“இந்திய சினிமாவாக ஒன்றிணைந்துள்ளோம்” - ‘வாத்தி’ நிகழ்வில் தனுஷ் நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

“தமிழ் சினிமா, தெலுங்கு சினிமா, கன்னட சினிமா என்ற நிலை கடந்து இந்திய சினிமாவாக மாறியிருக்கும் இந்த மாற்றம் உண்மையில் அழகாக இருக்கிறது. அனைவராலும் அனைத்து படங்களையும் தற்போது காண முடிகிறது” என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா நடித்துள்ள ‘வாத்தி’ திரைப்படம் தமிழ், தெலுங்கில் பிப்ரவரி 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் தனுஷ், ‘‘எனக்கு தெலுங்கு அவ்வளவாக பேச வராது. ஆனால் புரியும். நீங்கள் எங்களின் பக்கத்து மாநிலம்தானே, ஆங்கிலத்தில் எதற்கு பேசவேண்டும். தமிழில் பேசுகிறேன். புரியும்தானே” என்று கேட்டதற்கு ரசிகர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

தொடர்ந்து பேசிய தனுஷ், ‘முன்பு தமிழ் சினிமா, தெலுங்கு, கன்னட சினிமா என இருந்தது. தற்போது எல்லோரும் எல்லா படங்களையும் பார்க்கின்றோம். தமிழ், தெலுங்கு, கன்னட சினிமா என்ற நிலை இந்தியன் சினிமாவாக மாறியுள்ளது. நீங்கள் தமிழ்ப் படம் பார்க்கிறீர்கள். நாங்கள் தெலுங்கு படங்களைப் பார்க்கிறோம். இந்த மாற்றம் மிகவும் அழகாக இருக்கிறது. ‘வாத்தி’ படத்தை பொறுத்தவரை தமிழ், தெலுங்கு மாநில எல்லையில் உள்ள கிராமத்தில் நடக்கும் கதைதான். இதில் இரண்டு கலாசாராமும், மொழியும் கலந்துள்ளது. அதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.

உடனே ரசிகர்கள், ‘தமிழ் புரியவில்லை’ என்றதும் ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினார் தனுஷ். ஆங்கிலத்தில் தொடர்ந்த அவர், “இயக்குநர் வெங்கி அட்லூரிக்கு இப்படியொரு படம் கொடுத்ததற்கு நன்றி” என்றார். அங்கிருந்த ரசிகர்கள் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் அமுல் பேபி வசனத்தை சொல்லுமாறு கூற, ‘தமிழில்தான் சொல்ல வரும்’ என கூறி அந்த டயலாக்கை தனுஷ் சொல்ல, ரசிகர்கள் கைத்தட்டி உற்சாகமடைந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE