'விடுதலை' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'வழிநெடுக காட்டுமல்லி' பாடல் மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தின் மூலம் இயக்குநர் வெற்றிமாறன், இசைஞானி இளையராஜாவுடன் முதல் முறையாக இணைந்திருக்கிறார். ஏற்கெனவே இப்படத்தில் வரும், "ஒன்னோட நடந்தா கல்லான காடு" பாடல் வெளியாகி இருந்தது. இந்தப் பாடலை தனுஷ் உடன் இணைந்து அனன்யா பட் பாடியிருந்தார். சுகாவின் வரிகளில் வெளியான அந்தப் பாடல் ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா அண்மையில், நடந்தது.
இந்த இசை வெளியீட்டு விழாவில், படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா, படத்தின் மற்றொரு பாடலான "வழிநெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே" என்ற பாடலை மேடையில் பாடினார். பின்னர் அந்தப் பாடலின் லிரிக்கல் வீடியோவும் வெளியானது. அன்றுமுதல் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முழுவதும் காட்டுமல்லி பாடல் பற்றிய சிலாகிப்புகள், பேசுபொருளானது.
இன்னுமொரு கூடுதல் சிறப்பு, பாடலை எழுதிய இசைஞானியே, பின்னணி பாடகி அனன்யா பட்டுடன் சேர்ந்து பாடியிருப்பதுதான். பாடல் வெளியான மூன்று நாட்களில் 20 லட்சத்துக்கும் அதிகமான வியூஸ்களைப் பெற்றுள்ளது. தலைமுறை இடைவெளி, புதிய இயக்குநர்களின் வருகை, அவர்களது இசை சார்ந்த புரிதல்கள், நிகழ்கால தலைமுறையின் ரசனை, மாறியுள்ள இசை சார்ந்த தொழில்நுட்பங்களென இசையுலகம் வேறொரு தளத்தில் பயணித்துக் கொண்டிருந்தது.
இந்தச் சூழலில், இளையராஜா - வெற்றிமாறன் கூட்டணி குறித்து வெளியான இப்படத்தின் அறிவிப்பு பலரது எதிர்பார்ப்பை எகிறச் செய்தது. அதேநேரத்தில், அவ்வப்போது, வெற்றிமாறனுக்கும் ராஜாவுக்கும் பிரச்சினை என்றெல்லாம்கூட கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், இதையெல்லாம் பொய்யாக்கி இருக்கிறது இப்படத்தின் ட்ரெய்லரும், பாடல்களும். அதுவும் ‘வழிநெடுக காட்டுமல்லி’ பாடல், டச் ஸ்கிரீன் சமூகத்தினரை வெகுவாக ஈர்த்திருக்கிறது.
» “நான் இன்னும் கனவில்தான் இருக்கிறேன்” - ‘நாட்டு நாட்டு’ ஆஸ்கர் குறித்து ராம் சரண் நெகிழ்ச்சி
» கனவுகள் நிறைவேறும்... பெண்களே: சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது வென்ற மிஷெல் கூறிய அறிவுரை
இரைச்சலற்ற இசைக் கோர்ப்பு, கேட்டவுடன் ஸ்டோரேஜ் மெமரியில் டவுன்லோடாகிவிடும் மெட்டு, தங்கிலீஷ் கலக்காத எளிய தமிழ்ச் சொற்கள் என இப்பாடல் பல சிறப்புகளைக் கொண்டிருக்கிறது. அத்துடன், ஒருமுறை கேட்டாலே பிடித்துப்போகும் வகையில் எளிமையாக இருப்பதால், பாடல் கேட்ட பலரையும் கவர்ந்திருக்கிறது. அதேபோல், பாடல் வரும் கதைக்களங்களாக காட்டப்படும் காடுகளின் பசுமையும், அடர்வனத்தின் இருளும் பாடலோடு பாடலுடன் நம்மை ஒன்றச் செய்திருக்கிறது. அடர்ந்த காட்டுக்குள் வரும் இளையராஜாவின் குரல் பாடல் கேட்பவர்களுக்கு இனம்புரியாத மகிழ்ச்சியோடு மனதை லேசாக கனக்கவும் வைத்திருக்கிறது.
உழைக்கும் மக்களின் ஆசைகளையும், விருப்பங்களையும் வெளிப்படுத்தும் அந்தக் குரலுக்கு எப்போதும் ஒருவிதமான ஈர்ப்பு இருந்துகொண்டேயிருக்கிறது. அவரது இசையையும், பாடல்களையும் கேட்பதற்காகவே ட்யூன் செய்துவைக்கப்பட்டிருக்கும் நம் மனது, இலைதழைகளைப் பார்த்த ஆட்டிக்குட்டியைப் போல, ராஜாவின் குரல் கேட்ட மாத்திரத்தில் பின்செல்ல தொடங்கிவிடுகிறது. எஸ்.ஜானகி தொடங்கி என்எஸ்கே ரம்யா வரை ராஜாவுடன் சேர்ந்து டூயட் பாடல்களை பாடியிருந்தாலும், அனன்யா பட்டின் குரல் இருள் வனத்தின் குளுமை போல் அமைந்திருக்கிறது.
அதேபோல், இந்தப் படத்தின் மையப் பாத்திரத்தில் வரும் நடிகர் சூரிக்கு இசைஞானியின் குரலில் முதல் டூயட். பிரபலமான நாயகர்களுக்கு மட்டுமின்றி, இதுபோன்ற நகைச்சுவை மற்றும் குணசித்திரப் பாத்திரங்களில் நடித்துள்ள நடிகர் ஜனகராஜிக்கு இளையராஜா பல பாடல்களை பாடியிருக்கிறார். அந்தப் பாடல்கள் ரசிகர்களால் இன்றுவரை கொண்டாடப்படுபவை.
அந்த வகையில், சினிமா எனும் கனவுத் தொழிற்சாலையில் நுழைய, நடிகர் சூரியைப் போலவே பலர் இன்றுவரை போராடி வருகின்றனர். அவர்களில் அப்புக்குட்டி மற்றும் பங்கு என்ற ஆன்டனி குறிப்பிடத்தகுந்தவர்கள். இவர்கள் அனைவருமே சினிமா வாய்ப்புக்காக ஒரே காலக்கட்டத்தில் முயற்சித்தவர்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்த மூவருக்கும் இசைஞானியின் குரலில் பாடல் வெளிவந்திருப்பதுதான். அப்புக்குட்டிக்கு 'அழகர்சாமியின் குதிரை' படத்திலும், பங்கு என்கிற ஆன்டனிக்கு 'மேற்குத் தொடர்ச்சி மலை' திரைப்படத்திலும் இளையராஜாவின் குரலில் பாடல் வெளிவந்திருந்த நிலையில், இம்முறை அந்த வாய்ப்பு சூரிக்கு கிடைத்திருக்கிறது.
டேட்டா தீர்ந்து போனாலோ, நெட் கிடைக்கவில்லை என்றாலோ, சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரையும் டவுனாக்கிவிடும், இன்றைய டச் ஸ்கிரீன் வாழ்க்கையில், மனித உணர்வுகளின் அத்தனை உணர்ச்சிகளும், வெளிப்பாடுகளும் உயிரற்ற எமோஜி பொம்மைகள் மூலமே கடத்தப்படுகின்றன. சட்டப்பையில் கதிர்வீச்சை சுமக்கும் செல்போன் சமூகமாக மாறியிருக்கும் இப்படியான ஒரு காலக்கட்டத்தில், வழிநெடுக காட்டுமல்லிப் பாடலை விதைத்து, மனித மனங்களின் ஈரத்தில் துளிர்க்கிறார் இளையராஜா. செவிவழி சென்று உள்ளங்களை ஆக்கிரமிக்கும் இதுபோன்ற இரைச்சலற்ற இசையும் பாடலும் எந்த காலத்திலும் கேட்டு ரசிக்கப்படும் என்பதற்கு நிகழ்கால உதாரணமாக மாறியிருக்கிறது 'வழிநெடுக காட்டுமல்லி' பாடல்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago