சினிமாபுரம் - 5 | கர்ணன்: தனிமைக் காதலுக்கு அங்கீகாரம் தந்த சமகால காவியம்!

By அனிகாப்பா

காதல் என்பது ஓர் உணர்வு; காலத்தின் அத்தனைச் சூழல்களுக்குள் சிக்கினாலும் விரும்பும்போது அது தன்னைத் தகவமைத்துக் கொண்டு, வேலி தாண்டாமல் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் என்பதனை கிராமத்து காதலர்கள் உணர்ந்தே இருந்தார்கள் என்றே தோன்றுகிறது. சாதி, வர்க்கம், தலைமுறைக் கோபம், ஆடு மாடு சண்டை என அவர்களின் காதலைப் பிரிக்க ஆயிரமாயிரம் காரணங்கள் இருந்த போதிலும், முள்ளந்தோலுக்குள் மறைந்திருக்கும் பலாச்சுளை போல, வேரும் வேர்மண்ணும் மண்டி மறைந்து வைத்திருக்கும் அடிக்கரும்பின் தீஞ்சுவை போல கரட்டுக்காடுகளில் பூத்த அந்தக் காதல் காலந்தோறும் தன்னை காப்பாற்றிக்கொண்டே வந்திருக்கிறது.

முறைப்பையன் காதல் தொடங்கி சாதி மறுப்பு காதல் வரிசைகளில் கிராமங்கள் தனக்கென தனித்தன்மையுடன் தன்னுள் புதைத்து, பாதுகாத்து வைத்திருக்கும் காதல் ஒன்று இருக்கிறது. துணையை இழந்து வாழ்க்கையை விதியெனக் கடத்தும் தனித்திருக்கும் வயதானவர்களுக்குள் பூக்கும் காதல். இறந்த கால அன்புக்கும் எதிர்கால ஏக்கத்திற்கும் இடையில் ஊசலாடிக்கொண்டிருக்கும் அந்தக் காதல்.

காலத்தின் எல்லா வலிகளுக்கும் வடிகால் வைத்திருக்கும் கிராமங்கள் உரிய காலத்தில் சொல்லப்படாத அந்த வெளிப்படாத காதலுக்கு வடிகால் வைத்திருக்கின்றன. அனுபவங்கள் புடம்போட்டபின் வரும் அந்த காதல் ஒரு சின்னப்புன்னகையிலோ... "நீ அன்னைக்கே வந்து சொல்லியிருக்கலாம்" என்ற வார்த்தையிலோ... அதிகபட்சம் ஒரு ஆகச்சிறந்த முத்தத்திலோ தன்னை அங்கீகரித்துக் கொள்கிறது. அப்படி வயது முதிர்ந்து வெளிப்படும் ஒரு காதலுக்கு வெள்ளித்திரையில் அங்கீகாரம் கிடைக்கச்செய்து கதைக்கு காவியத் தன்மை தந்த படம் ‘கர்ணன்’ (2021).

கர்ணன்(2021): 1990களின் தென்மாவட்டங்களில் நடந்த ஒரு ரத்தக்களறியான நிஜக்கதையின் பின்னணியில் 2021-ம் ஆண்டு வெளியான படம் ‘கர்ணன்’. கரோனா 2-வது அலை காலத்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்ந்து வந்த காலத்தில் நேரடியாக திரையரங்குகளில் வெளியானது இந்தப் படம். இயக்குநர் மாரிசெல்வராஜின் இந்த இரண்டாவது படத்தில் தனுஷ் நாயகபாத்திரம் ஏற்றிருந்தார்.தென்மாவட்டங்களில் இன்றும் காணக்கிடைக்கும் வன்மத்தின் கோர முகத்தை வெளிக்காட்டியிருக்கும் படம் கொஞ்சம் பிசகினாலும் தடம் மாறிப்போவதற்கான அத்தனை வாய்ப்புகளும் இருந்த இந்தப் படத்தின் கனத்தை பார்வையாளனுக்குள் கடத்தாமல் மென்மை ஆக்கித் தந்திருந்தன படத்தில் சொல்லப்பட்டிருக்கும் ஏமன், அவரது அண்ணிக்கு இடையேயான காதல்.

மஞ்சனத்தி (பண்டாரத்தி) புருஷன்: ஏமன் (அ) எமராஜன். படத்தில் வார்த்தைகளால் மட்டும் வாழ்ந்திருக்கும் மஞ்சனத்தியின் புருஷன். பொடியங்குளம் இளவட்டங்களுக்கும், ஊர் பெரியவர்களுக்கும் இடையில் இணைப்பு பாலமாக இருக்கும் ஏமன், அந்த காலத்திலேயே காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்தவர். அவரும் மஞ்சனத்தியும் முள்ளுக்காட்டில் ஒளிந்து காதலித்து, சாதி மீறி திருமணம் செய்து, புருஷனைத் தாக்கவரும் பொறந்த வீட்டுக்கார்களை எதிர்க்க மஞ்சனத்தி வேல் கம்பெடுத்து நின்றது, குழந்தையில்லாத குறையைப் போக்க நாய்குட்டிகளை குழந்தைகளாக்கி கொஞ்சியது, அடிமையாகத் திரிந்த ஏமனை மனிதனாக்கிய மஞ்சனத்தி கடைசியில் கொள்ளை நோயால் பலியானது என காட்சிகளாக்கப்படாத அந்தக் கதை, அவருக்கும் ஒரு சாவுச்சடங்கு ஒப்பாரி மூலம் மட்டுமே படத்தில் விவரிக்கப்பட்டிருக்கும். அந்தக் காதல் கதைக்கு தேவாவின் கானா குரல் அமரத்துவம் தந்திருக்கும். மனைவிக்கு பின் ஏமனின் வாழ்க்கையில் தனிமையும், பொடியங்குளம் இளவட்டங்களுமே நிறைந்திருக்கிறார்கள்.

காதலின் ஆகச் சிறந்த பரிசு நெற்றி முத்தம்: பன்றித் தொழுவமும், கர்ணனுடன் ஊர் சுற்றுதல் எனச் செல்லும் ஏமனுக்கு ஒரு நாள் பணத்தேவை வருகிறது. அதிகம் ஒன்றும் இல்லை. விளையாட்டில் பந்தயம் வைத்து ஆட பத்து ரூபாய், அதுவும் கர்ணனுக்காக... அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு வர தன் மதினியைத் தேடிச் செல்கிறார் ஏமன். காட்டில் முள் தரித்துக்கொண்டிருக்கும் மதினியிடம் சம்பிரதாயமாக பேச்சுக் கொடுத்து வலியத் தொடங்கும் ஏமனை அருகில் அமரச் சொல்லி மதினி பேசும் வசனங்கள் மூப்பேறிய காதலின் பேரிலக்கியம்...

"உன் பொண்டாட்டி மஞ்சனத்தி போகும்போது சொல்லிட்டு போனா... அக்கா நான் சின்ன வயசுலேயே என் புருஷன விட்டுட்டு போறேன்... எப்பவாவது அவரு உன்னைத் தேடி வந்தா அடிச்சி தொறத்திராம கொஞ்சம் பாத்துக்கோக்கானு சொல்லிட்டு செத்துப்போனா... அப்போ எல்லாம் வராம இப்போ வந்திருக்கியே... என் இளமை எல்லாம் வத்திப்போன பின்னாடி உனக்கு கொடுக்க என்கிட்ட என்ன இருக்கு இப்போ...” என்பார் அந்த மதினி.

பேச்சுனுடே மதினியின் முந்திச் சீ(சே)லையில் இருக்கும் பத்து ரூபாயை அவிழ்த்து எடுக்கும் ஏமன், வந்த காரியம் முடிந்ததும் எழுந்து செல்வார். அந்தத் திருட்டை கண்டிபிடித்து நாசுக்காக வெளிப்படுத்தும் மதினி இப்படி ஒரு கோரிக்கையை வைப்பார்...

"ஏ... மஞ்சனத்தி புருஷா, பத்து ரூவா போதுமா..."

"கண்டிபிடிச்சுட்டியா... நான் தெரியாதுனு நினைச்சேன்..."

"நீ என் சேலையத் தொட்டாலே நான் கண்டுபிடிச்சுருவேன்..."

"சும்மா தான்.. சரி இந்த உன் பத்து ரூவா..."

"அந்த பத்து ரூவாவை நீயே வச்சுக்கோ, வேணும்னா ஒரு முத்தம் கொடுத்துட்டு போ..." என்பார் மதினி.

அதற்கு பின் மதினியை வாரி அணைத்துக்கொடுக்கும் அந்த நெற்றி முத்தம் காமம், குரோதம், ஏக்கம் போன்ற மனித உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட ஏகாந்தம்.

பிறர் மீதான அன்பின் அங்கீகாரமே காதல்: அத்தனை எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கோரிக்கையை ஏற்றுக்கொள்ள அந்த அண்ணியை எது உந்தித்தள்ளியது. குழந்தைகள் இல்லை, மஞ்சனத்தியும் இல்லை, ஆனாலும் அவளுடனான காதலுடன் வாழ்ந்து வந்த ஏமனை முத்தமிட வைத்தது எது?

உண்மையில் யோசித்துப் பார்த்தால் ஏமனுக்கும் அவரது அண்ணிக்கும் இடையில் துளிர்க்கும் அந்தக் காதலுக்கு அடிநாதமே அவர்களுடன் அப்போது உயிருடன் இல்லாத மஞ்சனத்தி தான். தான் இல்லா விட்டாலும் தன்னை மீறி தன் புருஷன் வேறு யாரையும் சேர மாட்டான் என்ற மஞ்சனத்தியின் நம்பிக்கையே அப்படி ஒரு கோரிக்கையை தன் அக்கா முறை பெண்ணிடம் முன்வைக்கத் தூண்டியது. அந்த வார்த்தை, மஞ்சனத்தி மீதான நம்பிக்கையும் அந்த அக்காவை அப்படி ஒரு கோரிக்கைக்கு செவி சாய்க்க வைத்தது. இன்னொருபுறம், தனக்கு பிறகு தனது கணவனுக்கு ஒரு வடிகால் வேண்டும் என்று யோசித்த மஞ்சனத்தி மீதான தீர்ந்து போகாத அன்பே ஏமனின் முத்தமாக வெளிப்பட்டது. உண்ணையில் அது அண்ணிக்கான முத்தம் என்பதை விட மஞ்சனத்திக்கான முத்தமே... இந்த முக்கோண அன்பு ஒன்றை மட்டுமே வெளிப்படுத்துவதாக தோன்றுகிறது.

அது காதல் என்பது ஓர் உணர்வு, நிலைப்பாடு இல்லை.

அந்த உணர்வும் நாம் பிறர் மீது வைக்கும் அன்பின் அங்கீகாரமே..!

முந்தைய அத்தியாயம் > சினிமாபுரம் - 4 | கிராமத்து அத்தியாயம் - ‘பேய் பிடித்தல்’ அரசியலும், பெண்ணின் மனப் போராட்டமும்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்