“இது ஓர் அற்புத உணர்வு” - பிரான்ஸில் பேசுபொருளான ‘துணிவு’ குறித்து போனி கபூர்

By செய்திப்பிரிவு

நடிகர் அஜித்குமார் நடித்துள்ள ‘துணிவு’ படம் பிரான்ஸில் உள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விவாதிக்கபட்டது குறித்து படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் பூரிப்படைந்துள்ளார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த ஜனவரி 11-ம் தேதி வெளியான ‘துணிவு’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சாமானியர்கள் மீதான வங்கிகளின் அத்துமீறல்களை மையமாக கொண்டு உருவான இப்படம் உலக அளவில் ரூ.200 கோடிக்கும் மேலாக வசூலித்து முன்னேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பிரான்சில் ‘துணிவு’ படத்திற்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது. அங்கிருக்கும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வரும் நிலையில், அங்கு செயல்படும் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் ‘துணிவு’ படம் குறித்து புகழப்பட்டுள்ளது. இது தொடர்பான காணொலியை அஜித் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். குறிப்பாக பிரான்ஸ் தொலைக்காட்சியில் இந்திய சினிமாவின் 'ஜார்ஜ் குளூனி' அஜித் என குறிப்பிட்டிருந்தது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கும் படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர், “பிரான்சில் ‘துணிவு’ படத்தின் வரவேற்பைக் கண்டு நான் பரவசமடைந்தேன். பார்வையாளர்கள் மிகவும் உற்சாகமாக படத்தில் மூழ்கியுள்ளனர். இது ஓர் அற்புதமான உணர்வு” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE