லைட்மேன்களின் குடும்பங்களுக்கான நிதி ஆதாரத்துக்காக ரஹ்மான் நடத்தும் இசை நிகழ்ச்சி!

By செய்திப்பிரிவு

தமிழ்த் திரைத் துறையில் லைட்மேன்களின் குடும்பங்களுக்காக ஒரு நிதி ஆதாரத்தை ஏற்படுத்தும் விதமாக, மார்ச் 19-ஆம் தேதி நேரு உள்ளரங்கில் மாபெரும் இசை நிகழ்ச்சி ஒன்றை ஏ.ஆர்.ரஹ்மான் நடத்தவுள்ளார்.

இது தொடர்பாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேனளத்தலைவர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறிய நம்பிக்கை ஒளிக்கீற்றாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு நற்பணியை துவக்குகின்றார். திரைப்படத் துறையில் ஓர் அங்கமான லைட்மேன்கள் பணிபுரியும்போது விபத்து நேர்ந்தால், அவர்களுக்கு உதவ ஒரு நிதியாதாரத்தை (CORPUS FUND) ஏற்படுத்தவுள்ளார். இதற்காக வருகின்ற மார்ச் 19-ஆம் தேதி நேரு உள்ளரங்கில் மாபெரும் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். இதில் திரட்டப்படுகின்ற நிதியை பணிபுரியும் லைட்மேன்கள் விபத்தில் இறந்தால், அவர்கள் குடும்பத்திற்கு உதவ, இந்த நிதியை பயன்படுத்துங்கள் என தெரிவித்துள்ளார்.

தானாக முன்வந்து இந்த உதவியை செய்கின்ற அவருக்கு தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் எங்கள் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த நிதி லைட்மேன் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்களுக்கு மட்டும் ஆகும். இதுபோன்றே அனைத்து தொழிலாளர்களுக்கும் உதவுகின்ற திட்டத்தை சம்மேளனம் செய்யுமானால் நான் உடனிருந்து ஒத்துழைப்பேன் என்று உறுதியளித்துள்ளார்.

இது, ஏ.ஆர்.ரஹ்மானை முன்னுதாரணமாக கொண்டு திரைப்படத்துறையில் உள்ள அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இதுபோன்றே தொழிலாளர்களுக்கு உதவ முன் வரவேண்டும் என பணிவன்புடன் கோரிக்கை வைக்கின்றோம்.

திரைப்படத் துறையில் உள்ள அனைவரும் அவர்களின் சம்பாத்தியத்தில் 1 % சதவிகித்தை நன்கொடையாக வழங்கினால் திரைப்படத் துறையில் அனைத்து தொழிலாளர்களும் காப்பாற்றப்படுவார்கள் என்பதை தெரிவிக்க விரும்புகின்றோம். அதுபோன்றே தமிழக அரசும் திரைப்பட டிக்கெட்டுகளில் ஒரு டிக்கெட்டிற்கு ஒரு ரூபாய் என பிடித்தம் செய்து ஒரு நிதியாதாரத்தை உருவாக்கி 60 வயது கடந்த திரைப்பட தொழிலாளர்களுக்கு மாத ஓய்வு ஊதியம் வழங்க ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE