“இளம் வயதில் மன அழுத்தத்தில் நிலை குலைந்தேன்...” - பவன் கல்யாண் ஓபன் டாக்

By செய்திப்பிரிவு

“என் அண்ணனின் (சிரஞ்சீவி) உரிமம் பெற்ற துப்பாக்கியைப் பயன்படுத்தி என் உயிரை மாய்த்துக்கொள்ளத் திட்டமிட்டது எனக்கு இன்றும் நினைவிருக்கிறது” என நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாண் கூறியுள்ளார்.

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடத்தும் ‘அன்ஸ்டாபபிள் வித் என்பிகே’ (Unstoppable with NBK Season 2) என்ற நிகழ்ச்சியில் நடிகரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் கலந்துகொண்டார். அப்போது தனது இளமைக்கால போராட்டங்கள் குறித்து அவர் மனம் திறந்து பேசினார்.

பவன் கல்யாண் கூறுகையில், “மன அழுத்தத்துடனான எனது போராட்டங்கள் அதிகமாகவே இருந்தன. ஆனால், நான் அதையெல்லாம் எதிர்த்து போராடி வந்துள்ளேன். ஆஸ்துமாவால் அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தேன்.

எனது 17 வயதில் தேர்வுகள் குறித்த அழுத்தம் என் மன அழுத்தத்தை மென்மேலும் கூட்டியது. என் அண்ணனின் (சிரஞ்சீவி) உரிமம் பெற்ற துப்பாக்கியைப் பயன்படுத்தி என் உயிரை மாய்த்துக் கொள்ளத் திட்டமிட்டது எனக்கு இன்றும் நினைவிருக்கிறது. அப்போது அண்ணன் வீட்டில் இல்லை. என் அண்ணன் என்னிடம் ‘எனக்காக மட்டும் வாழு; நீ எதுவும் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் தயவுசெய்து வாழ்ந்துவிடு’ என சொன்னார்.

அதிலிருந்து புத்தகங்கள் படிப்பதிலும், கர்நாடக இசை, தற்காப்புக் கலைகள் உள்ளிட்டவற்றை கற்றுக்கொண்டு ஆறுதல் அடைந்தேன். எனக்கு பல முறை தற்கொலை எண்ணங்கள் வந்துள்ளன. ஒருபோதும் மற்றவர்களுடன் உங்களை நீங்களே ஒப்பிட்டுக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு நீங்கள்தான் போட்டியாளர். அறிவும் வெற்றியும் கடின உழைப்பால் வந்து சேரும். இன்று நீங்கள் பொறுமையாக இருப்பது உங்களின் எதிர்காலத்தை சிறப்பாக்கும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE