நேர்காணல் நினைவலை | “மனிதநேயத்தோடு வாழ்வதுதானே உன்னதம்!” - வாணி ஜெயராம்

By செய்திப்பிரிவு

‘இந்து தமிழ் திசை’-க்கு 2016ம் ஆண்டு வாணி ஜெயராம் வழங்கிய நேர்காணலில் இருந்து ஒரு பகுதி...

பல நுண்கலைகளில் முதன்மையானது இசைக் கலை. இதில் நீங்களும் ஒரு பங்களிப்பாளர் என்பதில் உங்களுக்குள்ள உணர்வு என்ன?

‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்று நமது அவ்வைப் பாட்டி சொன்னதுதான் ஞாபகத்துக்கு வருகிறது. இப்படி அரிதாகக் கிடைத்திருக்கிற இந்த மனிதப் பிறவியில் மனிதநேயத்தோடு வாழ்வதுதான் மிக உன்னதமான விஷயம். சமூகத்தில் எல்லோருக்கும் நல்லவராக வாழ்கிற வாழ்க்கையைத்தான் நம் முன்னோர்கள் ‘இசைபட வாழ்தல்’ என்றழைத்தார்கள். இசை என்பது சமூகத்தை இணைக்கிற நல்லதொரு பாலம். அத்தகைய இசைத் துறையில் நானும் ஒரு பங்களிப்பாளராக, பார்வையாளராக இருப்பதை எண்ணி கர்வப்படவில்லை. பெருமைப்படுகிறேன். பெருமைப்படலாம்; கர்வப்படக் கூடாது.

உங்கள் இசை ஆற்றலின் ஆரம்பப் பல்லவி...

எனது இசையின் தொட்டில், அகரம், பல்லவி எல்லாமே என் குடும்பம்தான். இசையால் ஆனது என் வீடு.என் தாயார் பத்மாவதி வீணை இசைக் கலைஞர். ரங்கராமனுஜ அய்யங்காருடைய சிஷ்யை என் தாயார். ஒரு விளக்கால் இன்னொரு விளக்கை ஏற்றலாம் என்பார்கள் அல்லவா? அது போல என் அம்மாவிடம் இருந்துதான் எனக்கும் அந்த ஒளி கடத்தப்பட்டது. 3 வயதிலேயே எனக்கு இசை நாட்டம் வந்துவிட்டதாகப் பின்னாட்களில் என் தாய் சொல்லக் கேட்டிருக்கிறேன். எனது ஐந்தாவது வயதில் வேலூரில் முறைப்படி இசை கற்க ஆரம்பித்தேன். அந்த ஒலி ஊர்வலம் இன்னமும் தொடர்கிறது. இதைத் தொடர்ந்து மும்பையில் ஹிந்துஸ்தானியை கற்றுக்கொண்டேன். கஜலும் அத்துப்படியானது. இவை எனக்கு வெவ்வேறு பரிமாணங்களில் பயணிக்கப் பெரிதும் பயன்பட்டன.

செவ்விசை அறிந்தவர் நீங்கள். நாட்டார் பாடல்களைப் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன?

மக்கள் இசை அது. எனக்கும் பிடிக்கும். இன்னும் சொல்லப்போனால் திரையிசைக்கு மிக நெருக்கமாக கிராமியப் பாடலும் இருக்க வேண்டும். பிரபல இசையமைப்பாளர் நவுஸத் உத்தரப் பிரதேச கிராமியப் பாடல்களையும், எஸ்.டி.பர்மன் வங்காள மொழி கிராமியப் பாடல்களையும் எடுத்துத் திரையிசையில் கலந்திருக்கிறார்கள். நம் தமிழ்த் திரையிசையிலும் நாட்டார் பாடல்கள் கவனிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன.

உங்களுக்கே உங்களுக்கென்று பிடித்த ராகம்?

‘த்விஜாவந்தி’ என்ற ராகம் ரொம்பப் பிடிக்கும். இந்த ராகத்தின் அடிப்படையை வைத்துக்கொண்டு எம்.எஸ்.வி. சார் ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’ படத்தில் ‘அமுதத் தமிழில் கவிதை எழுதும் புதுமைப் புலவன் நீ’ என ஒரு பாடல் போட்டிருப்பார். உண்மையிலேயே இசையும் தமிழும் அமுதம்தான்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE