முடியாது. என் தந்தை என் சினிமாவுக்கான முதல் படியாக இருந்திருக்கலாம். ஆனால், அதன்பிறகான பயணத்தை நான் தான் மேற்கொண்டாக வேண்டும். சினிமாவில் திறமை தான் பேசும். அதை நான் உண்மையில் நம்புகிறேன். இங்கே வெற்றிபெற்ற ஒவ்வொரு கலைஞனுக்கும் பின்னால் திறமை இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

மேலும் தந்தை சிரஞ்சீவி முதல் நாள் படப்பிடிப்பின்போது ராம்சரணிடம் சொன்ன வார்த்தைகளை அவர் நினைவுகூர்ந்தார். “இது முதல் நாள். உன்னுடைய டீமை கவனித்துக்கொள். அவர்கள் தான் எப்போதும் உனக்கு அருகில் இருப்பவர்கள். அவர்கள் உன்னைப்பற்றி பேச ஆரம்பித்தால் உன்னுடைய கேரியர் முடிந்துவிட்டது” என சிரஞ்சீவி கூறியதாக ராம்சரண் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE