பிப்ரவரி 3-ல் வெளியாகிறது ஐஸ்வர்யா ராஜேஷின் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’

By செய்திப்பிரிவு

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' திரைப்படம் பிப்ரவரி 3-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ பேபி இயக்கத்தில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் நடித்திருந்த படம் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'. புதிதாகத் திருமணமான பெண் ஒருவர், பழமைவாதக் கொள்கைகளும் ஆணாதிக்கமும் நிறைந்த கணவரின் குடும்பத்தில் படும் கஷ்டங்கள், அவர் எடுக்கும் முடிவு ஆகியவற்றை சொல்லிய படம் இது.

நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இந்தத் திரைப்படம் விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆணாதிக்கச் சிந்தனையால் பாதிக்கப்படும் ஒரு படித்த பெண்ணின் நிலையை அழுத்தமாக, யதார்த்தமாகக் காட்டியிருந்ததாகப் பாராட்டுகளைப் பெற்றது.

இப்படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ளார் இயக்குநர் ஆர்.கண்ணன். நிமிஷா சஜயன் கதாபாத்திரத்தை தமிழில் ஏற்று நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஜெர்ரி சில்வெஸ்டர் வின்சென்ட் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுராஜ் வெஞ்சரமூட் கதாபாத்திரத்தில் ராகுல் ரவீந்திரன் நடித்துள்ளார். இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் படம் வெளியாகவில்லை. தற்போது படம் பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE