வாரிசு Review: பாட்டு, டான்ஸ், ஃபைட், சென்டிமென்ட் எல்லாம் இருக்கு. ஆனால்..?

By கலிலுல்லா

தொழில் போட்டிக்கும், குடும்ப உறவுகளுக்கும் இடையிலான சிக்கல்களை தீர்க்கும் ‘வாரிசு’ வாய்க்கப்பெற்றால் என்ன நடக்கும் என்பதுதான் படத்தின் ஒன்லைன்.

ஜெயபிரகாஷ் குரூப் ஆஃப் கம்பெனிக்கும் (பிரகாஷ்ராஜ்), ராஜேந்திரன் குரூப் ஆஃப் கம்பெனிக்கும் (சரத்குமார்) இடையே தொழில் போட்டி வலுத்து வருகிறது. இதனிடையே, தொழிலதிபர் ராஜேந்திரன் தனக்குப் பிறகு தனது தொழிலை ஏற்று நடத்த தனது மகன்களில் திறமையான ஒருவரை அடையாளம் காண முயற்சித்துக் கொண்டிருக்கிறார். மற்றொருபுறம் வீட்டிலிருந்து விலக்கப்பட்டிருக்கும் விஜய் ராஜேந்திரன் (விஜய்) தனது பெற்றொரின் 60ஆம் கல்யாணத்திற்காக மீண்டும் வீட்டின் படியேற, அவருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. இறுதியில் ராஜேந்திரன் தனது அடுத்த தொழில் வாரிசை கண்டறிந்தாரா? விஜய் ஏன் வீட்டிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறார்? அவருக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன? - இதை சென்டிமென்டாக சொல்லியிருக்கும் படம்தான் ‘வாரிசு’.

மிரட்டும் நடன அசைவுகள், புது ஹேர்ஸ்டைல், ‘க்யூட்’ முகபாவனைகளால் தோற்றத்தில் அழகூட்டி வயதை வெறும் ‘எண்’ என மீண்டும் நம்ப வைத்திருக்கிறார் விஜய். ‘ரஞ்சிதமே’ பாடலின் கடைசி நிமிடங்களில் சிங்கிள் ஷாட்டில் அவரது ஆட்டம் திரையரங்கை ஆர்ப்பரித்து அலறவிடுகிறது. குழந்தைத் தனமான சில பாவனைகளும், அதற்கேற்ற உடல்மொழியும், ‘தீ’ தளபதி பாடலில் அவரின் நடையும் ரசிகர்களுக்கு ‘பொங்கல்’ விருந்து.

ராஷ்மிகா மந்தனா காதலுக்காகவும், பாடலுக்காகவும் மட்டுமே வந்து செல்கிறாரே; தவிர பெரிய வேலையில்லை. இருப்பினும் அவருக்கு கொடுத்த வேலையை சரிவர செய்கிறார். சரத்குமாரின் நடிப்பு அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் தன்மையை அதற்கே உண்டான மென்சோகத்துடன் கடத்தியிருந்தது. தவிர பிரகாஷ்ராஜ், பிரபு, யோகிபாபு, ஷாம், ஸ்ரீகாந்த், ஜெய சுதா உள்ளிட்டோர் கொடுத்த வேலையை செய்கின்றனர்.

‘குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி’ என்ற அடைமொழியை உறுதியிட்டு எழுதும் அளவிற்கு சென்டிமென்ட் காட்சிகளை திகட்ட திகட்ட கொடுத்திருக்கிறார் இயக்குநர் வம்சி. படத்தின் முதல் பாதியில் வரும் ‘அம்மா’ பாடலும், அதற்கான சூழ்நிலையும், விஜய்க்கும் அவரது அம்மாவுக்குமான சென்டிமென்ட்டும் ஈர்க்கிறது. வழக்கமான இன்ட்ரோ பாடல், கண்டதும் காதல் என க்ளிஷேவாக தொடங்கும் படத்தில் விஜய்யின் அறிமுகக் காட்சியில் கிராஃபிக்ஸ் துருத்திக்கொண்டு நிற்பது நெருடல்.

மொத்த படத்தையும் தமனின் இசை திரைக்கதையுடன் இணைந்து காட்சிகளை உந்தி அடுத்தடுத்த கட்டங்களுக்கு தள்ளி பலம் சேர்க்கிறது. குறிப்பாக ‘தீ தளபதி’ பாடலின் விஷுவல்ஸ் அதற்கான விஜய்யின் மாஸான நடை நிச்சயம் ரசிகர்களுக்கு காட்சி விருந்து. பாடல்கள் கேட்க நன்றாக இருந்தாலும், கதை ஓட்டத்திலிருந்து விலகி திணிக்கப்பட்டிருப்பது பலவீனம். யோகிபாபுவுக்கும் - விஜய்க்குமான கனெக்‌ஷன் கைகொடுக்கிறது. சில இடங்களில் விஜய் முயற்சித்திருக்கும் காமெடிகள் புன்முறுவ வைக்கின்றன.

படத்தின் மிகப் பெரிய பிரச்னை, அதன் மையக்கதையை அடர்த்தியின்றி காட்டியிருக்கும் விதம். விஜய்க்கும் சரத்குமாருக்கும் இடையிலான பிரச்சினையை மேலோட்டமாக காட்சிப்படுத்தியிருந்தது பார்வையாளர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அதேபோல வில்லனாக வரும் பிரகாஷ்ராஜ் கதாபாத்திரத்தின் பலவீனமான எழுத்து காட்சிகளை சுவாரஸ்யமில்லாமல் நகர்த்துகிறது. (மிஸ்டர் பாரத் பட டென்டர் ஏல காட்சிகள் ரொம்ப பழசு பாஸ்) படத்தின் தொடக்கத்தில் ‘சூர்யவம்சம்’ காட்சிகள் நினைவுக்கு வர, பின், ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ எட்டிப் பார்க்கிறது. ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தைப் பார்க்கும் உணர்வும் எழாமலில்லை. காரணம், அந்தப் படத்தின் கேங்க்ஸடருக்கு பதிலாக கார்ப்பரேட் தொழிலை பின்புலமாக வைத்தால் ‘வாரிசு’ கதை ஒட்டிவிடுகிறது. அப்பா - மகன்கள், அண்ணன் தம்பிகளுக்கிடையிலான சென்டிமென்ட் காட்சிகள் மூட்டையில் திணிக்கும் துணியைப் போல பிதுங்கி புடைத்திருக்கிறது.

கணிக்கக்கூடிய கதையுடன் காட்சிகளாகவும் எளிதில் கணிக்க முடிவதால் சுவாரஸ்யம், விறுவிறுப்புக்கு வறட்சி நிலவுகிறது. தேவையில்லாத இடங்களில் பாடல்களும், சண்டைக் காட்சிகளும், போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ் வாக்குப் பதிவு என கூறி வைக்கப்பட்ட காட்சி ஒன்றும் சோதிக்கிறது. விஜய் நடித்த முந்தைய படங்களின் வசனங்களை ரீமேடாக்கியிருப்பது சில இடங்களில் கைகொடுக்கிறது. பல இடங்களில் ‘கிறிஞ்ச்’ ஆகியிருக்கிறது. எஸ்.ஜே.சூர்யாவின் சிறப்புத் தோற்றம் ரசிக்க வைக்கிறது. சில இடங்களில் அதீத செயற்கை ஆக்‌ஷன் காட்சிகள் தெலுங்கு படங்களை நினைவூட்டுகின்றன.

குறிப்பாக, விஜய் போன்ற பெரிய நடிகர் ஒருவரின் படத்தில் சிறுபான்மையினர் ஒருவரை குற்றவாளியாக்கி, எளிய மக்களை மாணவிகளை கடத்துபவர்களாக காட்டும் காட்சிகள் அறப்பிழைகள். படத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விஜய்யின் அறிமுக காட்சியும், இன்டர்வல் காட்சியும் எந்த பாதிப்புமில்லாமல் கடக்கிறது. கார்த்திக் பழனி ஒளிப்பதிவும், பிரவீன்கே.எல் படத்தொகுப்பும் மொத்த படத்துக்குமான ஆறுதல்.

மொத்தத்தில் இந்த வாரிசை கண்டு ரசிகர்கள் கொஞ்சலாமே தவிர, மற்றவர்கள் அஞ்சாமல் இருக்க முடியுமா என்பது கேள்வியே.

வாசிக்க > துணிவு Review: மாஸ், மெசேஜ், ஹெய்ஸ்ட்... ‘நிறைவு’ கிட்டியதா?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE