“நாம் சாதிச் சான்றிதழை தூக்கி எறிந்துவிட முடியாது” - இயக்குநர் வெற்றிமாறன்

By செய்திப்பிரிவு

“பொதுவாக எல்லோரும் ஒரேயடியாக சாதிச் சான்றிதழை தூக்கி எறிந்துவிட முடியாது. இருப்பினும், ‘வேண்டாம்’ என கூறுபவர்களுக்கு அதற்கான உரிமையை வழங்க வேண்டும்” என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடத்தப்பட்ட மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் ‘முதல் தலைமுறை சினிமா’ என்ற தலைப்பில் வெற்றிமாறன் உரையாற்றினார். அப்போது அங்கிருந்த கல்லூரி மாணவர்களில் ஒருவர் ‘பள்ளி கல்லூரிகளில் சாதியை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும் என கூறுகிறார்கள். இது குறித்த உங்கள் கருத்து என்ன?’ என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த வெற்றிமாறன், “இது எனக்கே பெரிய கொடுமையான விஷயம் தான். என் பிள்ளைகளுக்கு ‘No caste’ என்ற சான்றிதழை வாங்க முயற்சித்தேன். அவர்கள் தர மறுத்துவிட்டார்கள். அப்படியெல்லாம் கொடுக்க முடியாது என்றார்கள். நீதிமன்றத்திற்கு சென்றேன்.

அங்கேயும் கூட, ‘அப்படியெல்லாம் கொடுக்க முடியாது. நீங்கள் எதாவது ஒரு சாதியை குறிப்பிட்டுதான் ஆக வேண்டும். இந்து என இருக்கிறதே எதாவது ஒரு சாதியை போடுங்கள்’ என்று கூறிவிட்டனர். எனக்கு எதுவுமே வேண்டாம் என கூறினேன் ஒப்புக்கொள்ளவேயில்லை. நான் சாதி சான்றிதழ் கொடுக்காமல் இருப்பதற்கான வேலைகளைத்தான் பார்த்துகொண்டிருக்கிறேன்.

பள்ளி, கல்லூரிகளில் சாதிச் சான்றிதழ் கேட்பதை நிறுத்த வேண்டும் என்றுதான் நான் நினைக்கின்றேன்” என்றார். உடனே அங்கிருந்தவர்கள் கைத்தட்டியதும், இடைமறித்த வெற்றிமாறன், “ஒரு நிமிடம். இது வந்து யாருக்கு தேவையில்லையோ அவர்களுக்கு மட்டும். எனக்கு தேவையில்லை என நான் நினைக்கிறேன்.

உரிமையை வாங்கி கொடுக்கும் இடத்தில் அவர்கள் சாதிச் சான்றிதழை கொடுத்துதான் ஆக வேண்டும். சமூக நீதிக்காக சில இடங்களில் நீங்கள் அதை குறிப்பிட்டுதான் ஆக வேண்டும். எனக்கு அது தேவையில்லை. நான் வேணாம் என கூறும்பட்சத்தில், ‘சரி இவன் வேணாம் என்கிறான். இவனை விட்டு விடுவதற்கான வழிவகை அதில் இருக்க வேண்டும்’ என நான் நினைக்கிறேன்.

ஆகவே, அப்படி பொதுவாக எல்லோரும் ஒரேயடியாக நாம் சாதிச் சான்றிதழை தூக்கி எறிந்துவிட முடியாது. சமூக நீதிக்கு அது தேவைப்படுகிறது” என்றார் இயக்குநர் வெற்றிமாறன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE