பதான்: திரை விமர்சனம்

By செய்திப்பிரிவு

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்காக, இந்தியா மீதான தாக்குதலுக்குத் திட்டமிடுகிறார் பாகிஸ்தான் ராணுவ அதிகாரி. இதற்காக ஜிம் (ஜான் ஆபிரகாம்) என்பவனை நியமிக்கிறார். ‘ரா’ உளவாளி பதான் (ஷாருக் கான்), ஜிம்மின் தாக்குதலை முறியடிக்கப் புறப்படுகிறார். பாக். உளவாளி ருபீனாவும் (தீபிகா படுகோன்), பதானுடன் இணைகிறாள். இருவரும் ஜிம் தொடர்பான ரகசியம் ஒன்றை அறிய ரஷ்யா செல்கிறார்கள். அங்கு அவர்களுக்குக் கிடைப்பது என்ன? ஜிம்மின் தாக்குதல் திட்டத்தை பதான் முறியடித்தாரா? என்பதற்கான விடை சொல்கிறது திரைக்கதை.

இந்தியா, பாகிஸ்தான், ஸ்பெயின், பிரான்ஸ் என பல நாடுகளுக்குப் பயணிக்கிறது கதை. விலையுயர்ந்த கார்கள், ரயில், ஹெலிகாப்டர் என பலவாகனங்களும் நவீனப் போர்க் கருவிகளும் பிரம்மாண்ட செட்களும் படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமுக்கும் நவீனத்தன்மையை வழங்கியிருக்கின்றன.

கதையில் புதிதாக எதுவும் இல்லை. ஆனால் ராணுவ, உளவு அதிகாரிகளின் சாகசங்கள், தேசப்பற்று, தியாகம் ஆகியவற்றை முன்னிறுத்தும் தர் ராகவனின் திரைக்கதை சுவாரசியத்தைத் தக்க வைத்துவிடுகிறது.

பார்வையாளர்களை வியக்க வைக்கும் சண்டைகள் நிறைந்த படமான இதில், ‘சைடிஷ்’ போல சென்டிமென்ட், காதல், கிளாமர் ஆகியவற்றைச் சேர்த்திருக்கிறார்கள். அதோடு யாஷ்ராஜ் நிறுவனத்தின் முந்தைய உளவாளி பட கதாபாத்திரங்கள் குறித்த ‘ரெஃபரன்ஸ்கள்’ தாராளமாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது ‘மல்டிவர்ஸ்’ ரசிகர்களைக் குஷிப்படுத்துகிறது.

யாஷின் ‘ஏக்தா டைகர்’, ’டைகர் ஜிந்தா ஹை’ படங்களில் நாயகனாக நடித்த சல்மான் கான் இதில், டைகர் கதாபாத்திரமாக ஷாருக்குடன் இணைந்து ஆக்‌ஷன் தீப்பொறிகளை கிளப்பியிருப்பதும் ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைக்கின்றன.

நாயகனுக்கு இணையாக வில்லன் கதாபாத்திரத்தைப் படைத்திருப்பது திரைக்கதையின் குறைகளை மறக்க உதவியிருக்கிறது.

அளவுக்கதிமான சாகசக் காட்சிகள், நம்பவே முடியாத சண்டைக் காட்சிகள், இரண்டாம் பாதியின் தொய்வு, தீபிகா படுகோன் பாத்திரத்தில் இருக்கும் குழப்பம் ஆகியவை படத்தின் குறைகள்.

4 ஆண்டுகளுக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் ஷாருக், ரசிகர்களுக்கு ஆக்‌ஷன் விருந்து படைத்திருக்கிறார். வில்லன் ஜான் ஆபிரகாமும் அசத்தியிருக்கிறார். தீபிகா படுகோன் காதல் மட்டுமின்றி சண்டைக் காட்சிகளிலும் அநாயாசமாக வெளிப்படுகிறார்.

நாயகனின் உயரதிகாரிகளாக டிம்பிள் கபாடியா, ஆஷுதோஷ் ராணா முதிர்ச்சியான நடிப்பைத் தந்திருக்கிறார்கள். விஷால் சேகர் இசையில் பாடல்கள் ரசிக்கவைக்கின்றன. சச்சித பெளலோஸின் ஒளிப்பதிவு,வி.எஃப்.எக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்கள் சிறப்பாகக் கைகொடுத்திருக்கின்றன. தமிழ் வசனங்கள், பாடல் வரிகள் திரையில் தோன்றும் எழுத்துக்கள் அனைத்தும் மொழிமாற்றுப் படம் என்பதை மறக்க வைக்கும்அளவுக்கு கச்சிதமாக அமைந்துள்ளன.

லாஜிக்கை மறந்து ஷாருக் கானின் ஆக்‌ஷன் மேஜிக்கைக் காண விரும்புபவர்களுக்கு சுவையான விருந்து இந்த ‘பதான்’.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE