ஆஸ்கர் பரிந்துரைக்கான தெரிவுப் பட்டியலில் ‘செல்லோ ஷோ’, ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல்

By செய்திப்பிரிவு

ஆஸ்கர் பரிந்துரைக்கான தெரிவுப் பட்டியலில் (short list) இந்தியாவில் இருந்து சிறந்த வெளிநாட்டு மொழிப் பிரிவில் குஜராத்திப் படமான ‘செல்லோ ஷோ’வும், ஒரிஜினல் பாடல் பிரிவில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலும் இடம்பிடித்துள்ளன.

2023-ம் ஆண்டு மார்ச் மாதம் 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பாடல் உள்பட பல்வேறு பிரிவுகளில் தேர்வுக்கு அனுப்பப்பட்ட படங்களை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது இறுதிப் பரிந்துரைகளுக்கான 15 போட்டித் தெரிவுகளில் இடம்பெற்றுள்ள ஷார்ட் லிஸ்ட் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தத் தெரிவுப் பட்டியலில் சிறந்த வெளிநாட்டு மொழிப் படம் பிரிவில் இந்தியா சார்பில் அதிகாரபூர்வமாக அனுப்பப்பட்ட குஜராத்தித் திரைப்படமான ‘செல்லோ ஷோ’ (Chhello Show) இடம்பெற்றுள்ளது. மேலும் தனிப்பட்ட முறையில் அனுப்பப்பட்ட ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் ‘நாட்டுக் குத்து’ பாடல் ஒரிஜினல் சாங் பிரிவில் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி 12 முதல் 17 வரை, இறுதிப் பரிந்துரைக்களுக்கான நடைமுறைகள் நடைபெறும். அதைத் தொடர்ந்து ஜனவரி 24-ம் தேதி நாமினேஷன் பட்டியல் வெளியாகும் எனவும், மார்ச் 12-ம் தேதி விருதுகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE