பொம்மை நாயகி: திரை விமர்சனம்

By செய்திப்பிரிவு

தேநீர் கடை தொழிலாளியான வேலு (யோகி பாபு), தனது மனைவி கயல்விழி (சுபத்ரா), 9 வயது மகள் பொம்மை நாயகி (ஸ்ரீமதி) ஆகியோருடன் சொற்ப வருமானத்தில் மகிழ்ச்சிக்கு குறைவில்லாமல் வாழ்ந்து வருகிறார். இந்த எளிய குடும்பத்தை ஒரு சம்பவம் புரட்டிப்போடுகிறது. கோயில் திருவிழாவில் காணாமல் போகும் மகளைப் பதைபதைப்புடன் தேடிச் செல்லும் வேலு, அவளை மயங்கிய நிலையில் கண்டெடுக்கிறார். மகளுக்கு நடந்த கொடுமையின் துயரை மனதில் புதைத்துக்கொள்ளும் வேலு, ஒரு கட்டத்தில் குமுறி எழுகிறார். அதன்பின் குற்றவாளிகளை சமூகமும் சட்டமும் நீதியும் எப்படிக் கையாண்டன? சாமானியத் தந்தையான வேலுவின் போராட்டம் வென்றதா, இல்லையா என்பது கதை.

சிறார் பாலியல் வன்கொடுமையை புதிய அணுகுமுறையுடன் கையாண்டிருக்கிறது இந்தப் படம். பாதிக்கப்பட்டவர்கள் எளிய, விளிம்பு நிலை மக்கள் என்றால், சட்டத்தின் முன் எப்படியெல்லாம் அலட்சியப்படுத்தப்படுவார்கள், அவர்களுக்கு வழிகாட்டுதலும் சட்ட உதவியும் இருந்தால், உரிய நீதியைப் பெறச் சட்டத்தை எப்படியெல்லாம் பயன்படுத்த முடியும் என்பதை சினிமாத்தனம் இல்லாத காட்சிகள் வழியாகச் சித்தரித்திருக்கிறார், படத்தை எழுதி, இயக்கியிருக்கும் ஷான்.

அதேபோல், தண்டனைச் சட்டத்தில் உள்ள குறைபாடுகள், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் எனில், அவர்களைக் காப்பாற்றச் சாதிப் பெருமிதம் குழுஉணர்வாக ஒன்று திரள்வது ஆகியவற்றை ஒளிவு மறைவின்றிக் காட்சிப்படுத்தி இருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்தாலும், பாதுகாப்பு கேள்விக்குறிதான் என்கிற நிதர்சனத்தையும் நெற்றிப் பொட்டில் அறைந்து சொல்லியிருக்கிறார். நீதிமன்றக் காட்சிகள் பல படங்களில் பார்த்தவைபோல் தோன்றினாலும் அவற்றிலிருந்து வெளிப்படும் உண்மை, நீதியின் கரங்களை எளிய மக்கள் நம்பிக்கையோடு பற்றிக்கொள்ளலாம் என்கிற விழிப்புணர்வைக் கொடுக்கின்றன.

ஒரு திரைப்படம் பார்ப்பதுபோல் இல்லாமல், வேலு என்கிற எளிய மனிதனின் குடும்பத்துடன் நம்மை பிணைக்கும்விதமாக முதன்மை, துணைக் கதாபாத்திரங்களைச் சித்தரித்திருக்கிறார்கள்.

ஆதிக்க சாதித் தந்தைக்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்த வேலுவாக அல்லாடும் கதாபாத்திரத்தை இயல்பாக வெளிப்படுத்தி இருக்கிறார் யோகி பாபு. புறந்தள்ளப்பட்ட பகுதியில் வாழ்வது, ஏழ்மையும் இயலாமையும் கலந்த வாழ்வில் உழல்பவனின் பேச்சு, உடல்மொழி, மென்சோகம் கலந்த சிரிப்பு என முதல் பாதியிலும் மகளுக்கு நீதி வேண்டிப் போராடும் இரண்டாம் பாதியில் துணிவு பெற்றவராகவும் முற்றிலும் புதிய யோகி பாபுவை இதில் காணலாம்.

அவருக்கு ஈடுகொடுக்கும் விதமாக அவர் மனைவியாக நடித்திருக்கும் சுபத்ராவும் மகளாக நடித்திருக்கும் ஸ்ரீமதியும் உள்ளத்தைக் கொள்ளையடித்துச் செல்கிறார்கள். தோழராக வரும் மெட்ராஸ் ஜானி, வேலுவின் அப்பாவாக வரும் ஜி.எம்.குமார், அண்ணன் அருள்தாஸ், நீதிபதி எஸ்.எஸ்.ஸ்டான்லி, வழக்கறிஞர் லிஸி ஆண்டனி, எம்.ஜி.ஆர். படப் பாடல்களைப் பாடும் பாட்டி என துணைக் கதாபாத்திரங்கள் அத்தனை பேரும் அவ்வளவு இயல்பு.

சுந்தரமூர்த்தியின் இசையில் கபிலன், அறிவு, லோகன், சித்தன் ஜெயமூர்த்தி ஆகியோரின் பாடல்கள் கதையோட்டத்துக்கு ஊன்றுகோலாக நிற்கின்றன. ‘ஜெய் பீம்’, ‘ரைட்டர்’ படங்களின் வரிசையில் சேரக்கூடிய இப்படம், கதையின் போக்கில் பெண் கல்வியின் அவசியத்தையும் வலிமையாக எடுத்துரைக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE