‘‘உங்கள் ஊக்கம்தான் எங்களுக்கு பலம்” - பிரதமர் மோடி குறித்து ரிஷப் ஷெட்டி உற்சாகம்

By செய்திப்பிரிவு

“உங்கள் தொலைநோக்கு தலைமை எங்களுக்கு ஊக்கமளிக்கிறது” என பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து ‘காந்தாரா’ இயக்குநர் ரிஷப் ஷெட்டி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

‘கேஜிஎஃப்’ மூலம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் நடிகர் யஷ். ‘காந்தாரா’ படத்தின் மூலம் குறைந்த பட்ஜெட்டில் அதீத வசூலை குவிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி தனி முத்திரை பதித்தவர் ரிஷப் ஷெட்டி. இயக்குநராகவும், நடிகராகவும் தன்னை இந்திய மனங்களில் நிலை நிறுத்திக்கொண்டுள்ளார். இந்நிலையில், பெங்களூருவில் யெலஹங்கா விமான நிலையத்தில் ‘ஏரோ இந்தியா 2023’ நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதற்காக வந்த பிரதமர் மோடியை நடிகர்கள் யஷ் மற்றும் ரிஷப் ஷெட்டி சந்தித்துள்ளனர்.

பெங்களூருவில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினியும் உடனிருந்தார். இந்தச் சந்திப்பில் சினிமா, கர்நாடகாவின் கலாச்சாரம், பண்பாடு குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் இப்போது வைரலாக பரவி வருகின்றன.

இந்நிலையில், பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து ரிஷப் ஷெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், “நரேந்திர மோடியுடனான சந்திப்பு ஊக்கமளிக்கிறது. புதிய இந்தியா மற்றும் முற்போக்கு கர்நாடகத்தை வடிவமைப்பதில் பொழுதுபோக்குத் துறையின் பங்கை நாங்கள் விவாதித்தோம். #BuildingABetterIndia-விற்கு பங்களிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். உங்கள் தொலைநோக்குத் தலைமை எங்களுக்கு ஊக்கமளிக்கிறது. அந்த ஊக்கம் எங்களோட மிகப்பெரிய பலம்” என பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE