அனல் மேல் பனித்துளியாய் வசீகரிக்கும் ஹாரிஸ் ஜெயராஜின் சாக்ஸபோன் இசை!

By குமார் துரைக்கண்ணு

இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த 'மின்னலே' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஹாரிஸ் ஜெயராஜ். அந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட். அந்த வருடத்தில் தமிழ்நாட்டின் பட்டித்தொட்டி, மூலைமுடுக்கு, சந்துபொந்து என எங்கு திரும்பினாலும் இந்தப் படத்தின் பாடல்கள் கேட்டுக்கொண்டே இருந்தது. அதிலும் வசீகரா பாடல் அது வெளியான நாள் தொடங்கி, இப்போதும்கூட இன்ஸ்டா ரீல்ஸ்களில் பதிவிட்டு இளம்பெண்கள் ரீமாசென்னாகவே மாறிவிடுவதை காணமுடிகிறது. அந்தளவுக்கு இப்பாடல் பெண்களின் வரவேற்பை பெற்ற பாடல்களில் ஒன்றாக நீடித்து வருகிறது.

இதனைத்தொடர்ந்து ஹாரிஸ் இசையமைத்த மஜ்னு, 12 B, சாமுராய், லேசா லேசா, சாமி, கோவில், காக்க காக்க, செல்லமே என தொட்டதெல்லாம் ஹிட்டாக தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளரானார் ஹாரிஸ் ஜெயராஜ். தொடர்ந்து அரசாட்சி, கஜினி, அருள், அந்நியன், உள்ளம் கேட்குமே, தொட்டி ஜெயா என அவர் இசையமைக்கும் படங்களின் பட்டியல் நீண்டது.

ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்களுக்கு தமிழக ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. பியானோ, கிடார், என பல்வேறு இசைக்கருவிகளை ஹாரிஸ் தனது பாடல்களில் பயன்படுத்தி வந்தாலும், Blowing Insstruments-களை குறிப்பாக சாக்ஸபோனை அவர் பயன்படுத்தியிருக்கும் விதம் அத்தனை அழகாக இருக்கும். குறிப்பாக, ஆல்டோ மற்றும் சுப்ரனோ சாக்ஸபோன்களை அவரது இசையில் வெளிவந்த பல சூப்பர் ஹிட் பாடல்களில் பயன்படுத்தி இருப்பார். அப்படி சாக்ஸபோன் இசைக்கருவி பயன்படுத்தப்பட்ட 10 பாடல்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

ஓ மாமா மாமா: இயக்குநர் கவுதம் வாசுதேவ் இயக்கத்தில் வெளிவந்த 'மின்னலே' திரைப்படத்தில் வரும் இந்தப் பாடலை கவிஞர் வாலி எழுதியிருப்பார். ஷங்கர் மகாதேவனும் , திப்புவும் இணைந்து பாடியிருப்பர். வெஸ்டர்ன் ஸ்டைல் பாடலான இதில் முதல் சரணத்துக்கு முன்வரும் இடையிசையில் சாக்ஸபோன் இசைக்கப்பட்டிருக்கும். சிறப்பு என்னவென்றால், கர்நாடிக் ஸ்டைலில் சாக்ஸபோன் இசை அமைக்கப்பட்டிருக்கும். வெஸ்டர்னிலிருந்து கர்நாடிக் வந்து மீண்டும் வெஸ்டர்னுக்கு திரும்பும் இடம் பலமுறை கேட்டாலும் சலிக்காது.

ஒரு புன்னகை பூவே: மறைந்த ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ஜீவா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் 12 B. இந்தப்படத்தில் வரும் ஒரு புன்னகை பூவே பாட்டின் முதல் மற்றும் இரண்டாவது சரணங்களுக்கு முன்வரும் இடையிசைகளில் சாக்ஸபோன் இசைக்கப்பட்டிருக்கும். Jazz மியூசிக்கில் தவிர்க்கமுடியாத இசைக்கருவி சாக்ஸபோன். அது வெஸ்டர்ன் ஸ்டைலில் வாசிக்கப்படும் போது கேட்கும் சுகமே தனி. அந்தவகையில், இந்தப்பாட்டில் ப்யூர் வெஸ்டர்ன் ஸ்டைலில் சுப்ரனோ சாக்ஸ் இசைக்கப்பட்டிருக்கும். அதுவும் அந்த முதல் சரணத்துக்கு முன்வரும் வாசிப்பு இருக்கே சான்ஸே இல்லை.

லேசா லேசா: இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் வந்த லேசா லேசா திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலை அனுராதா ஸ்ரீராம் டியிருப்பார். இப்பாடலின் முதல் சரணத்துக்கு முன்வரும் இடையிசையில் ஆல்டோ சாக்ஸ் இசையால் பாடல் கேட்பவர்களின் மனங்களை கொள்ளை கொண்டிருப்பார் ஹாரிஸ். அதோடு இரண்டாவது சரணம் முடிந்து, வரும் பல்லவியில் இரண்டு வரிகளைப் பாடி முடித்த கனத்தில் மிச்ச வாரிகளை சாக்ஸபோனில் வாசிக்கும் இடத்தில் புல்லரித்துப்போகும்.

என்னவோ என்னவோ: இயக்குநர் ஹரி இயக்கத்தில் வெளிவந்த சாமி திரைப்படத்தில் வரும் பாடல் இது. பாடலை ஹரிகரனும் மஹதியும் பாடியிருப்பர். ஒரு பாஃஸ்ட் டெம்போ சாங். இதில் எங்கு வந்தால் சரியாக இருக்கும் என பார்த்து சரியாக முதல் சரணம் முடிந்து, துண்டு பல்லவி பாடும்போது ஹரிகரன் பாடும் இரரண்டு வரிகளின் இடையில் புல்நுனி பனிப்போல் சாக்ஸபோன் பீஸை இணைத்து அப்ளாஸை அள்ளியிருப்பார் ஹாரிஸ்.

கண்ணும் கண்ணும் நோக்கியா: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான அந்நியன் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இப்பாடலின் முதல் சரணத்துக்கு முன்வரும் இடையிசையில் சாக்ஸபோன் இசைக்கப்பட்டிருக்கும். பாடலைப் பாடிய ஆன்ட்ரியா, லெஸ்லே, வசுந்தராதாஸ் ஆகியோரின் குரலுக்கு இணையாக குழைந்து செல்லும்படி இசையமைத்திருக்கும் விதம் இனிதாக இருக்கும்.

சுட்டும் விழி சுடரே: இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் வந்த கஜினி திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது. பாடலை ஸ்ரீராம் பார்த்தசாரதியும் பாம்பே ஜெயஸ்ரீயும் பாடியிருப்பர். பாடலின் இரண்டாவது சரணத்துக்கு முன்வரும் இடையிசை தீரா சுவை கொண்டது. அந்த இடம் வீணையில் தொடங்கும், அது முடியும் அந்த இடத்தின் சுருதியிலிருந்தே தொடங்கும் சாக்ஸபோன் இசையை கேட்க கேட்க மயக்கும் ரகம்.

மஞ்சள் வெயில் மாலையிலே: இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் வந்த பாடல் இது. இப்பாடலின் இரண்டாவது சரணத்துக்கு முன்வரும் இடையிசையில் சாக்ஸபோன் அவ்வளவு ரம்மியமாக, மெல்லிய டோனில் இசைக்கப்பட்டிருக்கும். ஹரிகரன், கமல் ஜோதிகா, நியூயார்க் எல்லாத்தையும் தாண்டி அந்த சாக்ஸபோன் நம்மை ஏதோ செய்யும்.

முன்தினம் பார்த்தேனே: இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் வந்த பாடல் இது. ரெட்ரோ டைப் பாடலான இதில் முதல் மற்றும் இரண்டாவது சரணத்துக்கு முன் சாக்ஸபோன் இசைக்கப்பட்டிருக்கும். அதிலும், முதல் சரணத்துக்கு முன் லெங்த்தி நோட் இசைக்கப்பட்டிருக்கும், அதை கேட்பது மனதுக்கு எப்போதுமே இதமளிக்கும்.

ஏனோ ஏனோ பனித்துளி: இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் வெளிவந்த ஆதவன் திரைப்படத்தில் இப்பாடல் வரும். பாடலின் முதல் சரணத்துக்கு முன்,ரொம்ப அழகான மெலோ கிளாசிக் டோனில் சாக்ஸபோன் வரும். அந்தப் பாடலுடன் சேர்ந்து அந்த சாக்ஸபோன் டோனைக் கேட்க சிறப்பாக இருக்கும்.

லோலிட்டா: இயக்குநர் பிரபுதேவா இயக்கத்தில் வெளிவந்த எங்கேயும் காதல் திரைப்படத்தில் வந்த பாடல் இது. பாடலின் இரண்டாவது சரணத்துக்கு முன்வரும் இடையிசையில் ஆர்ப்பரிக்கும் ஒரு ரிதத்துக்குப் பின்வரும் சாக்ஸபோன் இசை ஆர்ப்பரித்த அந்த ரிதத்தோடு நம் மனதையும் அமைதி கொள்ளச் செய்யும் வகையில் இசைக்கப்பட்டிருக்கும் .

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE