‘‘படத்தை திரும்பப் பெற அச்சுறுத்தப்பட்டேன்’’ - ‘செல்லோ ஷோ’ இயக்குநர்

By செய்திப்பிரிவு

‘‘ஆஸ்கர் விருதுக்கு அனுப்பிய படத்தை திரும்ப பெறுங்கள்; இல்லாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்று என் படக்குழு மொத்தமும் எச்சரிக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டனர்” என்று ‘செல்லோ ஷோ’ பட இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்கர் விருதின் இறுதிப் பரிந்துரைக்கான தெரிவுப் பட்டியலில் சிறந்த வெளிநாட்டு மொழி படங்களுக்கான பிரிவில் பான் நலினின் ‘செல்லோ ஷோ’ படம் இடம்பிடித்துள்ளது. கவனத்துக்குரிய இந்த எல்லையை அடைந்துள்ள வேளையில், தனது கசப்பான அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார் ‘செல்லோ ஷோ’ படத்தின் இயக்குநர் பான் நலின்.

இது தொடர்பாக ‘மிட் டே’ என்ற செய்தித் தளத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “எங்கள் படம் ஆஸ்கர் விருது போட்டிக்கு தேர்வானதற்குப் பிறகு நடந்த சைபர் தாக்குதல்தான் மிக மோசமானது. ‘ஆஸ்கர் விருதுக்கு அனுப்பிய படத்தை திரும்ப பெறுங்கள்; இல்லாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என்று என் படக்குழு மொத்தமும் எச்சரிக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டனர். ஆஸ்கர் விருது போட்டிக்கு அனுப்பிய மகிழ்ச்சியை கொண்டாடுவதற்கு பதிலாக நாங்கள் அவர்களிடம் சண்டையிட வேண்டிய சூழல்தான் இருந்தது” என்றார்.

ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பாக அதிகாரபூர்வமாக ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ தேர்வு செய்யப்படுவதற்கு மாற்றாக ‘செல்லோ ஷோ’ படத்தின் தேர்வு பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது குறித்து பான் நலினிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘படத்தைப் பார்த்த பிறகு பார்வையாளர்களின் எண்ணம் முற்றிலும் மாறிவிட்டது. இந்திய ரசிகர்கள், விமர்சகர்கள், திரையுலகிலிருப்பவர்கள் இறுதியாக படத்தைப் பார்த்தபோது அவர்களால் படத்தை நேசிக்காமல் இருக்க முடியவில்லை. அதுதான் சினிமாவின் வெற்றி” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE