அமெரிக்காவில் 98 வினாடிகளில் விற்றுத் தீர்ந்த ‘ஆர்ஆர்ஆர்’ டிக்கெட்டுகள்

By செய்திப்பிரிவு

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள ஐமேக்ஸ் திரையரங்கில் ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் டிக்கெட்டுகள் 98 வினாடிகளில் விற்று தீர்ந்துள்ளன.

கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி பான் இந்தியா முறையில் வெளியான படம் ‘ஆர்ஆர்ஆர்’. ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடித்திருந்த இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்திருந்தார். ஆலியா பட், அஜய் தேவ்கன், ஷ்ரேயா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் உலக அளவில் ரூ.1200 கோடி வசூலை ஈட்டி பெரும் சாதனை படைத்தது. மேலும், இப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருது இறுதிப் பரிந்துரைக்கான தெரிவிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், ஜனவரி 9-ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள உலகின் மிகப் பெரிய ஐமேக்ஸ் திரையரங்கில் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் திரையிடப்பட உள்ளது. இதில் இயக்குநர் ராஜமவுலி, நடிகர்கள் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், இசையமைப்பாளர் கீரவாணி உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். இதற்கான டிக்கெட்டுகள் வெறும் 98 வினாடிகளில் விற்றுத் தீர்ந்துவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘கோல்டன் குளோப்ஸ் 2023’ விருது வழங்கும் நிகழ்ச்சி ஜனவரி 11-ம் தேதி அமெரிக்காவில் நடைபெறுகிறது. விருது வழங்கும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஜனவரி 9-ம் தேதி ‘ஆர்ஆர்ஆர்’ படம் திரையிடப்பட உள்ளது. அதற்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்திருப்பது கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE