''தேவையில்லாமல் ஒரு உயிர் போய்விட்டது'' - நடிகர் ஆர்.ஜே.பாலாஜி வருத்தம்

By செய்திப்பிரிவு

ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள படம் ரன் பேபி ரன். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.லக்ஷ்மன் குமார் மற்றும் வெங்கட் தயாரிக்க, ஜெயன் கிருஷ்ணகுமார் என்பவர் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பேசும்போது, "வீட்ல விசேஷம் திரைப்படம் வெளியாகி 6 மாதங்கள் ஆகின்றன. இதற்கு முன் நான் நடித்த 3 படங்களும் நான் எழுதி இயக்கிய படங்கள். ஏனென்றால், எனக்கு இது போதும் இதை செய்தால் தான் எனக்கு வெற்றி கிடைக்கும் என 3 படங்களுக்கு நடித்தேன். வீட்ல விசேஷம் படத்திற்கு பிறகு, நமக்கு வேறு என்ன வரும் என்று தெரிந்துகொள்ள நல்ல இயக்குநர்களுடன் பணியாற்ற வேண்டும் என்று முடிவு செய்தேன்.

அதனால் நான் லக்ஷ்மன் சாருக்கு அழைப்பு விடுத்து பேசிய பின் தான் கிருஷ்ணகுமார் சார் அறிமுகமானார். ஒரு படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது இன்னொரு படத்தில் கவனம் வைக்க மாட்டேன்.

படத்தின் வெற்றியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எதிர்காலத்தில் அதிகபட்சமான பணிகளுக்கு இயந்திரங்கள் வந்துவிடும். அதற்கான இளைஞர்கள் இப்போதே அவர்களின் நேரத்தைக் கொடுத்து உழைக்க வேண்டும். படங்களின் வசூலை தெரிந்துகொள்வதில் இளைஞர்களின் ஆற்றல் வீணாகப்போகிறது.

சமீபத்தில் ஒரு படத்திற்காக இளைஞன் ஒருவன் உயிர் விட்டதை அறிந்து வருத்தமாக இருந்தது. இது எல்லாம் தேவையில்லாது. திரையரங்கிற்கு சென்று படம் பார்த்து நன்றாக இருக்கிறதா? அதை ஏற்றுக் கொள்கிறோம். நன்றாக இல்லையா? அதையும் கூறுங்கள், கற்றுக் கொள்கிறோம். நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து காசு கொடுத்து படம் பார்க்கிறீர்கள். அதில் நாங்கள் சொகுசாக வாழ்கிறோம். பத்திரிகைகளும், ஊடகங்களும் இளைஞர்களை கொம்பு சீவி விடும் விஷயங்களை கொடுக்காமல், அவர்களின் ஆற்றலை மேம்படுத்தும் விதமாக இருந்தால் நன்றாக இருக்கும். தயாரிப்பாளரின் இலாபத்தை வைத்துதான் என்னுடைய சம்பளத்தை தீர்மானிப்பேன்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE