சர்க்கஸ்: 15 ஆண்டுகளுக்குப் பிறகு ரோஹித் ஷெட்டியின் மோசமான ஓப்பனிங்!

By செய்திப்பிரிவு

பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டியின் இயக்கத்தில் வெளியான படங்களில், கடந்த 15 ஆண்டுகளுக்குப்பிறகு குறைந்தபட்ச ஓப்பனிங்கை பெற்றுள்ள படமாக மாறியிருக்கிறது ‘சர்க்கஸ்’.

‘சிங்கம்’, ‘போல் பச்சன்’, ‘சென்னை எக்ஸ்பிரஸ்’, ‘சிங்கம் ரிட்டர்ன்ஸ்’, ‘தில்வாலே’, ‘சூரியவம்ஷி’ உள்ளிட்ட படங்கள் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் ரோஹித் ஷெட்டி. அவரது இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் நேற்று (டிசம்பர் 23) திரையரங்குகளில் வெளியான படம் ‘சர்க்கஸ்’. இந்தப் படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அவருடன் ஜாக்லீன் பெர்னான்டஸ், வருண் ஷர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

காமெடியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம் வில்லியம் ஷேக்ஸ்பியரின் ‘தி காமெடி ஆஃப் எரர்’ நாடகத்தை அடிப்படையாக கொண்டது. ரிலையன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. ரூ.100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான இந்தப்படம் முதல் நாள் வசூலாக நேற்று வெறும் ரூ.6.5 கோடியை மட்டுமே வசூலித்து ஏமாற்றத்தை அளித்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் இயக்குநர் ரோஹித் ஷெட்டியின் மிக மோசமான ஓப்பனிங் கொண்ட படமாக ‘சர்கஸ்’ மாறியுள்ளது.

கடைசியாக கடந்த 2008-ம் ஆண்டு ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் அஜய் தேவ்கன், அர்ஷத் வர்சி, இர்ஃபான் நடித்த நகைச்சுவை திரைப்படமான ‘சண்டே’ முதல் நாளில் ரூ 2.31 கோடிகளை மட்டுமே வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதர படங்கள் அனைத்துமே கவனத்துக்குரிய ஓப்பனிங்கை பெற்றிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE