‘கடைசி விவசாயி’ பார்க்காத நாம் வெட்கித் தலைகுனிய வேண்டும்: மிஷ்கின் ஆதங்கம்

By செய்திப்பிரிவு

“இயக்குநர் மணிகண்டன் இயக்கிய ‘கடைசி விவசாயி’ படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஆனால், அதை காணத் தவறிய நாம் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டும்” என்று இயக்குநர் மிஷ்கின் ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.

இயக்குநர் ஓம்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வெள்ளிமலை’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினர்களாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் மிஷ்கின், பேரரசு, கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் திண்டுக்கல் ஐ.லியோனி கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் மிஷ்கின், “எளிமையிலிருந்து நாம் தள்ளிபோய் கொண்டியிருக்கிறோம். எளிமையான மனிதர்களை நாம் பார்க்க வேண்டும். இடையில் வந்த மிகச்சிறந்த படமான ‘கடைசி விவசாயி’ படத்தை நாம் பார்க்கவேயில்லை. அந்தப் படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதை காணத் தவறிய நாம் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

உலகத்திலேயே மிகச் சிறந்த படம் என்று ‘கடைசி விவசாயி’ படத்தை கூறுகின்றனர். படத்தின் இயக்குநர் மணிகண்டன் காட்டுக்குள் இருந்து அந்த வெயிலை பருகி படத்தை இயக்கியிருந்தார். மிகச் சிறந்த நடிகர் படத்தில் நடித்திருந்தார். அதை நாம் யாருமே பார்க்கவில்லை. அந்தப் படத்தை நாம் மிகப்பெரிய வெற்றிப்படமாக்கத் தவறிவிட்டோம்.

படக்குழுவினர் போட்ட காசை எடுத்துவிட்டார்கள். இருந்தாலும் நாம் அதை வெற்றிப் படமாக்கவில்லை என்பது எனக்கு மிகப்பெரிய வருத்தம். ரூ.500 கோடி, ரூ.400 கோடி எனும் ஓடும் படங்களின் நடுவே இந்தப் படத்திற்கு நாம் ரூ.30 கோடி கூட கொடுக்கவில்லை. ஒரு நல்ல படைப்பாளி நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்துக் கொண்டேயிருக்கிறான். அந்தப் படைப்பாளி தன் உதிரத்திலிருந்து படைப்பை உருவாக்குகிறான். அவன் நினைத்தால் பெரிய நடிகருக்கு கதை சொல்லி கோடிகளில் சம்பாதிக்க முடியும். ஆனால் மணிகண்டன் அப்படியானவர் அல்ல. சினிமாவை நேசிப்பவர். அவருக்கு சர்வதேச அங்கீகாரம் இன்று கிடைத்துள்ளது. நாம் அவரது படைப்பை கொண்டாடவில்லை” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE