ராமராஜனின் ‘சாமானியன்’ படத்தை வெளியிட தடை கோரிய மனு தள்ளுபடி

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: நடிகர் ராமராஜன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சாமானியன்’ திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

எக்ஸட்ரா எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், நடிகர்கள் ராமராஜன், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடிப்பில் ‘சாமானியன்’ என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தை ராஹேஷ் என்பவர் இயக்கி, இளையராஜா இசை அமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு 2022-ம் ஆண்டு அக்டோபரில் தொடங்கியிருந்தது.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்துவிட்டு ஆர்ட் அடிக்ட் என்கிற நிறுவனத்தின் உரிமையாளரான வியன் ஆர்மான் எனவர் ‘சாமானியன்’ என்கிற பெயரில் படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “2012-ம் ஆண்டில் இந்தப் படத்தின் தலைப்பை பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து வருகிறேன். அதே பெயரில் இந்த திரைப்படத்தை வெளியிடுவது காப்புரிமையை மீறிய செயல். எனவே, சாமானியன் என்கிற தலைப்பில் இந்தப் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது எக்ஸட்ரா நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், "நாங்களும் அந்தப் படத்தின் தலைப்பை பதிவு செய்துள்ளோம். அது ஏப்ரல் மாதம் வரை செல்லுபடியாகும் என்பதால் இந்தத் தலைப்பை பயன்படுத்தியதில் தவறில்லை.

இந்தத் திரைப்படத்திற்காக 5 கோடி ரூபாயும், விளம்பரத்திற்காக ஒரு கோடி ரூபாயும் செலவழிக்கப்பட்டுள்ளது. திரைப்படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, இந்தப் படத்தின் தலைப்பிற்கு காப்புரிமை கேட்க முடியாது. இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று வாதிட்டார்.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE