தொடர் தோல்விகள்... என்னதான் ஆச்சு அக்‌ஷய் குமார் படங்களுக்கு? - ஒரு பார்வை

By கலிலுல்லா

பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் அக்‌ஷய் குமார் படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வருகின்றன. அது குறித்தும் அவரது கடந்த கால படங்களின் வசூல் குறித்தும் விரிவாகப் பார்ப்போம்.

‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு?’ என்பது போல அக்‌ஷய் குமார் படங்களுக்கு என்னதான் ஆச்சு என பாலிவுட்டைத் தாண்டிய இந்த கேள்வி இந்தியா முழுவதும் எழுந்துள்ளது. உண்மையைச் சொல்லப்போனால் அவருக்கே கூட அது தெரியவில்லை. ‘‘ரசிகர்களை குற்றம் சொல்ல முடியாது. அவர்களின் ரசனை மாறிவிட்டது. நாம் தான் அவர்களுக்கு தகுந்தாற்போல கதையை மாற்ற வேண்டும்” என ஒவ்வொரு படங்களின் தோல்வியின்போதும் கிளிப்பிள்ளையாய் சொல்லி வருகிறார் அக்ஷய். ஆனால், ‘சொல்றீங்களே தவிர, செய்ய மாட்றீங்களே ஜி’ என அவரின் ரசிகர்கள் நொந்துகொண்டது தான் மிச்சம்.

2021-ல் அக்‌ஷய் குமார் படங்கள்:

பெல்பாட்டம்: கரோனா காலகட்டத்தில் அடைப்பட்டிருந்த மக்கள் பல்வேறு சினிமாக்களைப்பார்த்து தங்களின் ரசனைகளில் மாற்றம் கண்டிருந்த நேரம். ஆகஸ்ட் 19-ம் தேதி வெளியானது அக்‌ஷய்யின் ‘பெல்பாட்டம்’ திரைப்படம். ரூ.160 கோடிக்கும் மேலான பட்ஜெட்டில் உருவான இப்படத்தின் முதல் நாள் வசூல் வெறும் ரூ.2.75 கோடி. முதல் வாரத்தில் ரூ.20 கோடியைக்கூட தாண்டவில்லை. ஒட்டுமொத்தமாக படம் ரூ.40 கோடியை மட்டுமே வசூலித்தது.

சூரியவன்ஷி: இந்த தோல்விக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்தது தான் ‘சூரியவன்ஷி’. நவம்பர் மாதம் வெளியான இப்படம் முதல் நாள் ரூ.26 கோடியை வசூலித்தது. ரூ.160 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.200 கோடியைத் தாண்டி வசூலித்தது.

அட்ராங்கி ரே: டிசம்பர் 24-ம் தேதி நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான படம் ‘அட்ராங்கி ரே’. தனுஷ், சாரா அலிகானுடன் இணைந்து அக்ஷய்குமார் படத்தில் நடித்திருந்தார். படம் கலவையான விமர்சனங்களைப்பெற்றது.

அக்‌ஷய் குமாருக்கு மோசமான 2022:

பச்சன் பாண்டே: ஃபஹத் சாம்ஜி இயக்கத்தில் மார்ச் 18-ம் தேதி வெளியான இப்படத்தில் கீர்த்தி சனோன், ஜாக்லீன் பெர்னான்டஸூடன் இணைந்து அக்‌ஷய் குமார் நடித்திருந்தார். தமிழில் வெளியான ‘ஜிகர்தண்டா’ படத்தின் தழுவலான இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதன் பலமான ரூ.168 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ஒட்டுமொத்தமாக ரூ.70 கோடி வசூலித்து தோல்வியடைந்தது.

சாம்ராட் பிருத்விராஜ்: வரலாற்று கதையை அடிப்படையாக கொண்டு உருவான ‘சாம்ராட் பிருத்விராஜ்’ படம் பான் இந்தியா முறையில் பிரமாண்டமாக வெளியிடப்பட்டது. ரூ.200 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான இப்படம் வெறும் ரூ.80 கோடியை மட்டுமே வசூலித்தது. படத்தின் மீது அக்ஷய்குமார் அதீத எதிர்பார்ப்பை வைத்திருந்தார்.

ரக்ஷா பந்தன்: ஆகஸ்ட் 11-ம் தேதி ஆமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ படத்துடன் வெளியான ‘ரக்ஷா பந்தன்’ பெரிய அளவில் சோபிக்கவில்லை. ரூ.70 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.60 கோடி வசூலை நெருங்கியது. ‘குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி’யாக படம் இருக்கும் என நம்பியிருந்தார் அக்சய்.

ராம் சேது: ராமர் பாலம் குறித்த கதையை அடிப்படையாக கொண்டு பான் இந்தியா முறையில் வெளியிடப்பட்டது ‘ராம் சேது’. ரூ.150 கோடிக்கும் அதிகமான பட்ஜெட் கொண்ட இப்படம் உலகம் முழுவதும் ரூ.90 கோடியை வசூலித்தது. கிட்டதட்ட 60 கோடி ரூபாய் அளவில் திரையரங்க வெளியீட்டில் நஷ்டத்தை சந்தித்தது படம்.

துயர் துடைக்குமா 2023? - இந்நிலையில், கடந்த ஆண்டு ஒட்டுமொத்த பாலிவுட்டுக்கே சோகமான ஆண்டாக வைத்துக்கொண்டாலும் தற்போது அந்த துயரத்தை ரூ.1000 கோடி வசூலுடன் ‘பதான்’ மீட்டெடுத்து வருகிறது. இந்நிலையில், கடந்த பிப்வரி 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியான அக்‌ஷய்குமாரின் ‘செல்ஃபி’ முதல் நாள் ரூ.2.50 கோடியுடன் மோசமான தொடக்கத்தை கொடுத்துள்ளது. 3 நாட்கள் வார விடுமுறைகளைச் சேர்த்து படம் ரூ.10 கோடி வசூலிக்க தடுமாறி வருகிறது. ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படத்தின் மோசமான வரவேற்பு அக்‌ஷய் குமாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அடுத்து அவரது நடிப்பில் வெளியாக உள்ள ‘சூரரைப்போற்று’ படத்தின் இந்தி ரீமேக் அவரின் கடந்த கால தோல்விகளுக்கு முற்றுப்புள்ளியாக இருக்கும் என நம்பப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE