பொன்னியின் செல்வன் நம்பி கதாபாத்திரத்துக்காக எடிசன் விருது: நடிகர் ஜெயராம் பெருமிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: பொன்னியின் செல்வன் நம்பி கதாபாத்திரத்தில் நடித்ததற்காக `எடிசன் விருது' கிடைத்ததைப் பெருமையாகக் கருதுகிறேன் என சென்னையில் நேற்று நடைபெற்ற விழாவில் நடிகர் ஜெயராம் பெருமிதம் தெரிவித்தார்.

தமிழ் திரை நட்சத்திரங்கள் பங்கேற்ற 15-வது எடிசன் திரை விருதுகள் வழங்கும் விழா நந்தம்பாக்கம் தொழில் வர்த்தக மையத்தில் நேற்று நடைபெற்றது. `இந்து தமிழ் திசை' மற்றும் விஐடி பல்கலைக்கழகம், ஓட்டோ, ஹலோ எப்எம், இலங்கை தமிழ் நாளிதழான `வீரகேசரி' உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து இந்த விழாவை வழங்கின. எடிசன் விருதுகள் நிறுவனர் ஜெ.செல்வக்குமார் வரவேற்றார்.

இந்நிகழ்வில் இலங்கை வடக்குமாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன், மலேசிய துணைத் தூதர் சரவணக்குமார், இலங்கை முன்னாள் கல்வித் துறை அமைச்சர் வி.ராதாகிருஷ்ணன், மலேசிய முன்னாள் மனித ஆற்றல் துறை அமைச்சர் டத்தோ எம்.சரவணன், தாய்லாந்து துணைத் தூதர் லலானா ஜித்சத்தானனே, `இந்து தமிழ் திசை' வர்த்தகப் பிரிவு தலைவர் சங்கர் வி.சுப்ரமணியம், பொது மேலாளர் வி.சிவக்குமார், திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன் உட்படப் பலர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில், கடந்த 2022-ம்ஆண்டுக்கான சிறந்த கலைஇயக்குநர் விருது பொன்னியின் செல்வனுக்காக தோட்டாதரணிக்கும், பினக்கல் லீடர் ஆப் இந்தியன் சினிமா விருது அதே படத்துக்காக திரைப்பட இயக்குநர் மணிரத்னத்துக்கும், சிறந்த புதுமுக இயக்குநருக்கான விருதுடான் படத்துக்காக சிபி சக்கரவர்த்திக்கும், சிறந்த அறிமுக நடிகை விருது சிங்கப்பூர் ஷிவாஷினுக்கும், சிறந்த நடிகருக்கான விருது பொன்னியின் செல்வனுக்காக நடிகர் ஜெயராமுக்கும், சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது நடிகர் சூரிக்கும், சிறந்த பின்னணி பாடகருக்கான விருது வெந்து தணிந்ததுகாடு - மல்லிப்பூ பாடலுக்காக மதுஸ்ரீ-க்கும், சிறந்த பாடலாசிரியருக்கான விருது இளங்கோ கிருஷ்ணனுக்கும், சிறந்த குணச்சித்திர நடிகர் விருது சூரியவேலனுக்கும், சிறந்த ஓவர்சீஸ் நடிகருக்கான விருது புரவலனுக்கும் வழங்கப்பட்டது.

விழாவில் நடிகர் ஜெயராம் பேசுகையில், ``கடந்த 35 ஆண்டுகளாக பல்வேறு விருதுகளைப் பெறும் வல்லமையைக் கடவுள் எனக்குக் கொடுத்துள்ளார். ஆனால், பொன்னியின் செல்வன் படத்துக்காக பல்வேறு திரை ஜாம்பவான்களுடன் இணைந்து நடித்தேன். அதற்காக ஒன்றரை ஆண்டுகளாக இயக்குநர் மணிரத்னம் என்னை அழகாகச் செதுக்கி நம்பிஎன்ற கதாபாத்திரத்தை உருவாக்கினார். அந்த நம்பிக்காக இந்த ஆண்டின் தொடக்கத்தில் எடிசன் விருது பெற்றதை மிகப் பெருமையாகக் கருதுகிறேன்'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE