இசைஞானி இளையராஜாவின் இசையில் கடந்த 1990-ம் ஆண்டு வெளிவந்த திரைப்பம் பணக்காரன். தமிழகத்தின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்தின் திரைப்படங்களுக்கு ராஜாவின் இசை எப்போதுமே சிறப்பானதாக அமைந்திருக்கும். பெரும்பாலான ரஜினி திரைப்படங்களின் டைட்டில் கார்டிலிருந்தே அந்த இசையின் சிறப்பை கவனிக்க முடியும். ரஜினியின் அறிமுகக் காட்சி, சண்டைக்காட்சிகள் என கிடைத்த இடத்தில் எல்லாம், படத்தின் இசையமைப்பாளர், தான் என்பதை உணர வைத்திருப்பார் இசைஞானி. ரஜினியின் வெள்ளி விழா திரைப்படங்களில் பெரும்பாலானவை இளையராஜா இசையில் வெளிவந்தவை.
குறிப்பாக, ரஜினி நடித்த திரைப்படங்களின் பாடல்களிலும், பின்னணி இசைக்கோர்ப்புகளிலும் பிராஸ் (Brass instruments) இசைக்கருவிகளை இசைஞானி அளவுக்கு யாரும் அத்தனை சிறப்பாக பயன்படுத்தியது இல்லை என்றே சொல்லலாம். பொதுவாக பிராஸ் (Brass instruments) இசைக்கருவிகளில் பல வகைகள் இருந்தாலும், ட்ரம்பெட், ட்ராம்போன், பிராஸ் இசைக்கருவி குடும்பத்தைச் சேர்ந்த ஆல்டோ சாக்ஸ், சுப்ரானோ சாக்ஸ், கிளாரிநெட் ஆகிய கருவிகளை ரஜினி நடித்த படங்களிலும், பாடல்களிலும் பல இடங்களில் கேட்கமுடியும். அந்த மேற்கத்திய இசைக்கருவியின் இணையில்லா சத்தம் ராகதேவனின் இசையில் பாடல் கேட்பவர்களுக்கு எப்போதும் எனர்ஜி டானிக்காக இருப்பவை.
அப்படித்தான் இந்த 'இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது ' பாடலும், இப்பாடல் எந்த நேரத்தில் கேட்டாலும் பாடல் கேட்பவர்களை உற்சாகப்படுத்தும். இந்தப் பாடலை கவிஞர் வாலி எழுதியிருப்பார். எஸ்பிபியுடன் இணைந்து சித்ரா பாடலை பாடியிருப்பார். நள்ளிரவு கடந்து விழித்திருப்போர், பணி செய்வோர், பயணம் செய்வோரின் பிளே லிஸ்டில் இப்பாடல் கட்டாயம் இடம்பிடித்திருக்கும். அதேநேரம் பகல் நேரங்களில் கேட்டாலும் இப்பாடல் கேட்பவர்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும்.
இப்பாடலின் தொடக்கமே, கடிகாரம் அதில் உள்ள முட்களின் நகர்வு, பழைய கடிகாரங்களில் உள்ள சாவிகளைத் திருகும்போது கேட்கும் சத்தத்துடன், டிரம்ஸ் சிம்பலின் இசை, டைமிங்கென ராஜா பாடல் கேட்பவர்களை அற்புதத்துக்கு ஆயத்தமாக்குவார். அந்த இடத்தில் ஜோடியாய் வரும் ட்ரெம்பட்டும், ட்ராம்போனும் இணைசேர, தொடர்ந்துவரும் பெல்ஸ்கள் துணைசேரும். அப்போது எஸ்பிபி, "டிங் டாங் டாங் டிங் டாங்" என்று பாடலின் பல்லவியைத் தொடங்கியிருப்பார்.
» ‘அயோத்தி’ பட கதைத் திருட்டு சர்ச்சை - எழுத்தாளர் மாதவராஜின் கோரிக்கையை ஏற்ற படக்குழு
» நடிப்பில் மிரட்டும் சூரி - கவனம் ஈர்க்கும் ‘கொட்டுக்காளி’ முதல் பார்வை வீடியோ
"இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது
ஒன்றும் அசையாமல் நின்று போனது
காதல் காதல் டிங் டாங்
கண்ணில் மின்னல் டிங் டாங்
ஆடல் பாடல் டிங் டாங்
அள்ளும் துள்ளும் டிங் டாங்" என்று பாடலின் பல்லவி எழுதப்பட்டிருக்கும்.
பல்லவியின் ஒவ்வொரு வரிகளின் முடிவிலும் பேஸ் கிடாரை இசைத்து பாடல் கேட்பவர்களின் மனங்களை மகிழ்ச்சியில் மிதக்கச் செய்திருப்பார் இளையராஜா.
இவை முடிந்த இடத்தில் தொடங்கும் சுப்ரோனோ சாக்ஸ் இசையில் இருந்து முதல் சரணத்தின் இடையிசைதொடங்கும். சுப்ரானோ சாக்ஸ் விட்டதை ட்ரெம்பட் ஒருமுறை இசைத்து மகிழும். அங்குதான் பாடலின் 1.30-வது நிமிடத்தில் இருந்து 1.49 வரையிலான காலத்திற்குள் ராகதேவன் அந்த இசை அற்புதத்தை நிகழ்த்தியிருப்பார். பேஸ் கிட்டாரும், வயலின்களும் இசைக்கப்பட்டிருக்கும் அழகுக்கு ஈடு இணையே இருக்காது. அதுவும் ஒரே சீராக அச்சுப்பிசகாமல் ஆர்ப்பரித்து செல்லும் அந்த கிடாரின் வேகத்திற்கு பாடல் கேட்பவர்களின் மனதை பறக்க வைத்திருப்பார் இசைஞானி. அங்கிருந்து முதல் சரணம் தொடங்கும்.
"காதலில்லா ஜீவனை நானும் பார்த்ததில்லை
வானமில்லா பூமிதன்னை யாரும் பார்த்ததில்லை
தேகமெங்கும் இன்பம் என்னும் வேதனை வேதனை
நானும் கொஞ்சம் போட வேண்டும் சோதனை சோதனை
உந்தன் கை வந்து தொட்ட சத்தம்
டிங் டா டிங் டாங் டா டிங் டாங்
அன்பு முத்தங்கள் இட்ட சத்தம்
டிங் டா டிங் டாங் டா டிங் டாங்
அங்கும் இங்கும் டிங் டாங்
ஆசை பொங்கும் டிங் டாங்
நெஞ்சில் நெஞ்சம் மஞ்சம் கொள்ளும்"
இந்த சரணத்தில், நானும் கொஞ்சம் போட வேண்டும் சோதனை சோதனை, அன்பு முத்தங்கள் இட்ட சத்தம், இந்த வரிக்கு முன்பு வரும், டிங் டா டிங் டாங் டா டிங் டாங் என்ற வரிகளைப் பாடும்போதும், துண்டு பல்லவியில் வரும் அள்ளும் துள்ளும் டிங் டாங் என்ற வரிகளைப் பாடும்போதும் எஸ்பிபி கொஞ்சியிருப்பார். அதுவும் அந்த அள்ளும் துள்ளும் டிங் டாங் என பாடும்போது வரும் அவரது ஸிக்னேச்சர் ஸ்மைல் அவர் இந்த பூமியில் இன்னும் இருப்பதைப் போன்ற உணர்வை பாடல் கேட்பவர்களுக்கு கொடுத்திருக்கும்.
இப்பாடலின் இரண்டாவது சரணத்துக்கு முன் வரும் இடையிசை டிரம்ஸ் பேக்கப்பில் ட்ரெம்பட், ட்ராம்போனுடன் தொடங்கும். பின்னர் அதனுடன் கிடார், கீபோர்ட் சேர்ந்து வசீகரிக்கும். பிறகு, சற்று நேரத்தில் துணைசேரும் வயலின்கள் அந்த இடையிசை முழுவதையுமே தங்களுக்கானதாக மாற்றிவிடும். அங்கிருந்து தொடங்கும் பாடலின் இரண்டாவது சரணம். இரண்டாவது சரணம் முடிந்து பாடல் முடிவதற்கு முன்வரும் வரும் டிங் டா டிங் டாங் பாடும்போது எஸ்பிபி மீண்டுமொருமுறை சிரித்திருப்பார். இசை ரசிகர்களை விட்டு அவர் நீங்காமல் இருப்பதையே அந்தச் சிரிப்பு பாடல் கேட்பவர்களுக்கு உணர்த்தியிருக்கும்.
"காதல் கண்ணன் தோளிலே நானும் மாலை ஆனேன்
தோளில் நீயும் சாயும்போதும் வானை மண்ணில் பார்த்தேன்
நீயும் நானும் சேறும்போது கோடையும் மார்கழி
வார்த்தை பேச நேரம் ஏது கூந்தலில் பாய் விரி
எங்கு தொட்டாலும் இன்ப நாதம்
டிங் டா டிங் டாங் டா டிங் டாங்
என்றும் தீராது நெஞ்சின் வேகம்
டிங் டா டிங் டாங் டா டிங் டாங்
அங்கும் இங்கும் டிங் டாங்
சொர்க்கம் தங்கும் டிங் டாங்
உந்தன் சேவை எந்தன் தேவை" என்று பாடலின் இரண்டாவது சரணத்தை வாலி எழுதியிருப்பார்.
பேஸ் கிட்டார்: வெஸ்டர்ன் கிளாசிக்கல் இசையில் அதீத புலமை கொண்டவரான இசைஞானியின் டீமில் கிடார் இசைக்க பிரத்யேக கலைஞர்கள் இருந்தனர். குறிப்பாக பேஸ் கிட்டாரிஸ்ட் சசிதரன். ராஜாவின் அக்கா மகனான இவர், மறக்க முடியாத பல பாடல்களுக்கு பேஸ் கிட்டார் வாசித்துள்ளார்.
பொதுவாக நமது கேட்கும் திறன் வெளி காது, நடு காது மற்றும் உள் காது என மூன்றின் செயல்பாடுகளை உள்ளடக்கியது. இதில் இளையராஜாவின் பாடல்களில் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகள் மூன்று காதுகளையும் தனித்தனியே செயல்பட வைக்கிறதோ என்று எண்ணத் தோன்றும். அந்தளவுக்கு பல்வேறு இசைக்கருவிகள் இசைக்கப்பட்டிருக்கும்.
அதுவும் அந்த பேஸ் கிட்டாரின் அடர்த்தி மிகுந்த ஓசை மனதை இதமாக வருடிக் கொண்டிருக்கும். இந்தப் பாடலில் கிடாரில் மேஜர், மைனர் ஸ்கேல்ஸின் கார்ட்ஸ் ஒரு பக்கம், பேஸ் கிடார் நோட்டேஷன்ஸ் ஒருபக்கம் என இந்தப் பாடலைக் கேட்கும் பொழுதெல்லாம் நம்மை ஆக்கிரமித்திருப்பார் இசைஞானி. கேட்பதற்கு இதமாக இருக்கும் அதேநேரத்தில், பாடல் முழுவதும் நொடி முள் போல தொடரும் பேஸ் கிடார் இசைக்கப்படும் விதமும் வியக்கத்தக்கதே. ராகதேவனின் ராஜகீதம் தொடரும்.
'இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது' பாடல் இணைப்பு இங்கே
முந்தைய அத்தியாயம்: இளையராஜாவுடன் இசையிரவு 29 | ‘ஆகாய வெண்ணிலாவே’ - கிறங்கடிக்கும் ‘கிராஸ் ரிதம்’!
முக்கிய செய்திகள்
சினிமா
47 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago