திரைப் பார்வை | அவதார்: தி வே ஆஃப் வாட்டர் - சூழலியல் அற சிந்தனையை விதைக்கும் சுவாரசிய சினிமா

By செய்திப்பிரிவு

பூமியில் முளைக்கும் சாதாரண காளான் முதல் நூறு வயது மரம் வரை நுட்பமான வலைத்தொடர்பைக் கொண்டுள்ளது. சிறு குன்றுகளும், பெரு மலைகளும்கூட இந்த வலைத்தொடர்பில் சேரும்‌ என்கிறார்கள் சூழலியல் அறிஞர்கள். இந்த வலைத்தொடர்பில் ஒரு அங்கம்தான் மனிதர்களும். ஆம் ஆற்றலின் வெவ்வேறு வடிவங்கள்தான் பொருட்கள் எனும் போது - அந்த ஆற்றல்களுக்கிடையே வலைத்தொடர்பு இருக்கவே செய்யும்!

இயற்கை வலைப்பின்னலை தொந்தரவு செய்யாத அளவில் அதனை இடையீடு செய்து தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பழங்குடிகள். அவர்களை வேட்டையாடி, லாபத்திற்காக இயற்கையை சுரண்டுகிறார்கள் சில கார்ப்பரேட் நிறுவனங்கள். இந்த அரசியலை மிகைப் புனைவுக் களத்தில் அபாரமாக திரையாக்கம் செய்த மேஜிக் அவதார் முதல் பாகம்!

நேற்று (டிசம்பர் 16) வெளியாகியிருக்கும் இரண்டாம் பாகமான ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் சமுத்திர வலைப்பின்னலை திரையாக்கம் செய்கிறது. நிலப்பரப்பை விட சமுத்திரம் படைப்புகள் நிறைய வாய்க்கப்பட்ட பிரதேசம். இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் மற்றும் குழுவினரின் அழகிய கற்பனையில் உருவாகி இருக்கும்.. 'பண்டோரா நீர் உலகத்தை' திரையில் தரிசிப்பது நம் வாழ்நாளின் வரம் என்று சொன்னால் மிகையாகாது.

இதன் கதை வழக்கமான டெம்ப்ளேட்தான். ஜேக் சுல்லியைத் தேடி வருகிறான் பழைய வில்லனின் அவதார் க்ளோனிங். தன்னால் காட்டுக்கு சேதம் ஏற்படக் கூடாதென தப்பித்து கடல் பிரதேசத்தில் அடைக்கலமாகிறது ஜேக் சுல்லி குடும்பம். பின்னர் நடக்கும் போரும்- முடிவும். ஒரு ஜேம்ஸ் கேமரூன் அளவிலான கதை இல்லை என்றும் தோன்றும். வில்லன் போதிய வில்லத்தனத்தில் இல்லை என்றும் தோன்றும்.

ஆனால், படைப்பாளி இப்படத்தில் ஜெயிக்கும் இடம் கதையின் புதுமையிலோ, திருப்பங்களிலோ அல்ல. மாறாக, அவர் சிருஷ்டித்திருக்கும் அந்த 'பண்டோரா நீர் உலகு' நமக்கு வழங்கும் வாழ்நாளின் ஒரு சிறந்த அனுபவத்தில் உறைந்திருக்கிறது ‘அவதார் 2’ வின் வெற்றி.

அந்த அனுபவம் என்பது காட்சி அழகியலினால் மட்டும் நிகழ்கிறதா.? அதுதான் இல்லை. பண்டோராவின் காடு வாழ் மனிதர்கள் சமுத்திரத்தின் அம்சங்களோடு பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளுதலும், அதன் வழியே இயற்கை வலைப்பின்னல் எனும் இறையை அடையும் உணர்வை நமக்கு ஏற்படுத்துவதும், நுணுக்கமான ஆன பல கவிதைத் தருணங்களுமாக 'பண்டோரா நீர் உலகு அனுபவம்' திரைக்கதை வழி நமக்கு ஏற்படுகிறது.

ஜேக்கின் மகள் கிரி சமுத்திரத்தின் மின்மினி பூச்சி போன்ற உயிரினத்தின் வழி 'எய்வாவை' தரிசிக்க முற்படுவது. சமுத்திரத்திற்குள் முதன்முதல் பிரவேசிக்கும் ஜேக்கின் பிள்ளைகள் ஒரு குளத்தில் குதித்த குதூகலத்தோடு.. சமுத்திரத்தில் பயிற்சி அடைவது. ஜேக்கின் மகனுக்கும் - ராட்சத மீனுக்கும் ஏற்படும் பந்தம்.! எய்வாவின் வழியே நிகழ் காலமும் நினைவாகிப் போன காலமும் சந்திப்பது. இப்படி போகிற போக்கில் பல கவிதைத் தருணங்கள் திரையில் படர்கின்றன.

ஒவ்வொரு காட்சியிலும் இருக்கும் நுண் விவரங்கள் குறித்து மிக நீண்ட நெடிய கட்டுரை தான் எழுத வேண்டும். உதாரணத்திற்கு ஒன்றே ஒன்று - பண்டோரா ஒரு துணைக்கோள். நம் நிலவைப் போல. தொலைதூரக் காட்சிகளில் பின்னே வானத்தில் தெரியும் கோள்தான் அதன் மையக்கோள். நம் பூமி போல. சூரியன் ( அதன் நட்சத்திரம்) மறையும் பொழுதில் அந்தக் கோளுக்கு பின்னே மறைகிறது சூரியன். என்ன துல்லியமான நுண்விவரம்!!! அதுதான் ஜேம்ஸ் கேமரூன்.

ஒரு அபாரமான உலகை சிருஷ்டித்து.. மோஷன் கேப்ச்சர் தொழில்நுட்பம் வழியாக நடக்கும் காட்சிகளில்‌‌.‌. காட்சி நிகழ்வில் தர்க்கப் பிழையோ, காட்சி உருவாக்கத்தில் ரிதமிக் பிழையோ துளி கூட இல்லை. திரையில் நிகழப்போகும் தன் காட்சிகள் குறித்த 101% தீர்க்கப் பார்வை இருந்தால் தான் இந்த துல்லியத்தைக் கொண்டு வர முடியும்.! ஆம் ஜேம்ஸ் கேமரூன் மாஸ்டர்களின் மாஸ்டர்.

ஆன்மீகம், பேராற்றல், இறை இந்த கருதுகோள்களை இயற்கை நியதிக்கு மீறின ஆற்றல் என நான் எப்போதும் புரிந்துக் கொள்வதில்லை. அதே சமயம் இயற்கையின் மொழிகளைப் புரிந்துக் கொள்ள முடியாத, சூழலியல் பார்வையையே பிற்போக்கு என்று முத்திரை குத்தும் வறட்டு நவீனவாதமானது... உண்மையில் மிக மோசமான, வர்ணாசிரமத்திற்கு நிகரான மானுட விரோத சிந்தனை. சுரண்டல்- லாப வெறி ஆதரவு சிந்தனை.

ஆன்மீகம், பேராற்றல், இறை என்பது இயற்கையின் இந்த அதி நுட்பமான வலைப்பின்னலே.! ஒரே ஆற்றலின் வேறுபட்ட பொருள் வடிவங்களும் - அவற்றிற்கிடையேயான சமநிலையுமே இந்த வலைப்பின்னல்.!

அந்த வலைப் பின்னலுக்கிடையே நிகழும் நுண்மையான மொழிகளினூடே இயற்கையின் அறத்தைப் புரிந்துக் கொள்ளுதலே பண்டோராவின் 'எய்வா'.! அந்த அறம் சுரண்டலுக்கும் லாப வெறிக்கும் எதிரானது. 2015 சென்னை பெருவெள்ளம் கற்றுக் கொடுத்த பாடமும் அதுவே‌.

இயற்கையின் மொழி நுண்மையானது - கலையின் மொழி நுண்மையானது‌. அந்த நுண்மையின் அதி பிரம்மாண்டமே ‘அவதார் 2’. ✨

அவசியம் குழந்தைகளுடன் நல்ல திரையரங்கில் சென்று பாருங்கள்‌.! வாழ்நாளின் மிகச்சிறந்த, சுவாரசியமான ஒரு கலை- அனுபவத்தை உறுதியாகப் பெறுவீர்கள். வளரும் தலைமுறையினர் அற்புதமான திரை அனுபவத்தை பெறுவதோடு சூழலியல் குறித்த அற சிந்தனையையும் பெறுவார்கள்.!

- அருண் பகத் | கட்டுரையாளர் - சுயாதீன திரைப் படைப்பாளி, ‘ஏகலைவன்’ உள்ளிட்ட குறும்படங்களின் இயக்குநர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE