உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீட்டின் வெளியே படமாக்கப்பட்ட ‘நாட்டு நாட்டு’ பாடல்

By செய்திப்பிரிவு

திரைத்துறையினர் உயரிய விருதான ஆஸ்கர் விருதுக்கு அடுத்தப்படியான கவுரவம் கொண்ட கோல்டன் குளோப் விருதைப் பெற்றுள்ள ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடல், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் வீட்டின் முன்னால் படமாக்கப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.

‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் ஆங்கில மொழி இல்லாத படத்திற்கான பிரிவிலும், நாட்டு நாட்டு பாடல், சிறந்த பாடல் பிரிவிலும் தேர்வாகி இருந்த நிலையில், நாட்டு நாட்டு பாடல், சிறந்த பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருது வென்று அசத்தியுள்ளது.

அந்தப் பாடலின் நடனமும் இசையும் எவ்வளவு ஈர்த்ததோ அதே அளவிற்கு அந்த லொகேஷனும் பெயர் பெற்றது. ஏதோ வெளிநாட்டில் படமாக்கியிருக்கிறார்கள் என்று தெரிந்தாலும் அந்தக் கட்டிடக் கலை பேக்கிரவுண்டில் நின்ற அழகிகள் ரசிகர்களைக் கவர்ந்தது. அந்த அழகான லொகேஷன் வேறு எங்குமில்லை, உக்ரைனில்தான் இருக்கிறது. அதுவும் குறிப்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் வீட்டின் முன்பு தான் இந்தப் பாடல் படமாக்கப்பட்டுள்ளது.

படத்திற்கும் உக்ரைனுக்கும் இருந்த தொடர்பு கோல்டன் குளோப் வரை தொடர்ந்துள்ளது என்று சொல்லும் அளவிற்கு கோல்டன் குளோப் விருது விழாவில் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. உக்ரைன் போர் ஆரம்பித்த பின்னர் அங்கு படப்பிடிப்பு நடத்தியதை இயக்குநர் ராஜமவுலி நினைவு கூர்ந்திருந்தார். இது தொடர்பாக ட்விட்டரில் அவர், ஆர்ஆர்ஆர் படத்திற்காக சில முக்கியமான காட்சிகளை உக்ரைனில் எடுத்தோம். அங்கு நாங்கள் படப்பிடிப்பு நடத்தி முடித்துவந்த சில மாதங்களில் போர் ஏற்பட்டது. அப்போதுதான் அங்குள்ள பிச்சினையின் தீவிரம் என்னவென்பதே எனக்குத் தெரிந்தது என்று பதிவிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE