‘லவ் டுடே’ படத்தின் ரீமேக் உரிமையை நான் வாங்கவில்லை - போனி கபூர் விளக்கம்

By செய்திப்பிரிவு

“‘லவ் டுடே’ படத்தின் இந்தி ரீமேக் உரிமையை நான் வாங்கவில்லை” என தயாரிப்பாளர் போனிகபூர் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில், பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான படம் ‘கோமாளி’. 90-ஸ் கிட்ஸின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பிரதீப் ரங்கநாதன் இயக்கிய 'லவ் டுடே' படம் ரசிகர்களிடையே பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றது. ரூ.10 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகளவில் ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது.

படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு 'லவ் டுடே' படத்தை இந்தியிலும் ரீமேக் செய்ய உள்ளனர் என்றும் இதன் இந்தி பதிப்பில் கதாநாயகனாக நடிக்க வருண் தவானிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. மேலும் இந்தி பதிப்பையும் பிரதீப் ரங்கநாதனே இயக்க, அஜித்தின் துணிவு படத்தை தயாரித்து வரும் போனி கபூர் இப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் இந்தத் தகவலை மறுத்துள்ள தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில், “லவ் டுடே படத்தின் ரீமேக் உரிமையை நான் வாங்கவில்லை என்பதை நினைவில் கொள்ளவும். சமூக வலைதளங்களில் வரும் இதுபோன்ற செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை மற்றும் போலியானவை” என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE