அரிதான அசத்தல் கிராமிய சினிமா! - கார்த்தி அறிமுகமான 'பருத்திவீரன்’ வெளியாகி 16 ஆண்டுகள்

By ச.கோபாலகிருஷ்ணன்

தமிழ் சினிமா வரலாற்றில் பெரிதும் பாராட்டப்பட்ட கிராமியத் திரைப்படங்களில் முக்கியமான படைப்பான ‘பருத்திவீரன்’ பிப்ரவரி 23, 2007 அன்று வெளியானது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் கிராமத்து வாழ்வியலை, தென் தமிழகக் கிராமத்துச் செம்மண்ணின் வெம்மையை, அந்த மக்களின் வீரமும் ஈரமும் நிறைந்த வாழ்க்கையை, உயிர்ப்புடன் பதிவு செய்ததில் ‘பருத்திவீர’னுக்கு இணையாக இன்னொரு படம் வரவில்லை.

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதற்காக குடும்பத்தாலும் சாதிய சமூகத்தாலும் ஒதுக்கிவைக்கப்பட்டு. அதனாலேயே உயிரிழந்தவரின் மகன்தான் படத்தின் நாயகனான பருத்திவீரன். சித்தப்பாவால் வளர்க்கப்பட்டு சாராயம், சூதாட்டம், அடிதடி, பாலியல் தொழிலாளிகளுடன் பழக்கம் என அனைத்து ’தீய’ குணங்களும் கொண்ட இளைஞனாக ஊரில் சண்டித்தனம் செய்துகொண்டு திரிகிறான்.

ஆனால், அவன் மனதுக்குள் இருக்கும் ஈரத்தை புரிந்து கொண்டு அவனை உயிருக்கு உயிராகக் காதலிக்கும் மாமன் மகளின் அப்பழுக்கற்ற அன்பு அவனை பொறுப்புமிக்க மனிதனாக்குகிறது. இருந்தாலும் ஆதிக்க சாதி உணர்வாளரான மாமன் குடும்பமும், அவர்களின் சுற்றத்தாரும் இந்தக் காதலை எதிர்க்கின்றனர். இந்தச் சாதிவெறியர்களின் கொடுங்கரங்களிலிருந்து தப்பித்தாலும் நாயகன் செய்த சில தவறுகளின் தீய விளைவுகள் அவன் மீது உயிரையே வைத்திருந்த பெண்ணைச் சிதைத்து அவர்கள் இருவரின் உயிரையும் பறிக்கின்றன.

கிராமங்கள் என்றால் விவசாயம், வயல்காடு, ஆற்றங்கரை, வெள்ளந்தியான மனிதர்கள், ஆலமரத்தடி பஞ்சாயத்து, திண்ணைப் பேச்சுகள் என அதுவரை தமிழ் சினிமாவின் மிகப் பெரும்பாலான கிராமத்துப் படங்கள் காண்பித்து வந்தன. ஆனால், கிராமங்களின் இன்னொரு தவிர்க்க முடியாத யதார்த்தமான சாதி மேட்டிமை உணர்வை, தீண்டாமையை, சாதிய ஒடுக்குமுறை, அதனால் எளிய மனிதர்களின் வாழ்வு தொடங்குவதற்கு முன்பே சிதைவுறுவதை எந்தச் சமரசமும் இன்றி பதிவு செய்தது என்பதனாலும்தான் ‘பருத்திவீரன்’ கிராமியத் திரைப்படங்களின் வரலாற்றில் மிக முக்கியமான திரைப்படமாகிறது. படத்தின் இறுதிக் காட்சியில் சாதி ஆதிக்கம் போன்ற சமூகக் காரணிகள் மட்டுமல்லாமல் தனிநபர்கள் செய்யும் பிழைகளும் அவர்களின் தலையில் விழக்கூடிய பாறாங்கல்லாக மாறிவிடக்கூடும் என்னும் இயற்கை நியதியும் உணர்த்தப்பட்டிருக்கும்.

’மெளனம் பேசியதே’ என்னும் அழகான மாறுபட்ட நகர்ப்புற காதல் படத்தையும், ‘ராம்’ என்னும் உளவியல் சார்ந்த த்ரில்லர் படத்தையும் கொடுத்து ரசிகர்கள், விமர்சகர்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்த இயக்குநர் அமீர் ‘பருத்திவீரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமா வரலாற்றின் முக்கியமான இயக்குநர்களின் பட்டியலில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இந்தப் படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்குமான நடிகர் தேர்வு, மதுரை மாவட்டத்து கிராமங்களை அச்சு அசலாகப் பிரதிபலிக்கும் லொகேஷன்கள் என ஒவ்வொரு விஷயத்தையும் யதார்த்தத்துக்கு நெருக்கமான வகையில் திரையில் செதுக்கியிருப்பார் அமீர். அதே நேரம் ஆவணபடத்தன்மை ஏற்பட்டுவிடாமல் காதல், பாசம், அன்பு, அற உணர்வு, வெள்ளந்தித்தனம், வீரம், கோபம், வன்முறை, வன்மம் என உணர்ச்சிகளின் கலவையால் உயிர்ப்பு மிக்க படைப்பாகவும் இதை உருவாக்கி இருப்பார். இவ்வளவு யதார்த்தமான திரைப்படத்தில் நகைச்சுவைக் காட்சிகள், சண்டைக் காட்சிகள், பாடல்கள் அனைத்தும் அழகாக கோர்க்கப்பட்டிருக்கும். அவை அனைத்தும் ரசிகர்களைக் கவரும் வகையிலும் அமைந்திருந்தன. இப்படி ஒரு அசலான வாழ்வியல் படம் 300 நாள்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி வணிக வெற்றியையும் குவித்தது இதனால்தான்.

தமிழ் சினிமாவில் எத்தனையோ கதாநாயகர்கள் மிகப் பெரிய வெற்றிகளைச் சுவைத்திருக்கிறார்கள். ரசிகர்கள் மனங்களில் என்றென்றும் நீங்கா இடம்பெற்றிருக்கிறார்கள். ஆனால், மிகச் சிலர் மட்டுமே அறிமுகப் படத்திலேயே ரசிகர்கள், விமர்சகர்கள், திரையுலகம் என அனைவரையும் அதிசயிக்க வைத்திருக்கிறார்கள். அறிமுகப் படத்திலேயே அனைவரையும் ஏறெடுத்துப் பார்க்க வைத்த அரிதான நடிகர்களில் ஒருவராக இந்தப் படத்தின் மூலம் தவிர்க்க முடியாத தடம் பதித்தார் நடிகர் கார்த்தி.

மூத்த நடிகர் சிவக்குமாரின் மகனும், அப்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக வளர்ந்து விட்டிருந்த சூர்யாவின் தம்பியுமான கார்த்தி தோற்றம், உடைகள், உடல்மொழி, பார்வை என அனைத்திலும் பருத்திவீரனாகவே உருமாறி இருந்தார். இந்தப் படத்தின் மூலம் அமைந்த சிறப்பான தொடக்கம் ஒற்றை நிகழ்வல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் தொடர்ந்து பல திரைப்படங்களில் பலவகையான கதைக்களங்களில் வேறுபட்ட பல கதாபாத்திரங்களில் நடித்து இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயக நடிகர்களாக நட்சத்திர வானில் ஒளி வீசிக் கொண்டிருக்கிறார் கார்த்தி.

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் திரைப் பயணத்தில் ‘பருத்திவீர’னுக்கு முதன்மையான இடம் உண்டு. யுவன் தன்னால் நாட்டாரியல் இசைக் கருவிகளில் கிராமத்து மண்மனம் வீசும் இசையை கச்சிதமாகவும் அற்புதமாகவும் அளிக்க முடியும் என்று பாடல்களில் மட்டுமல்லாமல் பின்னணி இசை மூலமாகவும் சந்தேகத்துக்கு இடமின்று நிரூபித்தது இந்தத் திரைப்படத்தின் மூலமாகத்தான். ‘அறியாத வயசு’, ‘அய்யய்யோ’ ஆகிய இரண்டு பாடல்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு தமிழ் சினிமாவின் கிராமத்து காதல் பாடல் தொகுப்புகளில் என்றென்றும் தவிர்க்க முடியா இடம் பிடித்தன. ‘ஊரோரம் புளியமரம்’ பாடல் நாட்டாரியல் இசைக் கருவிகளை சினிமாவுக்கான எந்த மாற்றங்களையும் செய்யாமல் அப்படியே ஒலிக்கச் செய்த அரிதான பாடல்.

இந்தப் படத்தில் முத்தழகாகவே வாழ்ந்து காண்பித்திருந்த பிரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. ஒரு எளிய கிராமத்துப் பெண்ணின் சுயநலமற்ற காதலையும், உண்மையான காதல் கொடுக்கும் ஆவேசத்தையும், வைராக்கியத்தையும் வெகு இயல்பாகவும் சிறப்பாகவும் வெளிப்படுத்தியிருந்தார் பிரியாமணி. கிட்டத்தட்ட இருபது ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தமிழ் நடிகை ஒருவருக்கு இந்த விருது கிடைத்தது என்னும் பெருமையையும் ‘பருத்திவீரன்’ பெற்றுக்கொண்டது. அதோடு ‘பருத்திவீரன்’ படத்தின் படத்தொகுப்பாளர் ராஜா முகமதுக்கும் தேசிய விருது கிடைத்தது. செம்மண் புழுதியையும், வெக்கையையும் உணர வைத்த ராம்ஜியின் ஒளிப்பதிவும் இந்தப் படத்தின் உலகத் தரத்துக்கு இன்னொரு சான்று.

நாயகனின் சித்தப்பாவாக நீண்ட இடைவெளிக்குப் பின் திரையில் தோன்றிய நடிகர் சரவணன், குணச்சித்திர நடிகராக தன் இரண்டம் ஆட்டத்தைத் தொடர இந்தப் படம் காரணமானது. நாயகியின் தந்தையாக பொன்வண்ணன், தாயாக சுஜாதா சிவகுமார், டக்ளஸ் என்னும் மறக்க முடியாத நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் கஞ்சா கருப்பு, ‘பொணந்தின்னி’யாக செவ்வாழைராஜ், நாயகனுடன் சுற்றித் திரியும் சிறுவன் என அறிமுக நடிகர்களும் ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்தனர்.

இப்படியாக தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான படம் என்று விமர்சகர்களால் பாராட்டப்படுவதோடு ரசிகர்கள் மனங்களில் நீங்கா இடம்பிடித்திருக்கும் ’பருத்திவீரன்’ கிராமியப் படங்களுக்கான புதிய இலக்கணம் வகுத்த படைப்பு என்று சொல்வது மிகையல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE