புகைப்பழக்கத்தை ஏன் கைவிட வேண்டும்? - வெற்றிமாறன் அனுபவப் பகிர்வு

By செய்திப்பிரிவு

சென்னை லயோலா கல்லூரியில் மாணவர்களிடையே உரையாற்றிய இயக்குநர் வெற்றிமாறன், “உங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்துங்கள். ஃபிட்னஸ் என்பது வெறும் ஜிம்முக்கு சென்று தசைகளை வலுவாக்குவது மட்டுமல்ல. இன்னும் சிலர் ஜிம்முக்கு செல்வார்கள். அதன்பிறகு வந்து புகைப்பிடிப்பார்கள்; அதனால் ஒரு பயனுமில்லை. குறும்படம் எடுக்கும் மாணவர்கள் புகை, மதுவுடன் தான் ஸ்கிரிப்ட் எழுதியிருப்பீர்கள் என்பது தெரியும். எல்லோரும் அப்படித்தான் எழுதியிருப்போம். ஒரு கட்டத்தில் அது ஈஸியாக இருக்கலாம்; ஆனால், அதன் பிறகு அது அப்படியிருக்காது.

நான் கல்லூரியில் படிக்கும்போது, ஒருநாளைக்கு 60 - 70 சிகரெட்டுகளை புகைப்பேன். என்னுடைய முதல் படம் எடுக்கும்போது ஒரு நாளைக்கு 170 - 180 சிகரெட்டுகளை புகைப்பேன். அப்போதுதான் நான் ஒன்றை உணர்ந்தேன். என்னால் என்னுடைய 100 சதவீதத்தை கொடுக்கமுடியவில்லை. என்னுடைய குரு பாலு மகேந்திரா ஒன்றை சொல்வார். ‘இயக்குநராக வேண்டுமென்றால் முதல் தகுதி என்ன?’ என்பது குறித்து சத்யஜித் ரேவிடம் கேட்டார்களாம். அதற்கு அவர், ‘ஒரு இடத்தில் உங்களால் 8 மணி நேரம் தொடர்ந்து நிற்க முடியும் என்றால் மற்ற திறமைகள் தானாக வரும்” என்றாராம். அதற்கு அர்த்தம் நீங்கள் உடல் ரீதியாக ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பது தான்.

என்னால் அப்படியில்லாமல் போகும்போது நான் என்னை மாற்ற நினைத்தேன். இசிஜி எடுத்துப் பார்த்தேன்; அதில் மாற்றம் இருந்தது. ஆகவே என் மருத்துவர் என்னை புகைப்பழக்கத்திலிருந்து விடுபட வலியுறுத்தினார். புகைப்பிடித்துக் கொண்டே அதிலிருந்து மீள்வது குறித்தெல்லாம் யோசித்திருக்கிறேன். பின்னர் முழுமையாக அதிலிருந்து மீண்டுவிட்டேன். உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள்” என்று பேசினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்னுடைய படங்களில் முடிந்த வரை மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளை தவிர்ப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE