‘சினிமாவில் மீண்டும் எனக்கு வாழ்க்கை கொடுத்ததற்கு நன்றி’ - ‘பதான்’ விழாவில் ஷாருக்கான் உருக்கம்

By செய்திப்பிரிவு

ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் நடித்து கடந்த 25-ம் தேதி வெளியான இந்திப் படம், ‘பதான்’. சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். ‘பேஷரம் ரங்’ பாடல் காட்சியில் தீபிகா அணிந்திருந்த காவி பிகினி, சர்ச்சையை ஏற்படுத்தியது. படத்துக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த எதிர்ப்புகளை மீறி ‘பதான்’ வசூலில் சாதனைப் படைத்து வருகிறது. 4 வருடத்துக்குப் பிறகு ஷாருக்கான் நடித்த படம் என்பதால், ரசிகர்கள் தியேட்டரில் குவிந்து வருகின்றனர்.

முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.106 கோடி வசூல் அள்ளிய இந்தப்படம் ஐந்து நாட்களில் 543 கோடி ரூபாய் வசூல் ஈட்டி சாதனை படைத்து வருகிறது. படத்துக்கான வரவேற்பு அதிகமாகி வரும் நிலையில் ஷாருக் கான் உள்ளிட்ட படக்குழுவினர் வெற்றிவிழா கொண்டாடினர். பின்னர் படத்தின் வெற்றி குறித்து ஊடகங்களிடம் பேசிய ஷாருக் ரசிகர்களின் அன்புக்கு நன்றி தெரிவித்தார்.

"ரசிகர்கள் இந்தப் படம் மீது தங்கள் அன்பை வெளிப்படுத்தியுள்ளனர். அதற்காகவும், அதன்மூலம் சினிமாவில் மீண்டும் எனக்கு வாழ்க்கை கொடுத்ததற்கும் அவர்களுக்கு நன்றி கடன்பட்டுள்ளேன். கடந்த ஒன்றிரண்டு வருடங்களாக நான் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. இக்காலகட்டத்தில் எனது குடும்பத்துடனும், நண்பர்களுடனும் நேரத்தை செலவிட்டேன். எனது முந்தையை படங்களின் தோல்வியால் ஒருகட்டத்தில் வேறு தொழிலுக்கு செல்லலாமா என்று யோசித்தேன். ரெஸ்டாரென்ட் தொடங்கும் நினைப்பில் சமையல் கூட கற்றுக்கொண்டேன்.

ஆனால் பதான் சினிமாவில் மீண்டும் எனக்கான வாழ்க்கையை கொடுத்துள்ளது. அன்புடனும் சரியான நோக்கத்துடனும் இப்படத்தின் பணிகளைத் தொடங்கினோம். மாறாக சாதனைகள் பற்றி நினைக்கவில்லை. இதுதான் நான் எனது முதல் படத்தில் இருந்து கற்றுக்கொண்டது. நாம் நினைத்தது நடக்காவிட்டாலும், நம்மை நேசிப்பவர்களை நேசிக்க வேண்டும் என்றுதான் எனக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது. தோல்வியுற்ற நேரத்திலும் என்னை நேசிக்க மில்லியன் கணக்கானவர்கள் இருந்ததில் நான் மிகவும் அதிர்ஷ்டஷாலி. அதனால்தான் மகிழ்ச்சியாக இருந்தாலும் ரசிகர்களை சந்திப்பேன், சோகமாக இருந்தாலும் ரசிகர்களை சந்திப்பேன்" என்று உருக்கமாக பேசினார்.

தொடர்ந்து பதான் இரண்டாம் பாகம் உருவாகுமா என்ற கேள்விக்கு பதிலளித்த ஷாருக், "தயாரிப்பாளர்கள் அந்த எண்ணத்தில் இருந்தால் அது எனக்கு கிடைத்த மரியாதை. என்ன, தலைமுடியை நான் இன்னும் நீளமாக வளர்க்க வேண்டிவரும்" என்று கேலி செய்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE